Skip to main content

இறைவி 2 - ஆய்த எழுத்து


இறைவி திரைப்படம்  பற்றிய எனது முன்னைய பார்வையை மணிரத்னத்தின் திரைப்படத்தில் வருகிற பெண்  கதாப்பாத்திரங்களோடு  ஒப்பிட்டு எழுதியிருந்தேன். மணிரத்னத்தின் படங்களில் வரும் பெண்கள் இயல்பாகவே பெறுமதியானவர்கள் என்றும்  எழுதியிருந்தேன். அதற்கு எதிர்வினையாக ஒருசில கருத்துகள் வந்தது. 'இறைவி' பெண்களை முற்போக்கானவர்களாகக் காட்டும் திரைப்படமல்ல, மாறாக ஆண்களை பிற்போக்கானவர்கள் என்றும் ஆணாதிக்கச் சிந்தனை உள்ளவர்கள் என்றும் காட்டும் திரைப்படம் என்று சொல்லியிருந்தார்கள். அவர்களின் நியாயப்படுத்தலில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆனால் இந்தப் படம் பெண்களின் பெருமை பேசுகிறேன் என்று ஆண்களை நியாயப்படுத்தி இருக்கிறதென்பது சில விமர்சகர்கள் கருத்து.  இதுவரை, விஜய் சேதுபதியின் போக்கையே மாற்றிவிடும் மலர்விழி கதாப்பாத்திரம் சொல்லவரும் காமம்-காதல் முரண்பாட்டை யாரும் சரியென்று சொல்லவில்லை. திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் நாங்கள் சேர்ந்து வாழலாம் என்றாவது கேட்டிருக்கலாம். இறைவி விமர்சனத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா கேட்டதுபோல எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம்!

கார்த்திக் சுப்புராஜின்  இறைவி  திரைப்படத்தை ஏன் மணிரத்னம் படங்களோடு ஒப்பிடவேண்டும் என்கிற கேள்வி புரிகிறது. தமிழ்த்திரையில் எல்லாத் திரைப்படங்களிலும் பெண்களுக்குச்  சமபங்கு கொடுக்கும் இயக்குனர்களுள் மணிரத்னமும் ஒருவர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. எல்லாத் திரைப்படங்களிலும் பெண்களை வெறும் காட்சிப்பொருளாகப்  பாவித்துவிட்டு ஒரு படத்தில் பெண்ணுரிமை பேசும் தன்மை அவர் படங்களில் கிடையாது. திரைப்படம் முழுதும் பெண்களை அடிமைப்படுத்தும் காட்சிகளை வைத்துவிட்டு ஒரு அம்மா பாடலில் பெண்ணுரிமை பேசிவிட்டதாக நினைக்கும் கதாநாயகர்களின் பக்தர்கள்தான் அதிகம். தமிழ்த் திரையில்  யாராவது பெண்ணுரிமை பேசுகிறார்கள் என்றால் பாலச்சந்தர், மணிரத்னம் போன்றவர்களை ஒப்பிடாமல் நகர்ந்துவிடமுடியாது.  அவர்கள் திரைப்படங்களில் ஒவ்வொரு காட்சிகளிலும் பெண்கள் உயர்ந்தவர்கள். அவர்களின் அழுகை , துயரம், காதல், மகிழ்ச்சி எல்லாவற்றுக்கும் திரையில் இடம் உண்டு. இது எல்லாத் திரைப்படங்களிலும் உண்டு என்பது கவனிக்கப்படவேண்டியது. 



