இராமாயணத்தில் வருகிற 'அகலிகை' என்கிற பேரழகி, கௌதம முனிவனின் மனைவி. கௌதமன் வெளியிலிருக்கும் நேரமாகப் பார்த்து, அவள்மீது காதல்கொண்ட இந்திரனானவன், கௌதம முனிவனின் வடிவில் வந்து அவளைப் புணர்ந்து இன்பம் களிக்கிறான். அவள், அது கௌதமன் அல்ல என்று தெரிந்த பின்பும், காமம் எனப்படும் உயர் இன்பத்தில் கூடித் திளைத்திருப்பதை நிறுத்தவில்லை. இலாவகமாக இந்திரன் கைகளில் போதையேறிக் கிடந்தாள்.
புக்கு அவளோடும், காமப் புது மண மதுவின் தேறல் ஒக்க உண்டு இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்
‘தக்கது அன்று’ என்ன ஓராள் - கம்பன்
இந்நேரம் பார்த்து, முக்கண்ணான் என்று அழைக்கப்படும் கௌதமன் வீடு திரும்புகிறான். என்ன நடந்தது என்று தன் கண்களால் பார்க்கிறான். அல்லது அவள் கூடியிருப்பதைப் பார்க்கிறான். அவள் இதை
திட்டமிடாமல் செய்தாலும், இதற்கு உடந்தையாக இருந்த அகலிகையின் இந்தச் செயலுக்காக அவளைக் கல்லாகும்படி சபிக்கிறான். பின்னர், இராமனின் பாதம் படவே இவள் சாபவிமோசனம் அடைகிறாள். இராமரும் விசுவாமித்திரரும் அவளை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்படி கௌதமனிடம் கேட்டுக்கொள்கிறார்கள். மீண்டும் அந்தப் பேரழகு, முனிவனின் தவத்துக்குச் சேவகம் செய்தே காலத்தைக் கழிக்க ஆரம்பிக்கிறது. நியாயவான் என்று உலகம் போற்றும் இராமரும் அவளைச் சேவகம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறார்.
இதில், மாற்றுச் சிந்தனை கொண்டுவந்தால், இராமாயண விரும்பிகளும், மரபு விரும்பிகளும் கோபப்படக்கூடும். ஆனால், அதைப்பற்றி நான் கவலைப்படப்போவதில்லை என்பதுபோலப் புதுமைப்பித்தன் சொல்லியிருப்பார். புதுமைப்பித்தன் எதற்கும் அஞ்சாமல் துணிவாக எழுதினார். அடிமைப்பட்டிருந்த பெண் உணர்வுகளைத் துணிவாகச் சொன்னார். மரபுகளைக் கேள்விகேட்டார். இவைதானா உங்கள் சமூக நீதி என்பதுபோல் கேள்விகளை வைத்தார். அவர் எழுத்தின் வீச்சும் ஆழமும் தாளமுடியாத சமகால இலக்கிய எழுத்தாளர்கள் எதிர்த்தார்கள். அவர் பொருட்படுத்தவில்லை.
இராமாயணக் கதைகளில் நிறையவே கிளைக் கதைகள் உண்டு. ஒவ்வொரு கதையும் ஒவ்வொன்று போலச் சிறுசிறு மாற்றங்களுடன் இருக்கும். புதுமைப்பித்தன், 'அகலிகை'யின் கதையை 'அகல்யை' என்றும் 'சாப விமோசனம்' என்றும் இரு சிறுகதைகளாகப் புனைந்திருப்பார்.
இராமாயணக் கதைகளில் நிறையவே கிளைக் கதைகள் உண்டு. ஒவ்வொரு கதையும் ஒவ்வொன்று போலச் சிறுசிறு மாற்றங்களுடன் இருக்கும். புதுமைப்பித்தன், 'அகலிகை'யின் கதையை 'அகல்யை' என்றும் 'சாப விமோசனம்' என்றும் இரு சிறுகதைகளாகப் புனைந்திருப்பார்.
அகல்யை' எனும் சிறுகதையில், கௌதம முனிவன், "உணர்ச்சி தேவனையும் மிருகமாக்கிவிடுகிறது. மனத் தூய்மையில்தான் கற்பு. சந்தர்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்?" என்று இந்திரனையும் அகல்யையையும் புரிந்துகொள்வான். ஆனால், தான் இந்திரனால் பயன்படுத்தப்பட்டதை உணர்ந்த அகல்யையின் கோபம் குறையாது.
