இரண்டாம் உலகம் திரைப்படம், Multiverse theory, Membrane theory போன்றவற்றை அடிப்படையாக் கொண்ட திரைப்படம். படத்தில், தியரி பற்றி பெரிய அறிமுகம் ஏதும் கொடுக்கப்படவில்லை. Michio kaku மற்றும் ஐங்ஸ்டைன் சொல்லிய கோட்பாட்டை டைட்டிலில் எளிமையாகப் போட்டார்கள். முக்கியமாக ஐங்ஸ்டைன் முடிக்காமல்( Theory of everything ) விட்டுப்போன கோட்பாடுகளில் ஒன்று. அதில் ஆர்வம் கொண்ட Michio kaku பின்னர் தானும் ஆய்வில் இறங்கினார்.
நம்மைப் போலவே நிறைய உலகங்கள் இருக்கின்றன, அதில் நம்மைப் போலவே பலர் இருப்பார்கள் என்கிற தியரி. உதாரணமாக, நீங்கள் இதை ஆர்வமாகப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள், நீங்களே வேறொரு உலகில் இருந்து திபெத்திய போராட்டம் பற்றி வாசித்துக்கொண்டிருக்கலாம். இன்னொரு உலகில், இணையமே இன்னமும் அறிமுகமாகாமல் இருக்கலாம். இன்னமும் நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கிறது.அங்கிருப்பவர்கள் தமிழை மொழியாகக் கொண்டவர்களாகவும் இருக்கலாம். அங்கு இயற்பியல் விதிகள் வேறுமாதிரியாகவும் இருக்கலாம்.
நம்மைப் போன்றவர்களை, அவர்களின் உலகை பார்க்க முடியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சூரிய குடும்பத்தில் பூமி இருப்பது போல ,பல்லாயிரக்கணக்கான சூரிய குடும்பங்கள் சேர்ந்தது தான் பால்வீதி. பல லட்சம் பால்வீதிகள் சேர்ந்தது தான் நம் அண்டம்(Universe). நம்முடைய அண்டம் போல பல இலட்சம் அண்டங்கள்(Multiverse) இருக்கலாம் என்கிறார்கள். அதாவது ஒளி கூட சென்றடையாத தூரத்தில் இந்த சாத்தியக்கூறுகள் இருக்கலாம். நம்மைப் போன்றவர்கள் இருக்கலாம். தொடர்ந்து பிங் பாங்(Big Bang) வெடிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது, ஒவ்வொரு நொடியும் புதுசாக ஒவ்வொரு அண்டம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்கிறது தியரி.
இப்படி மற்ற உலகங்களைப் பார்க்க முடியாமல் இருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. உதாரணமாக, நம்மால் முப்பரிமாண உலகையே காண முடிகிறது.ஆனால் மொத்தம் பதினொரு பரிமாணங்கள் இருக்கிறது என்கிறது எம் தியரி. அதனால் நம்மைச் சுற்றியே அந்த உலகங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.ஆனால் நம் புலன்களுக்குத் தெரியாது.
இப்படியொரு குழப்பமான தியரியை, திரையில் இயன்றளவு எளிமைப்படுத்தி கொடுத்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.
முக்கியமாக தமிழ் சினிமா இரசிகர்களுக்கு ஒரு Science fiction + காதல் கலந்த கதையை கொடுக்க எண்ணியதைப் பாராட்ட வேண்டும். இரண்டு உலகங்களில் கதை நகருகிறது. ஏராளமான உலகங்களில் கதை நகர்ந்துகொண்டிருக்கலாம். திரையில் இரண்டு உலகங்கள் தான் காட்டப்படுகிறது.
இப்படி இரண்டு வேறுபட்ட உலகத்தை இணைப்பது என்பது சவாலான விடயம். நம்மவர்கள் நம்பமாட்டார்கள் எனத் தெரிந்துதான், 'கடவுள்' என்று ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்தியிருக்கவேண்டும். முக்கியமாக, இதில் கடவுள் ஒரு பெண். செல்வராகவன் மட்டும் தான் அப்படி சிந்திப்பார்.
இந்த இரண்டு உலகங்களிலும் ஒரே நேரத்தில் கதை நகர்ந்துகொண்டிருக்கும் போது, எதிர்பாராத சில விஷயங்கள் நடக்கிறது. பின்னர் இந்த இரண்டு உலகங்களையும் தொடர்புபடுத்தி கதை எப்படி நகருகிறது என்பதை திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
பெண்களை தைரியமானவர்களாகவும், புத்திசாலியாகவும் காட்டும் இயக்குனர்களுள் செல்வராகவனும் ஒருவர். இந்தப் படத்திலும் கதாநாயகி பாத்திரத்துக்கு கூடுதல் பெறுமதி உண்டு. எல்லோரையும் விட, இந்தப் படத்தில் அனுஷ்காவின் நடிப்பு சிறப்பாக இருந்தது.