ஆய்த எழுத்து திரைப்படம்  மூன்று பெண்களினதும் மூன்று ஆண்களினதும் கதையினை ஒரே புள்ளியில் கொண்டுவந்து இணைக்கும். அதில் மீரா ஜெஸ்மின் கதாப்பாத்திரத்தை 'இறைவி' படத்தின் கதைக்கருவோடு ஒப்பிடலாம். கார்த்திக் சுப்புராஜ் மணிரத்னத்தின் ரசிகர் என்பதால் இந்தக் காட்சியே இறைவி படத்துக்குத் தூண்டுகோலாக அமைந்திருக்கலாம். இன்பா, துளசியின் சொற்களைக் கேட்பதேயில்லை. தனது ஆணாதிக்க சிந்தனையால் புறக்கணித்து அவளைத் துன்புறுத்துகிறான். அவள் தன் காதலால் அவனை மாற்ற முற்படுகிறாள். முடியவில்லை. இறுதியில் வெளியூருக்குச் செல்லலாம் என முடிவெடுக்கிறாள். இரயிலில் காத்திருக்கிறாள். இன்பா வரவேயில்லை. அப்போது டிக்கட் பரிசோதகர் வருகிறார்.  சுஜாதாவும் மணிரத்னமும் இணைந்து இயல்பாக ஒரு காட்சி அமைக்கிறார்கள்.

"இன்பசேகரன்   யாரும்மா?  உங்க ஹஸ்பெண்டா ? எங்க அவரு ?" 

"எனக்கு எப்பிடி தெரியும் அவர் எங்க இருக்கார்னு.. வேற கம்பாட்மென்ட் ? வேற ஊர்லயா  ? பார்லையா? தேவடியா வீட்லையா ? ஹோட்டல்லையா ? ஜெயில்லையா ? எனக்கு எப்பிடி தெரியும் ? நீங்க எல்லாரும் ஒரே ரகம் . உலகத்துல இருக்க அத்தனை  ஆம்பிளைங்களும் பொறுக்கிங்க" 

"என்னம்மா, இன்பசேகரன் பெயர் சாட்ல இருக்கே அவர் எங்கன்னு கேட்டதுக்க இவ்வளவு அர்ச்சனை "

"sorry" என்று அந்த சம்பாஷணை முடிந்துவிடும்.

ஆயுத எழுத்தில் வருகிற மூன்று பெண்களும் வேறு வேறு குணாதிசயம் கொண்டவர்கள். இதில் மீரா ஜெஸ்மின் பாத்திரம் துன்பப்படுகிற பெண்களின் கதாப்பாத்திரம் எனலாம். மற்றைய பெண்கள் தெரிவுகளில் பிழை விடுவதில்லை. 



"உன் ஞாபகம் வந்து போனா எனக்கு நானே சொல்லிக்குவேன் . போயும் போயும் இவனுக்காக எதுக்கு ஏங்கணும்? இது அமெரிக்கா போயி வெள்ளைக்காரனுக்கு கூஜா தூக்குற கேசு . இவன்மேல என்ன புடலங்கா காதல்னு . டிவில பாத்தேன் . நீ எலெக்ஷன்ல நிக்குறேன்னு . அப்போதான் புரிஞ்சுது .. இந்தக் காதல் ஒன்னும் தப்பா வந்திடாதுன்னு" 

என்று மீரா சித்தார்த்தைத் தெரிவு செய்கிறாள்.  இவையெல்லாம் கதையின் ஓட்டத்தோடு இயல்பாக நிகழ்பவை. பெண்களைப் பெருமையாகப் பேசுகிறேன் என்று வலிந்து காட்சிகளைத் திணிப்பதும், உலகிலுள்ள ஒட்டுமொத்த ஆண்களும் பெண்களும் ஒன்றே என்பதுபோல கருத்தை வெளிப்படுத்துவது எல்லாம் ஆபத்து. சொல்ல வருகிற செய்தியைத் தெளிவாகச் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் இயல்பாகச் சொல்லவேண்டும். 'இறைவி' பெண்ணின் பெருமை பேசுகிறது என்று சொல்லாதீர்கள். வேண்டுமானால் பெண்களின்  சகிப்புத்தன்மையைப் பேசுகிறது என்று சொல்லுங்கள்.

Comments

Anonymous said…
தெளிவான பார்வை

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...