புதிய தலைமுறை தொலைகாட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை, தமிழில் இப்படியொரு ஊடகம் வராதா என்ற ஏக்கத்தை படிப்படியாக குறைத்துக்கொண்டே வருகிறது. என் எதிர்பார்ப்புகளை மீறி முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு பஞ்சமில்லை. அதை ஆரோக்கியமாக முன்வைப்பவர்களுக்குத் தான் தட்டுப்பாடு. தமிழ் ஊடகங்களில் 'புதிய தலைமுறை' ,தன் பெயருக்கு ஏற்றபடி பல படிகள் முன்னோக்கித் தான் இருக்கிறது. சக தமிழர்களைத் தூக்கிவிடும் ஊடகமாகத் தான் இதைப் பார்க்க முடிகிறது. ஒரு தமிழ் ஊடகம் தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் தரத்தோடு ஒத்துப்போகாமல், அந்தச் சமூகத்தையும் சேர்த்து அரவணைத்துக்கொண்டு செல்கிறது என்பது ஆரோக்கியமான விடயம் அல்லவா.
இன்று சித்திரைத் திருநாளை முன்னிட்டு புதிய தலைமுறையில் ஒளிபரப்பான 'தமிழன் விருதுகள்' நிகழ்ச்சியை பார்க்கக் கிடைத்தது. இலக்கியம் ,கலை ,அறிவியல் என்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழர்களுக்கு, தமிழன் விருதுகளை வழங்கி கௌரவித்தது புதியதலைமுறை. ஓர் ஊடகம் கேளிக்கை நிகழ்ச்சிகளை தவிர்த்து ,சமூகத்துக்கு பயன்தரக் கூடிய விடயங்களை முன்னின்று நடத்தி வெற்றி பெறுவதென்பது ஒரு சாதனை தான். இந்தக் கருத்தைத் தான் இந்து நாளிதழின் ஆசிரியர் ராம் கூட விருது வழங்கும் நிகழ்வில் முன்வைத்திருந்தார். அதுவும் ஒரு தமிழ் ஊடகமாக இருந்து,சமூகத்துக்கு பயனுள்ள விடயத்துக்கு தமிழ் மக்களிடம் வரவேற்புப் பெறுவது என்பது ஒரு அசாத்தியத் திறன் தான்.
தொழில்நுட்பம், விளையாட்டு ,வணிகம் ,அறிவியல் , சமூக சேவை என அனைத்து துறைகளிலும் முன்னோடியாகத் திகழும் சாதனைத் தமிழர்களைத் தேர்வு செய்ததோடு, அந்தந்தப் பிரிவில் நம்பிக்கை அளிக்கக்கூடிய இளம் சாதனையாளர்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது.
அறிவியலில் சாதனை படைத்த தமிழர் சிவதாணு பிள்ளை , நிலமற்ற ஏழை விவசாயிகளுக்காகப் போராடும் கிருஷ்ணம்மாள் போன்றவர்களுக்கு விருது கிடைத்ததே அந்த விருதுக்குப் பெருமை.
தரமானவர்களுக்கு , சமூகத்துக்குக்காக உழைப்பவர்களுக்கு விருதுகளை வழங்கி ,சமூகத்துக்கு அவர்களை அடையாளம் காட்டும் புதிய தலைமுறையின் இந்த முயற்சி இனி வரும் வருடங்களில் தமிழர்களிடம் ,குறிப்பாக இளைஞர்களிடம் இன்னும் வரவேற்ப்பு பெற வேண்டும் .
எந்தச் சமூகம் தன் சமூகத்துக்காக உழைக்கிறவர்களை மதிக்கிறதோ ,அந்தச் சமூகமே மேலும் மேலும் சாதனையாளர்களைப் பெறும். அறிவால் ஒளியேற்றப் போகிறவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் திறன் ஊடகங்களுக்கு உண்டு.புதியதலைமுறை உலகத் தமிழர்கள் எனும் பரந்த வீச்சுக்குள் சாதனையாளர்களை தேடி எடுக்கும் என நம்புகிறேன்.
Comments