செல்வராகவன் திரைப்படங்களில் வரும் காட்சிகளுக்கு என்று தனித்துவம் உண்டு. காதல் என்றால் என்னவென்று தெரியாத உலகத்தில் வாழும் இருவருக்கிடையே ஏற்படும் காதலை சிறப்பாகக் காட்டியிருப்பார்.
முக்கியமாக CG தொழில்நுட்பத்தை இயன்றளவு சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்குப் பணி புரிந்த அதே அணி. இதில் இன்னும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உழைப்பில் இரண்டு உலகங்களும் மிகவும் அழகு.
மன்னவனே, கனிமொழியே, என் காதல் தீ பாடல்கள் சிறப்பாக இருந்தது. பல தடவைகள் கேட்டிருந்தாலும், காட்சி அமைப்போடு பார்க்கும்போது கூடுதல் அழகு. இதற்கு வைரமுத்துவின் நல்ல தமிழ் வரிகளும் ஒரு காரணம். சில இடங்களில் அனிருத்தின் பின்னணி இசை அவ்வளவாகக் கவரவில்லை.
சில இடங்களில் தியரிகளை விளக்க சிரமப்பட்டது தெரிகிறது. இன்னொரு உலகம் இருந்து, அதில் இந்தப் படத்துக்கு சுஜாதா வசனம் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தேன். தமிழ் இரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என முயன்று சில இடங்களில் சுதப்பியிருக்கிறார் என நினைக்கிறேன்.
மற்றபடி இது தமிழ் சினிமாவில் புதியதொரு முயற்சி. மற்றவர்களும் தைரியமாக இதுபோன்ற கதைகளை எடுத்துச் செய்ய இத்திரைப்படம் தூண்டினால் நல்லது. காதலை எந்தத் தளத்தில், எந்த வடிவில் சொன்னாலும் அது புதியது தான்.' உலகில் காதல் பழையது, உற்ற பொழுதே புதிய ' என்ற வைரமுத்துவின் வரிகள் போல.
தமிழ்சினிமாவில் இதுபோன்ற திரைப்படங்கள் நிறைய வரவேண்டும். இயக்குனர்கள், திரைக்கதை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இரசிகர்களின் கிரியேட்டிவிட்டிக்கு சுதந்திரமான தளத்தைக் உருவாக்கிக் கொடுக்கும் படங்கள் இவை.
தமிழ்சினிமாவில் இதுபோன்ற திரைப்படங்கள் நிறைய வரவேண்டும். இயக்குனர்கள், திரைக்கதை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இரசிகர்களின் கிரியேட்டிவிட்டிக்கு சுதந்திரமான தளத்தைக் உருவாக்கிக் கொடுக்கும் படங்கள் இவை.
Comments
அதான் நல்லா இருக்காதுன்னு தெரியுமே அப்போ எதுக்கு cg க்கு செலவு பண்ணிக்கிட்டு 60 கோடி பட்ஜெட் ஆனதுக்கு காரணகம் cg தானாம்...கான்செப்ட் லாம் நல்லா தான் இருக்கு அதை ப்ரெசென்ட் பண்ண விதத்தில்தான் இந்த படம் தோத்து போச்சு, avengers பார்த்தவங்க கிட்ட cartoon காமிச்சா ஒத்துக்க முடியலையே. இரண்டாவது உலகத்துக்கு லாகிக்கா வேற ஏதாவது சொல்லிருக்கலாம்.
அன்பே ஆருயிரே ன்னு ஒரு படம் எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்தது அதுவும் வணிக ரீதியாக தோல்விதான் என்றாலும் பார்வையாளர்களை குழப்பாமல் சொல்லிருப்பாங்க நீல கலர் டிரஸ்ல வர்றவங்க நினைவுகள் மற்றவர்கள் எல்லாம் நிஜம்ன்னு
12b என்னளவில் சிறந்த முயற்சி
இ உ தலைசிறந்த முயற்சி ஆகவேண்டியது..செல்வாவின் மேதமையால் வீணாகிவிட்டது
திடீர்ன்னு ஒன்னு ஞாபகம் வந்துச்சு
உலகில் காதல் பழையது, உற்ற பொழுதே புதிய
பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்
amas32
இந்தப் படத்தை இன்னும் பலவழிகளில் எடுத்திருக்கலாம்தான். வித்தியாசமாக எத்தனையோ கோணங்களில் யோசித்து இதையே வைத்து நிறைய கதைகள் செய்யலாம்.
இதுவொரு ஆரம்பமாக இருந்தால் நல்லது. இதை வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.
செலவு என்று பார்த்தால், இன்னமும் வயிற்றுக்கு, தெருவுக்கு பெயின்ட் அடிப்பதை எல்லாம் பிரம்மாண்டம் என்று இரசித்துக்கொண்டிருக்கிறோம். அதோடு ஒப்பிடுகையில் CG செலவுகள் வீண்போல தோன்றவில்லை.
Beautifully analysed :-) Liked your review along with the scientific explanations. Glad to know that more people appreciate this movie :-) //
மிக்க நன்றிங்க :-)