ஒரு சில புத்தகங்களை, சுவாரசியமான துப்பறியும் கதையைப் படிப்பது போல எடுத்த எடுப்பிலேயே படிச்சு மூடி வைச்சிட முடியாது. வாழ்க்கைல எல்லாத்தையுமா ரசிச்சுடுறோம்.நம்முடைய வேகம் அப்படி. அதே வேகத்தை இரசனையான பகிர்வுகளைக் கொண்ட புத்தகங்களின் பக்கங்கள் மேல் காட்ட முடியுறதில்லை. எதை எப்படி வாசிக்கவேண்டுமென ஒரு சில பக்கங்களை தாண்டிய பின் புத்தகங்களே நமக்குச் சொல்லிக்கொடுக்கும்.ஒரு சில புத்தகங்களை ஒரு நாளைக்கு ஒரு சில பக்கங்கள் எனப் படிப்பது இன்பம். அப்படி ஒரு புத்தகம் தான் வண்ணதாசன் அவர்கள் எழுதிய அகம்புறம்.கடற்கரையோரமாக நடந்து போவதற்கும்,கடலை சலிக்காமல் நின்று பார்த்துக்கொண்டிருப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.சில கணங்கள் மெதுவாகவே நகர வேண்டும்.பக்கங்களும் அப்படித்தான்.இந்த 'மெதுவாக' என்பது போகப் போக இயல்பாகிவிடும்.வாழ்க்கையின் சில கணங்களை மெதுவாக்கிவிடும் இயல்பு இரசனைகளுக்கு உண்டு.குழந்தையைப் பார்க்கும் போது சட்டென்று விரிகிற புன்னகை மாதிரி.
புத்தகத்தை இன்னும் படித்துமுடிக்கவில்லை.இப்போதைக்கு முடிப்பதாகவும் உத்தேசம் இல்லை. அந்தப் புத்தகத்திலிருந்து இதுவரை பகிர்ந்துகொண்ட ஒரு சில பகுதிகளை கீழே தந்திருக்கிறேன்.
'வாழ்க்கை தொடர்ந்து விதிகளைப் பொய்யாக்கிக்கொண்டேதான் இருக்கிறது.இது இப்படித்தான் என்று முடிவுகட்ட முடியாதபடி,தன் காலடிச் சுவடுகளைத் தானே அழித்துக்கொண்டு அது நகர்கிற விதம்,யூகங்களுக்கு அப்பாற்பட்டது. அச்சடித்த புத்தக வரிகளின் மேல் சின்னஞ்சிறு பிள்ளையார் எறும்பு ஊர்வது போல எந்தத் தடங்கலும் இன்றி அது ஊர்ந்துகொண்டு இருக்கிறது.அடுத்த பக்கங்களின் வாசிப்பு அல்ல,ஊர்ந்துகொண்டே இருக்கும் அந்த உயிரின் அழகு முக்கியம் என்று நமக்குப் பிடிபட்டால் போதும்.' - வண்ணதாசன்
சினிமாக் கொட்டகைக்குள் இருக்கும்போது பெய்கிற மழை , ஒரு சாதாரண சினிமாவைக்கூட நல்ல சினிமாவா ஆக்கிவிடும் -#வண்ணதாசன்
நீர்த்தாரையை உள்ளங்கையில் ஏந்துவதற்கும் மழை தான் சொல்லிக்கொடுத்திருக்கும் - வண்ணதாசன்
Comments