இந்தத் திரைப்படம் பற்றிய விமர்சனத்துக்கு முன்னர், இது பேசும் கருவினைப் பற்றிய பின்புலத்தினைப் பற்றி நம்முடைய தமிழ் மரபும் இலக்கியங்களும் என்ன கண்டன என்கிற தெளிவு அவசியம். அந்தத் தெளிவின் பின்னர்தான், இதுபோன்ற கருக்களை இரசிக்கமுடியும். காரணம், சின்ன வயதிலிருந்து நமக்கு ஊட்டப்பட்ட அறிவினை, நாம் சரியோ எனப் பரிசோதித்துத் திருத்த விரும்பாதவர்களாக இருக்கலாம். இவை நம்முடைய அகத்தில், இதுஇதுதான் ஒழுக்கம் என்றும், பெண் என்றால் இப்படி இப்படித்தான் என்றும் சில நம்பிக்கைகளை(cognitive beliefs) விதைத்து வைத்திருக்கிறது. இவற்றை எடுத்துவிட்டுத் திறந்த மனதோடும் மனிதத்தின் கண்களோடும் உலகினை அணுகவேண்டும். எல்லா மனித உயிரும் காதலும் காமமும் சிறக்க வாழவேண்டும்.
திருமணத்துக்குப் புறம்பான உறவுமுறைகளை உள்ளுக்குள்ளே எதிர்ப்பவர்கள், கேட்கும் ஒரே கேள்வி என்னவென்றால், இவற்றை ஆதரிப்பதால் நம்முடைய பண்பாடும் ஒழுக்கமும் என்னவாகும் என்பதுதான். அதற்கு முதலில், அவர்களுக்குமாய்ச் சேர்த்து, 'ஒழுக்கம்' என்பது என்ன என்பதைப் பரந்த நோக்கில் பார்த்துவிடலாம்.
வழிவழியாய், தன்னைத்தானே பரிசோதனை செய்துகொண்டே வந்த சமூகம், ஒவ்வொரு சடங்குகளையும் ஒழுக்கத்தையும் பரிசோதித்து வந்தது. காரணம், சமூகத்துக்கு எது சரியென்கிற திட்டவட்டமான எண்ணம் கிடையாது. சமூகம் என்பது கூட்டு. தனி உணர்வு என்பது தனிப்பட்டது. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்டால், எல்லாவற்றையும் தெளிந்த கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.
'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம்' என்று கற்பியல் சொல்கிறது. இங்கே 'ஐயர்' என்பது மன்றத் தலைவர்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். முன்னர், திருமணத்துக்கு முன்னரான 'களவு' வாழ்க்கை இனிதே அன்புடன் நிகழ்ந்தது. களவில், உள்ளப் புணர்ச்சியோடு மெய்யுறு புணர்ச்சியும் நிகழ்ந்தது. பின்னர், பொய்யும் புரட்டுமாகச் சமூகத்தில் சில சிக்கல்கள் வரவே, மன்றத் தலைவர்கள் கூடி, இது இதுதான் வரைமுறை என்று வகுத்தார்கள். காலத்தின் கைக்குள், இவை பொது வரைமுறையானது. பின்னர், இந்தச் சடங்குகளில் சின்னச் சின்ன மாற்றங்கள் வந்தது. பிறகு முழுவதுமாக மாறி, இடைத்தரகர்கள் வந்தார்கள். இப்பொழுது இடைத்தரகர்களிடம் அதைவிடப் பொய்யும் வழுவும் நிறைந்திருக்கிறது. காதலில் பொய்யும் வழுவும் நிறைந்திருக்கிறது. நிறையவே விவாகரத்துகள் நிகழ்கிறது. ஆதலால், திருமணம் என்கிற ஒழுக்கமும் வெற்றிபெற்ற வழிமுறை என்று கருதமுடியாது.
ஆனால் தமிழோ, களவு வாழ்க்கை சார்ந்த களவியலையும், திருமண வாழ்க்கை சார்ந்த கற்பியலையும் ஒன்றாகக் கருதியது. இரண்டுமே, 'கைகோள்' எனப்படும் ஒழுக்கம் ஆகும்.
