பேஸ்புக்கில் எழுதிய பதிவு
ஆண்டாளுக்கு, கண்ணன்மீது நெருக்கமான காதல் உணர்வு இருந்தது. இதை, 'Limerence' என்றும் சொல்லலாம். வேட்கை அதிகமுள்ள காதல். அவனுடைய மார்பில் அணிந்த மாலையைக் கொணர்ந்து என் மார்பில் புரட்டுங்கள் என்று கேட்பாள். அவன் மார்பு தொட்டாடிய பூக்களைத் தன் மார்புமீது பூசிக்கொள்வாள்.
இன்னும் கொஞ்சம் மோகத்தோடு, அவனின் அரையில் தவளும் ஆடையைக் கொண்டுவந்து அங்கமெங்கும் வீசுங்கள் என்பாள். அந்த வாசத்திலே தன் வாட்டம் தணியும் என்று சொல்வாள். அவள் நினைவு மற்றும் உடலெங்கும் அவனின் நினைவே சூழ்ந்திருக்கும்.
வைரமுத்து எழுதிய, "துருவி என்னைத் துளைச்சுப்புட்ட தூக்கம் இப்போ தூரமய்யா
தரைக்கு வெச்சு நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா" என்கிற வரிகளில் எல்லாம் கொஞ்சம் ஆடையின் நேசம் உண்டு. விஞ்ஞானத்தின்படி, ஆடையில் ஆடும் வியர்வை வாசனைகளை இந்தக் காதல் நெருக்கம் விரும்பும்.
எப்பொழுதும் உடலைத் தொட்டாடும் ஆடைகளென்றால் காதலுக்கு மிகப்பிடித்தம். உள்ளாடை இறுக்கங்கள்மீது முத்தம் வைக்குமளவு உம்மத்தம் வளர்க்கும். காதலியின் உள்ளாடைகளை, உள்ளங்கைக்குள் செலுத்தித் துவைப்பதையும் விரும்பும்.
பிரிவுத் துயரால் வாடும்போதும், கற்பனைகள் வளர்த்துக் காத்திருக்கும்போதும் அந்த ஆடைகள் மீதான மோகம் இன்னும் அதிகமாகும். அவளிடமிருந்து கொஞ்சம் தள்ளிநின்று கனவுகளை வளர்க்கும்போது, "உன் ஆடையின் பொன் நூலிலே என் ஜீவனும் துடிக்கும்" என்கிற கவிதை வரியின் பொருள் விளங்கும்.
இந்த நெருக்கமான காதல் உணர்வினைக் கொண்டு, ராவணன் சீதையின் ஆடைமீது கொள்ளும் மோகத்தின் அழகினை அடுத்தடுத்த காட்சிகளில் அழகாய் மொழிந்திருப்பார் மணிரத்னம்.
Comments