இரண்டாவது சிறுகதை, சாபத்திலிருந்து மீண்ட அகலிகையின் துன்பத்தைச் சொல்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் பார்த்துப் பார்த்து எழுதப்பட்ட சிறுகதை. உள்ளே அழகும், அழகின் துயரமும், நையாண்டியுமாக, உலகைப் பார்த்துச் சில கேள்விகளைக் கேட்டு நகரும் சிறுகதை.
சபிக்கப்பட்ட அகலிகை கற்சிலைபோல மிக அழகாக இருக்கிறாள். அவள்மீது பனியும் வெயிலும் படிகிறது. 'தூசும் தும்பியும் குருவியும் கோட்டானும் குந்துகிறது. அந்தப் பக்கம் கௌதமன் கறையான் புற்று நிஷ்டையில் ஆழ்ந்து, கவலைகளை மறந்து தவம் இருக்கிறான். ஆனால் இயற்கை இருவரையும் ஒரே விதமாகத்தான் பார்க்கிறது என்கிற மாதிரி எழுதியிருப்பார் புதுமைப்பித்தன்.
அவரைப் படிக்கையில், மிகவும் அட்டகாசமான நடையில் உள்ளே எத்தனை செய்திகளைச் சொல்லிப்போகிறார் என்கிற இரசிப்புத்தன்மை இருக்கவேண்டும். அவள் காமம் கொண்டு அனுபவித்ததால் சபிக்கப்பட்டவள். இவன் தவம் இருப்பதே ஒரு சாபம் போலத்தான் எனச் சொல்லாமல் சொல்லியிருப்பார். இயற்கையின் முன்னால் ஒழுக்கம் பாகுபாடு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது என்றும், அது முனிவனையும், 'வேசி' என்று அவனால் சபிக்கப்பட்ட அகலிகையையும் ஒரே கண்ணால்தான் பார்க்கிறது என்றும் மிக அழகாகச் சொல்லியிருப்பார்.
அங்கே விளையாடும் இராமரின் பாதத் தூசு பட்டு அகலிகை சாபவிமோசனம் அடைகிறாள். முனிவரும் அவளை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அவர் விட்ட சாபம் இருவரையும் உறுத்தியது. அவளுக்குப் பார்க்கிற இடமெல்லாம் இந்திரனாகப் படுகிறது. கோதம முனிவன் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் எல்லாம் சரியாகும் என்று அவளை நெருங்குகிறான். அதை இப்படி எழுதுகிறார் புதுமைப்பித்தன்:
'அகலிகைக்கு பிரக்ஞை மருண்ட நிலை. மறுபடியும் இந்திர நாடகம், மறக்கவேண்டிய இந்திர நாடகம், மனத்திரையில் நடந்து கொண்டிருந்தது.
கோதமன் அவளைத் தழுவினான்.
கோதமன் உருவில் வந்த இந்திரன் வேடமாகப்பட்டது அவளுக்கு. அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. என்ன நிம்மதி!
கோதமன் கைக்குள் சிக்கிக் கிடந்தது ஒரு கற்சிலை.
அகலிகை மீண்டும் கல்லானாள்.
மனச் சுமை மடிந்தது."
பின், கௌதமன் மனமுடைந்து துறவியாகிறான்.
ஆண்டாண்டு காலமாகத் தொண்டரும் அதிகாரமும் அது சார்ந்து வந்த மரபுமே பெண்ணின் இச்சைகளையும் ஒழுக்கங்களையும் தீர்மானித்து வந்திருக்கிறது என்பதை புதுமைபித்தன் ஆழமாகச் சொல்லத் தவறியதில்லை என்பதற்கு, 'சாப விமோசனம்' சிறந்த சிறுகதை.
பின், கௌதமன் மனமுடைந்து துறவியாகிறான்.
ஆண்டாண்டு காலமாகத் தொண்டரும் அதிகாரமும் அது சார்ந்து வந்த மரபுமே பெண்ணின் இச்சைகளையும் ஒழுக்கங்களையும் தீர்மானித்து வந்திருக்கிறது என்பதை புதுமைபித்தன் ஆழமாகச் சொல்லத் தவறியதில்லை என்பதற்கு, 'சாப விமோசனம்' சிறந்த சிறுகதை.
Comments