மேசை மீது ஒரு paperweight , அதன் கீழே பறக்கும் ஒரு சில கடதாசிகள், பேனை,புல்லாங்குழல் இசை என அனைத்தும் இன்னமும் நினைவில் இருந்தால் நீங்களும் பாலுமகேந்திராவின் 'கதை நேரம் ' தொடருக்கு இரசிகர் தான். அந்தளவுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது அந்தத் தொடர். ஒவ்வொரு கதாப்பத்திரங்களுக்கும் செயற்கைத் தன்மை அற்ற உணர்வை கொடுத்திருப்பார் .
நான் பார்த்த போது என் வயது நுண்ணிய உணர்வுகளை எல்லாம் உற்றுநோக்கும் அளவில் இருக்கவில்லை . இயற்கையாகவே ,கதையின் போக்கிலேயே பாத்திரங்களின் உணர்வுகளை பிரதிபலித்ததால் இன்று வரை அந்தக் கதாப்பாத்திரங்கள் கூட நினைவில் இருந்து அகலவில்லை. எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிக்காத திரைக்கதை,இயக்கம். அது பாலுமகேந்திராவுக்கே உரிய வித்தை. இப்போது அந்தத் தொடர்களை மீண்டும் பார்க்கும் போது Lighting இல் இருந்து எத்தனை விடயங்களை இந்த மனுஷன் கவனித்திருக்கிறார் என வியப்பாக இருக்கிறது. அவர் ஒரு ஜீனியஸ். அவர் தொடக்கி வைத்த புதிய அத்தியாயத்தை யாரும் பின்பற்றவில்லை என்பது தான் கவலைக்குரியது.
மனதினில் கொஞ்சம் அமைதி நிலவும் வேளையில் 'கதை நேரம் 'தொடரில் ஒன்றை தேடிப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறதென்றால்,அது தான் அதன் வெற்றி.
மொத்தமாக 52 சிறுகதைகளை படமாக்கியிருந்தார் இயக்குனர் பாலுமகேந்திரா. அதில் சுஜாதாவினுடைய சிறுகதைகள் 10 . ஜெயந்தன் ,திலகவதி ,மாலன் ,சுந்தர் ராமசாமி,வாஸந்தி போன்றவர்கள் எழுதிய சிறுகதைகளை மிகவும் சிறப்பாக படமாக்கியிருந்தார். ஒவ்வொரு சிறுகதைகளையும் மிகவும் அழகாக திரையில் கொண்டுவந்திருப்பார் . சிறுகதைகள் தரும் அதே உணர்வை திரையில் வடிப்பது என்பது கடினமான காரியம். சிறுகதைகளை எப்படிப் படமாக்குவது என அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு கதையையும் தனித் தனியே எடுத்து ஆராயலாம் .அவ்வளவு ஆழமான கருவைக் கொண்ட கதைகள் . இயன்றவரை இரசித்த சிலவற்றை தனித் தனியே எழுதலாம் என்றிருக்கிறேன்.
Comments
இப்போது ராஜேஸ்குமார் நாவல்களை வைத்து கொல்லும் கலைஞரை விட எவ்வளவோ மேல்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா