அண்மையில் வெளியான திரைப்படங்களில் இயக்குனர் நவீன் அவர்கள் இயக்கிய 'மூடர் கூடம் ' மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு முயற்சியையும் புதிது என அறிமுகப்படுத்துவது கொஞ்சம் பழசாகப்படுகிறது. Quentin Tarantino வினுடைய படங்கள் போல என்கிற அறிமுகத்துக்கு எல்லாம் அவசியமில்லை.
இந்த அறிமுகங்கள்,விளக்கங்கள் எதுவுமில்லாமல் படத்தை ஒரு முறை பார்த்துவிடுங்கள். தமிழில் ஒரு புதுமையான திரைப்படம் பார்த்த அனுபவம் கிட்டும்.
படத்தில் அப்படி என்ன இருக்கு ? . ஒரு ஆர்வத்தில், 'படத்தின் கதை என்ன ?' எனக் கேட்பவர்களுக்காக கதையைச் சொல்லிடலாம். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நாலு பேரும் சேர்ந்து திருடப்போறாங்க.படத்தின் கதையே அவ்வளவுதான்.ஆனால் கதை சொல்லும் விதத்தில் புதுமை செய்திருக்கிறார் நவீன்.
அந்த நான்கு பேரில் இயக்குனர் நவீனும் ஒரு பாத்திரமேற்று நடித்திருக்கிறார்.படத்தில் வருகிற அத்தனை பேரின் நடிப்பும்,Deadpan expressions உம் பிரமாதம்.ஒவ்வொரு சிறிய கதாப்பத்திரத்துக்கும் படத்தில் முக்கியத்துவம் உண்டு. நாய்க்கு ஒரு பாடல் கூட உண்டு. Flashback எல்லாம் உண்டு. விலங்குகளை வைச்சும் இந்தச் சமூகத்தோடை கதையை சொல்லிடலாமா!. சில காட்சிகளை நகைச்சுவை என நினைச்சு கடந்தும் போய்விடலாம்.படம் முழுதும் அபப்டித்தான். நகைச்சுவையாகப் பார்க்கிறவர்கள் அப்படியே கடக்கலாம். அவரவர் பார்வைக்கு,சிந்தனைக்கு என்று இயக்குனர் விட்டுவிட்டாரோ என்னவோ!
இந்தப் படம் பார்த்துவிட்டு நகைச்சுவையே இல்லையே,சிரிப்பே வரல என்று கேட்டால் ஒன்றும் செய்யமுடியாது. கம்யூனிசம் , மார்க்ஸிசம் பேசுகிறார்கள் என்றெல்லாம் அலுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவ்வப்போது சில காட்சிகள்.இந்தப் படத்தில் எல்லோரும் இயல்பாகவே இருப்பார்கள். பார்க்கும் எமக்கு சிரிப்பைத் தூண்டும். உண்மையிலேயே ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டு வாழும் நகைச்சுவையான வாழ்க்கை தானே இது. வெளியிலிருந்து திரையில் பார்க்கும் போது சிரிக்கிறோம். உள்ளிருக்கும் போது தோன்றுவதில்லை.
இறுதியில் பொம்மைக்கும் ஒரு கதை உண்டு. 'நீயும் பொம்மை நானும் பொம்மை' என்கிற பாடல் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெளிவாக்கிவிடும்.இது 'பொம்மை' என்கிற படத்தில் ஜேசுதாஸ் பாடிய பாடல். தமிழில் அவர் பாடிய முதல் பாடல் இது.அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் இசையை மிகவும் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார் சங்கர நாராயணன்.பின்னணியில் 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' ஒலிப்பதெல்லாம் சிறப்பு.
தமிழுக்கு ஒரு நல்ல புதிய இயக்குனர் கிடைத்திருக்கிறார்.இந்தப் படம் உருவாக எடுத்த முயற்சிகளை பற்றி ஒரு கட்டுரை தி இந்துவில் (இயக்குனரின் பேட்டி)கூட வந்திருந்தது.
Comments