பேஸ்புக்கில் எழுதிய பதிவு
"காதல் சடுகுடு" பாடலில், ஒருவித துடுக்குத்தனம், வேட்கை, காதலின் இறுக்கம் எல்லாமுமே இருக்கும். அலைபோல சடுகுடு ஆடும் காதல் இருக்கும். ஒருவித கண்ணாமூச்சி ஆட்டம், Sexual Playfulness எல்லாமும் இருக்கும். அதை ஆடைகளைக் கொண்டு(Fabric dance) அத்தனை நயமாக எழுதியிருப்பார் மணிரத்னம். கவனித்துப்பார்த்தால், ஒவ்வொரு சட்டகத்தினுள்ளும் அத்திரைமொழி உள்ளாடும்.
துணிகொண்டு ஆடப்படும் நடனத்தில்(Fabric dance), இசைக்கேற்றபடி அலைபோல அசைவுகள் செய்யலாம்; அலைகளைப் பிரதிபலிக்கலாம். 'உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே' என்கிற நெகிழ்வான வரிகளுக்குக் காட்சியில் நியாயம் சேர்க்கலாம். மொழி வளைத்து வளைத்துத் தரும் நெகிழ்வுத்தன்மையையும், அதன் பொருளையும் நடனக் கலைகொண்டு எழுதலாம்.
ஆடைகள் மீதான காமம் என்பது தனிக்கலை; ஒருவித Fetishism. 'தலைக்கு வைச்சு நான் படுக்க அழுக்குவேட்டி தாருமய்யா' என்பதுபோல, மிகுகாதலின் விரகத்தில் எழும் வேட்கை. ஒரு மொழியின் உட்பொருளைக் களைந்து களைந்து, ஒரு மறைபொருள் கொண்ட கவிதையைப் படிப்பதில் இருக்கும் சுகம், ஒரு ஆடை களைதலிலும் நிகழும். கண் காணா அழகுக்காக எழுதிவைத்த கவிதாஞ்சலியைப் போர்த்தியிருக்கும் ஆடை. ஓர் உயிரின் உணர்வுகளையும் மென்பாகத்தின் துடிதுடிப்பையும், இழைகளால் மூடியிருக்கும் பொன்பேழை.
ஒரு ஆணின் ஆடையைப் பாடல்முழுதும் அணிந்திருப்பார் ஷாலினி. அது ஒருவகை விடலைப் பெண்ணின் செயல்(crossplay). ஒரு ஆண்தன்மையை ஏற்றல். பழகும்பொழுது குமரியாகி 'வெல்லும்' தன்மை. காமத்தில் ஆணை ஆளும் பெண்தன்மையின் வெளிப்பாடு. ஒரு ஆணின் பாத்திரத்தை ஏற்று நடத்தல். இந்த ஆடைப் பரிமாற்றங்களைக் கனிவாய்ச் சொல்லியிருப்பார் மணிரத்னம்.
"ராசாத்தி என் உசுரு" பாடலின் இரண்டாம் இடையிசையில், ஆண்கள் மையத்திலிருந்து, சுற்றியிருக்கும் பெண்களின் புடவையை இழுத்து அழைப்பார்கள். சற்றுத் தொலைவில் பிரிந்திருக்கும் இணைகளை எல்லாம் இழுத்தெடுக்கும் ஆணின் வேட்கை. பிரிந்துபோகும் பெண்ணை நினைத்து ஒரு ஆண் பாடுகையில், ஆடைகளை வைத்துச் செய்த அந்த நடனமொழி ஒரு நுண்கலையின் வெளிப்பாடு.
"என் உயிரே" பாடலில், மனிஷாவும் ஷாருக்கும் ஒரே போர்வைக்குள் இருந்தபடி லடாக்கில் செய்யும் நடனம் ஒருவித வேட்கையின் வெளிப்பாடு; இருப்பின் தேடல்(Existentialism). அரபிக் கடலோரம் பாடலில், பின்னலிட்ட ஆடைமீது வைக்கும் இதழ்முத்தம். இந்தத் தடுப்பற்ற போலித் தடுப்புகள் காமத்துக்கு இன்னும் அழகானது. ஒளிவிடும் பாகங்களையெல்லாம் ஒளித்து ஒளித்துத் தூண்டல். படுக்கையறையில் கவிஞர்கள் குழந்தைத் தனத்தையும் குமரித்தனத்தையும் ஒப்பிட்டு எழுதுதுவதன் ரகசியம். குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல் கொண்ட முரண்பாட்டுப் பெண்மையின் அழகு.
'பறந்து செல்லவா' பாடலில் அவள் மேலாடையை நெகிழ்த்தும்போது, போர்வையை விரிப்பது இன்னுமொரு நுண்கலை. ஆடை ஒரு கலை. களைதல் ஒரு கலை. அத்தனையையும் இழைத்து இழைத்துச் செய்த மணிரத்னத்தின் திரைமொழி இன்னுமொரு கலை. மணிரத்னம், வைரமுத்து, ரஹ்மான் மூவரும் சேர்ந்து எழுதிய முப்பொருள்.
Comments