வெற்பிடை யாம் கொய்து |
சுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.
ஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.
ஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்தப் பாடல் நல்லதொரு உதாரணம்.
வேங்கை நறுமலர் வெற்பிடை(வெற்பு - மலை) யாம் கொய்து, மாந்தளிர் மேனி வியர்ப்ப, மற்று ஆங்கு எனைத்தும் பாய்ந்து அருவி ஆடினேம் ஆக, பணிமொழிக்குச் சேந்தனவாம், சேயரிக் கண்தாம்.
தலைவியைத் தேடி அவளுடைய தாய் வருகிறாள். தலைவியினுடைய கண்கள் சிவந்திருப்பதைப் பார்த்து, 'எங்கே போனாய் இவ்வளவு நேரம், என்னவாயிற்று' என வினவுகிறாள். தலைவி தடுமாறினால், களவியல் வாழ்வு அம்பலப்படும் என அறிந்த தோழி, ஒரு நிகழ்வினைச் சடாரெனப் புனைகிறாள். 'தாயே, நாங்கள் மலையினிடையில் உள்ள கொன்றை மரத்தில், நல்ல நறுமணம் உள்ள மலர்களைக் கொய்யும் செயலைச் செய்துகொண்டிருந்தோம். அப்படி அந்த மலரை நெடுநேரம் பறித்திருக்கையில், எங்கள் மாந்தளிர் மேனி எங்கும் வியர்த்துக்கொட்டியது. அதனாலே அங்கிருக்கும் அருவிகளில் பாய்ந்து நீரைக் குடைந்தாடினோம். அதனால் இவள் கண்கள் சிவப்பாகி இருக்கிறது' என்கிறாள். இதையெல்லாம் தலைவன் பின்னால் ஒளிந்திருந்து கவனித்திருக்க, அவனுக்கும் கேட்கும்படி உரைக்கிறாள் தோழி. தோழியானவள், அவர்களுடைய களவுப் புணர்ச்சியை உரைக்கும் நயம்தான் இந்தப் பாடலின் உயிரோட்டம்.
பச்சை மலையையும், மஞ்சள் பூக்களையும் கொண்டு அவர்கள் காமத்தை அலங்கரிக்கிறாள். தலைவன், அவளின் உடலெங்கும் பூக்கள் சொரியும்படி அத்தனை அழகுடன் அவளைக் கூடியிருக்கிறான். 'கொய்தல்' என்கிற வார்த்தையின் சந்தம் அந்தக் காமத்துக்கு மேலுமொரு அழகு. அதனால் அவள் மேனி வியர்த்துக்கொட்டிய எழிலை ஒரு அருவிபோல முன்னிறுத்துகிறாள். நீர் நுழைந்தால் ஆடை குழையும். கூந்தல் தன் அலங்காரங்களை இழந்து ஒழுங்கற்ற ஓர் அழகைச் சூடிக்கொள்ளும். கண்கள் சிவக்கும். இவையெல்லாம் காமத்திலும் நிகழும்.
அவர்களின் காமத்தை அழகுபடுத்தவும் வேண்டும். அதை அழகுபடுத்துவதன் மூலம், ஒளிந்திருந்து கேட்கும் தலைவனுக்கும் இவள் மேனியின் நலனை எடுத்துரைத்து, இவள் மீதான காதலைக் கூட்டவேண்டும். அதேநேரம் பொருத்தமான ஒரு பொய்யையும் சொல்லவேண்டும். தோழி புத்திசாலி.
இதையொரு காட்சியாக, பூக்களின் வண்ணங்களோடும், வியர்வைத்துளிகளின் விழுதுகளோடும் காணும்பொழுதுதான் அதனுள்ளே இருக்கும் மொழியினதும் செயலினதும் அழகு புலப்படும்.
மலரினும் மெலிது காமம் 01 - ஞயம்பட உரை.
Comments
தினமும் ஒரு பதிவு வாசிக்கிறேன் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது மிக்க நன்றி ........
உங்கள் சேவை வளரட்டும் .........என்னைபோன்றவர்கள் இதை படித்து தெரிந்துகொண்டு வளமெரட்டும் வாழ்த்துக்கள்