தமிழ் இமயம், வ.சுப மாணிக்கம் எழுதிய, 'தமிழ்க் காதல்' எனும் ஆய்வு நூலில், 'கரணமொடு புணர' என்று தொல்காப்பியம் வகுத்த பொதுவான நெறிமுறையைச் சுட்டிக்காட்டியிருப்பார். தமிழ் நெறியானது, காலத்திற்கு ஏற்ப ஒழுக்கத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்பதே தொல்காப்பியம் சொல்லும் மறைமுகச் செய்தி என்பார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தப் படத்தில் வருகிற நாயகன், வழிவழியாய்ச் சமூகம் வகுத்து வந்த சிந்தையில் இயங்குகின்றவன். காதலுக்கும் அவன் இலக்கணம் அதுதான். ஆனால் அவன் இதய சுத்தமானவன் என நாயகி கருதுகிறாள். அவள், சமூக நீதிகளிலும், காதலிலும் இருக்கும் பொய்யும் வழுவும் கண்டு, புத்தியில் திருத்தம் செய்து, தனக்கென்று வழிமுறைகள் சமைத்தவள். இவர்கள் இருவரையும், அன்பும் காமமும் தன் அப்பழுக்கற்ற கைகளால் திடுக்கென்று அணைக்கிறது. அன்பு போலவே, கோபம் போலவே, மனதினால் நன்று கருதுபவர்களின் காமமும் சுத்தமானது. அது அவர்கள் களவு வாழ்வில் நன்றே சிறக்கிறது. சமூகம் வகுத்த சிந்தனையில் வந்தவனும் களவு வாழ்வினைத் தயக்கத்தோடு ஏற்கிறான். திருமணம் செய்யாமல் வாழ்கிறார்கள். ஆனால், ஒத்த அறிவுப் புணர்ச்சி நிகழாத காதல் என்பதாலும், யதார்த்தம் ஒன்றையொன்று முட்டிமோதுவதாலும் உறவில் விரிசல் நிகழ்கிறது.
அவள் தன்னுடைய வாழ்க்கையில் கனவுகளைச் சுமக்கிறாள். காதல் மற்றும் திருமணம் எனும் சட்டமிட்ட வரையறைக்குள் சிக்க விரும்பாமல், உள்ளத்துக்கும் மெய்க்கும் ஆறுதல் தேடுபவளாக வாழ்கிறாள். மெய்யுறு புணர்ச்சி நிகழ்ந்த பின்னர், மெல்ல மெல்ல காதல் வயப்படுகிறாள். ஆனால் திருமணத்தினை விரும்பாதவள். நெடுங்காலம் இந்த அன்பு, ஆராக் காதலோடு வலம்வருமா எனப் பார்க்க விரும்புகிறாள். இதில், அவள்கொண்ட உணர்வுகளை அவன் புரிந்துகொள்ளவில்லை.
மேலே குறிப்பிட்ட இரண்டு காரணிகளும், அவற்றின் பின்புலமும், ஒன்றையொன்று முட்டிமோதுவதை, அதன் போக்கிலேயே விட்டு, கதையை மிக நன்றாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
மேடையில், நாடகத்தோடு இணைந்த நவீன நடன நிகழச்சி(contemprory) நிகழ்கையில், இருவர் உணர்வும் உரையாடிக்கொள்ளும் அழகை, மேடை நடனத்தோடும் இசையோடும் மிக அழகாகவும் உணர்வியல் சார்ந்ததாகவும் காட்சிப்படுத்தியிருப்பார்கள். இங்கு கலை எவ்வளவு அழகுறுகிறது என்பதையும் நம் உணர்வை அது எவ்வளவு அழகாய் பிரதிபலிக்கிறது என்பதையும் இரசிக்கமுடியும்.
இது, கலையின் அழகைப் பிரதிபலிக்கும் வேறொரு புகைப்படம். |
தமிழில், இரு உயிர்களின் அகத்தினைத் திறம்படவும், மரியாதையுடனும் பேசும் படங்கள் வெகு குறைவு. அந்தவகையில் இந்தப் படம் அற்புதம். கொஞ்சம் பொழுதுபோக்குப் படமாகவும் நாடகத் தன்மையாகவும் ஆரம்பக் காதல் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தாலும், கதையின் போக்கு அதை மறக்கடிக்கச் செய்துவிடுகிறது. எந்தவிதமான இடையூறுமின்றிக் கதை நகர்கிறது.
யுவனின் பின்னணி இசையும் பாடல்களும் இந்தத் திரைப்படத்துக்கு மிகப்பெரிய பக்கபலம்.
யுவனின் பின்னணி இசையும் பாடல்களும் இந்தத் திரைப்படத்துக்கு மிகப்பெரிய பக்கபலம்.
Comments