Skip to main content

யானை மரம்


கடந்த மாதம் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த ஏழு தீவுகளில் ஒன்றான நெடுந்தீவுப் பகுதிக்குப் போயிருந்தேன். இந்தத் தீவு யாழ்ப்பாண நகரிலிருந்து மிகவும் தொலைவில் அமைந்திருக்கிறது. 'குறிகட்டுவான்' எனும் பகுதியிலிருந்து கடல் வழியாக நீண்டதூரம் பயணிக்கவேண்டும். இது இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து 38 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது.

கடலும் கடல் சார்ந்த இடமுமாகையால் அங்கு வாழ்கிற  மக்கள் சுவர்களை அமைப்பதற்குக்கூட பவளப்பாறைகளைப் பயன்படுத்துகின்றனர். அங்கு இடிந்த நிலையில்  காணப்படும்  டச்சுக்காரர்களின் கோட்டைகூட பவளப்பாறைகளால் அமைக்கப்பட்டிருக்கிறது. 

இந்தத் தீவில்  பல நூற்றாண்டுகள் பழமையான மிகப்பெரிய பெருக்கு மரமொன்று நிற்கிறது. இதை "யானை மரம்" என்றும் அழைப்பார்கள். 'Adansonia' எனப்படுகிற தாவரவியல் பேரினத்தைச் சார்ந்தது. இந்தத் தாவரவியல் இனத்தைச் சார்ந்த மரங்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேலே  வாழும். இந்த மரத்துக்கென்று சிறப்பான தன்மை இருக்கிறது. இந்த மரம் மழை பெய்யும் பொழுது ஏராளமான நீரை தனது தண்டுப் பகுதியில் சேமித்து வைத்துக்கொள்ளும். கிட்டத்தட்ட 120,000 லீட்டர் நீரை சேமித்து வைத்துக்கொள்ளக்கூடியது. வெளித்தோற்றத்துக்கு பட்டை உறுதியாக இருந்தாலும் உள்ளே பஞ்சு போல மெதுமெதுன்னு இருக்கும். இந்த இயல்பால் அதிகளவு நீரை சேமித்து வைத்துக்கொள்கிறது. அதிக வரட்சியான காலங்களிலும் தாக்குப்பிடிக்கும். அப்படியான காலங்களில் இந்த மரம் அதிகமாக யானையின் தாக்குதலுக்கு உள்ளாவதாகச் சொல்லப்படுகிறது. யானை ஒரு மிகப்பெரிய துளையிட்டு பட்டையை உரித்து நீரை எடுத்துக்கொள்ளும். இப்போதும் பத்துப் பேர் உள்ளே நுழையக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய துளை காணப்படுகிறது. ஆபிரிக்கக் காட்டுப் பகுதியில் யானைக்கும் இந்த மரத்துக்கும் இடையில்  போரே நடக்கும் என்பார்கள்.  

இந்த மரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டபோது  ஒரு குறுந்தொகைப் பாடல் நினைவுக்கு வந்தது.

நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி அவர்சென்ற ஆறே

"தோழி, உன் காதலன் உன்மேல மிகுந்த அன்புடையவர். நீர் இல்லாத பாலை நிலத்துல தன் பெண் யானையின் பசியைப் போக்க ஆண் யானை என்ன செய்யும் தெரியுமா? பெரிய துதிக்கை கொண்டு யாமரத்தைத் துளைசெய்து, சிரமப்பட்டுப் பட்டையை உரிச்சு, அதுலருந்து வர்ற தண்ணிய தன்னோடை பெண் யானைக்குக் கொடுக்கும். இதை அவர் போற வழியில் பார்ப்பார். அப்போ உன்னையும் பாதுகாக்கணுங்கிற நெனப்பு அவருக்கு வரும். அப்போ திரும்பி வந்திடுவார். கவலைப்படாதே"ன்னு தலைவிக்கு ஆறுதல் சொல்வதாக அந்தப் பாடல் அமைகிறது.ஆனால், இது யாமரம் கிடையாது. யாமரம் போலவே இதன் உட்புறம் நீர்த்தன்மை மிக்கது. ஆகவே யானை உரித்து உண்ணும் . இதன் பழம் மருத்துவக்குணம் மிக்கது.
இந்தப் பெருக்கு மரம் பெரும்பாலும் ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா போன்ற பிரதேசங்களில் காணப்படுகிறது. இந்த நில அமைப்புகள் எல்லாம் ஒருகாலத்தில் ஒன்றாக இணைந்து இருந்ததற்கு இதுவும் ஒரு சான்று என்பது சில ஆய்வாளர்கள் வெளியிட்ட கருத்து. ஆனால், "இந்த மரமானது ஏழாம் நூற்றாண்டு அளவில் அரேபியர்களால் கொண்டுவரப்பட்டது என நம்பப்படுகிறது" என்று பதிவு செய்திருக்கிறார்கள். இவை இந்த நில அமைப்புகளில் இயல்பாகவே வளரக்கூடியவை என்பதால் இந்தச் செய்தி ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது.

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...