அகநானூற்றிலே 58வது பாடல் காத்திருத்தலின் அழகியலையும் காமத்தையும் நயமாகச் சொல்லுகிறது. சங்கப் பாடல்களிலே இரவில் காதலனும் காதலியும் களவில் சந்திப்பது வழக்கம் அல்லவா. அதேபோல இங்கே தலைவனுக்காகத் தலைவி காத்திருக்கிறாள். வாட்டும் குளிரில் தனிமையில் காத்திருக்கிறாள். எல்லோரும் உறங்கும் இரவில் தலைவன் வருகிறான். அவன் வந்ததும் மின்னும் வளையணிந்த தன் கைகளால் அவன் முதுகினைச் சுற்றி வளைத்துப் பற்றிக்கொண்டு இறுக்குகிறாள். ஒரு மெல்லிய அணைப்பு. தமிழிலே 'ஞெமுங்க' என்றொரு அழகான சொல் இருக்கிறது. இறுக்குதல் அல்லது அழுத்துதல் என்று பொருள். ஆனால், இது காதல்கொண்டோரின் நெருக்கம். மிகவும் மென்மையான இறுக்கம். இந்தச் சொல்லை உச்சரிக்கும்போதே ஒருவித மென்மை வந்து ஒட்டிக்கொள்கிறது அல்லவா!
"வனைந்து வரல் இளமுலை ஞெமுங்கப் பல் ஊழ்
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற"
மலர்களில் பேரின்பம் வேர்பிடிக்க தென்றல்போலொரு தீண்டல்தானே வேண்டும். தன் மார்புகளை அவன் மார்போடு மெல்ல அழுத்தி அணைக்கிறாள். அணைப்பின்போது தன் துயரமெல்லாம் கரையவேண்டும் என எண்ணுபவள் பெண். அதேநேரம், அணைக்க எரிகிற தீயல்லவா காதல்! வனையப்பட்டது போல இருக்கிற இளைய நகில்கள்(மார்பு) அழுந்தும்படி அவனைப் பலமுறை தழுவுகிறாள். இருவரும் விட்டுப் பிரிய எத்தனிக்கும் போதெல்லாம் இழுத்துத் தழுவிக்கொள்கிறாள். அவனைத் திரும்பத் திரும்ப தழுவி மகிழ்கிறாள். 'பல்லூழ்' என்றால் பலமுறை. சிநேகிதனே பாடலில் "இதே அழுத்தம். இதே அணைப்பு. வாழ்வின் எல்லை வரை வேண்டும்" என்று வைரமுத்து எழுதியிருப்பார். ஒவ்வொருமுறை நீ என்னைத் தழுவும்போதும் என்மீதான காதல் புதிதாய் அதே இறுக்கத்தோடு இருக்கவேண்டும். உன் அணைப்பு நெகிழ்ந்தால் நான் துயருறுவேன் என்பதுதான் அதன் பொருள். ஆனா இங்கே அணைக்கும்போது பிரிவினை எண்ணியே இறுக்கி அணைத்துக்கொள்கிறார்கள். அதனால் கொஞ்சம் இறுக்கமும் இருக்கும். ஒவ்வொருமுறை தழுவும்போதும் இறுக்கம் அதிகரிக்கும். அப்படித் தழுவி மகிழும்போது ஒரு விடயம் சொல்லுகிறாள்.
"உங்களைத் தழுவி மகிழ்வதிலும் பார்க்க இன்பம் எது தெரியுமா? உங்களுக்காகக் காத்திருக்கிறதுதான். நீங்க வருவீங்கங்கிற நம்பிக்கையோடு பார்த்து உயிர் பூத்திருப்பேன். காத்திருப்பு எனக்குக் கவலையா இருந்தாலும் அந்த எதிர்பார்ப்பு அழகா இருக்கும். நீங்க வந்ததும் உங்களோடான பொழுதை எப்படிக் கழிக்கப்போகிறேன்ன்னு எண்ணியே மகிழ்வேன். ஆனா உங்களைக் கட்டிக்கும்போது என்ன பிரச்சனைன்னா நீங்க எப்போ பிரிந்துபோவீங்கனு யோசிக்க ஆரம்பிப்பேன். அப்பிடி யோசிச்சா கவலையா இருக்கும்." என்று சொல்கிறாள். "காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா" என்பதற்கு இதைவிட உளவியல் ஆழம் சொல்ல முடியாது.
முதல்வன் படத்திலே இடம்பெற்ற "குறுக்குச் சிறுத்தவளே" என்கிற பாடல் ஆரம்பிக்க முன்னர் நிகழ்கிற காட்சிகள் அழகு. சங்கரின் பழைய பாடல் காட்சியமைப்புகளில் இந்த அழகியல் இருக்கும். ஏற்கனவே "கப்பலேறிப் போயாச்சு" என்கிற பாடலைப் பற்றி எழுதியிருக்கிறேன். சங்ககாலத் தலைவனும் தலைவியும்போல முதல்வனும் தேன்மொழியும் ரகசியமாகச் சந்தித்துக்கொள்கிறார்கள். அப்போது தேன்மொழி பேசுகிறாள். "எல்லோரும் நெல் கொடுத்து உன்னை சாமி உசரத்துக்குக் கொண்டுபோயிட்டாங்க. அதையும் மீறி உனக்குக் கொடுக்க என்கிட்டே என்ன இருக்கு"னு அவள் தன்னையே அளிக்க முன்வருகிறாள். இருவரும் அணைத்து மகிழும்போது அந்தப் பாடல் ஆரம்பமாகும். "ஒருதடவை இழுத்து அணைச்சபடி உயிர் மூச்சை நிறுத்து கண்மணியே... உம் முதுகைத் துளைச்சு வெளியேற இன்னும் கொஞ்சம் இறுக்கு என்னவனே" என்கிற இந்த வரிகள் அந்தச் சந்திப்பினையும் காதலையும் நயமாகச் சொல்லும் வரிகள்.
திரைப்படத்தின் கதையையும் காட்சியமைப்பின் அழகையும் உள்வாங்கிப் பாடல்கள் எழுதுபவர் வைரமுத்து என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
Comments