Skip to main content

முத்தாடு: முத்த இலக்கணம்





கவிஞர் வைரமுத்து எழுதிய "சுத்தி சுத்தி வந்தீக" என்கிற பாடல் காதலோடு இயைந்த காமத்தை அழகியலாக உரைக்கும். "முத்தாடும் ஆசை முத்திப்போக" என்றுவிட்டு, எங்கெல்லாம் முத்தமிட்டுக்கொள்வோம் என, அன்பானவர்கள் உரையாடிக்கொள்வதுபோல  எழுதியிருப்பார்.

என் காது கடிக்கும் பல்லுக்கு 
காயம் கொடுக்கும் வளைவிக்கு 
மார்பு மிதிக்கும் காலுக்கு 
முத்தம் தருவேன்  

மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தருவது என்பது காதலைத் தொழும் வகையைச் சார்ந்தது. "உன் உடல் மீதும், உன் உயிர் மீதும் மரியாதை வைத்து உன்னைத் தொழுகிறேன். இத்தனை காலமும் உன்னைச் சுமந்த பாதங்கள் மீது எனக்குக் காதல்." என்று சொல்லாமல் சொல்வதுதான் பாத முத்தம். ஆனால், காது கடிக்கும் பற்களுக்கு ஏன் முத்தம் தரவேண்டும்! வெறுமனே, இதழ்கள் உரசிக்கொள்வது மட்டுமே  முத்தத்திற்கு இலக்கணம் ஆகாது என்கிறது நம் இலக்கியங்கள்.

இலக்கியம் கூறும் முத்தத்திலேயே பலவகை உண்டு. "சிவந்த உன் கடைக்கண் பார்வையையும் உன் கூரிய பற்களிலே ஊறும் நீரினையும் சுவைக்காமல் உன்னுடைய அன்புக்குரியவனால் இருக்க முடியாது. விரைவில் உன்னைத் தேடி வருவான்" என்று தோழி தலைவிக்கு ஆறுதல் சொல்வதாக ஒரு அகநானூற்றுப் பாடல் சொல்கிறது.

"கடை சிவந்து ஐய அமர்த்த உண்கண் நின் வை ஏர் வால் எயிறு ஊறிய நீர்"

இதையே வள்ளுவன், "பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்" என்று சொல்லுகிறார். அதாவது, செல்ல மொழி பேசுபவளின் பற்களில் ஊறிய நீரின் சுவை, தேனோடு பால் கலந்தாற்போல இருக்கும் என்கிறார். அவள் உச்சரிக்கும் மொழியை உண்பது போலல்லவா ஆழமான முத்தம் இது. முத்தமென்பது உயிர் உண்ணவேண்டும். உயிர்க் காதல் இல்லையென்றால் இந்த ஆழம் சாத்தியமாகாது. "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி" என்கிற படத்தில் ஒரு பாடல் இந்தக் குறளோடு ஆரம்பமாகும்.

பற்களில் ஊறிய நீரினை உண்பது பற்றி மட்டும் இலக்கியம் சொல்லவில்லை. பற்களையே காதலர்கள் முத்தமிட்டுக்கொள்வார்கள் என்கிறது. நற்றிணையில் ஒரு பாடலில், "நின் கூர் எயிறு உண்கு" என்கிறான் சங்கத் தலைவன். "நீ இன்று காவல் காப்பதற்கு தினைப்புனத்திற்கு வருவாய் தானே? நானும் அங்கே வருகிறேன். இருவரும் சிரித்து விளையாடி காதல் கொள்ளலாம். நீ வருவதை உறுதி செய்து அந்த நற்செய்தியை நீ எனக்குச் சொன்னால் உன் பற்களில் முத்தம் கொடுத்து, இதழ்களால் சுவைப்பேன் பெண்ணே" என்கிறான். முத்து இடையில் உருள்வது எப்படி இருக்குமோ அதுபோல பற்களை மென்மையாகச் சுவைப்பது இன்பம் தரும்.

இதைப் படிக்கும்போது, "ஒல்லிக்குச்சி உடம்புக்காரி"யில் வருகிற, "வேணாம் இனி வாய்பேச்சு. வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம். பற்களே முத்தாய் மாறலாம்" என்கிற வைரமுத்துவின் வரிகள் நினைவு வரக்கூடும்.

மேலும், " மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்செவ்வி தலைப்படு வார்." என்கிற வள்ளுவன் வரிகளை இங்கே நினைவுபடுத்த வேண்டும். காதல் இன்பம் மலரைவிடவும் மென்மையானது. அதனை உணர்ந்து அதன் நற்பயனை அனுபவிக்கக் கூடியவர்கள் சிலரே" என்பதே அதன் பொருள்.

Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...