யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் வன்புணரப்பட்ட சம்பவத்துக்கு அந்தச் சமூகமே குரல் கொடுக்க எழுந்து நிற்கிறது. வன்புணர்வு செய்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கவேண்டும் என்கிறார்கள். இப்படியான தண்டனைகள் அவசியம். இவற்றுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. இந்தமாதிரிப் பிரச்சனைகளை உளவியல் நிபுணர்களைக்கொண்டு ஆராய்கிற கலாச்சாரத்துக்குள் நம் ஊடகங்கள்கூட காலடி எடுத்துவைக்கவில்லை. மேலோட்டமான அலசலும் பார்வையுமே இருக்கிறது. வெறுமனே சட்ட இரீதியாக அணுகினால் போதும் என்றும், தற்காலிகத் தீர்வு அவசியம் என்கிற கோஷமுமே முன்வைக்கப்படுகிறது. ஒரு சமூகத்துக்கு அறிவினை வழங்குவது மட்டும் நிரந்தரத் தீர்வு ஆகாது. குறைக்கலாம். தனிநபர்களின் உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் எட்டப்படும் வகையில் நடவடிக்கைகள் அமையவேண்டியது அவசியம்.
சில விஷயங்களைப் பேசமுதல் சில உண்மைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்.காதல் திருமணம் செய்துகொண்ட பெண்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் பின்னும் வன்புணர்வு நிகழ்கிறது. வீட்டில் உள்ள பெண்கள் மீதும் வன்புணர்வு நடக்கிறது. வெளியில் வருகிற, ஊடகங்கள் பிரபலப்படுத்துகிற வன்புணர்வுகளைவிட பதிவு செய்யப்படாத வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், வன்புணர்வுகள்தான் அதிகம். காரணம், வீட்டில் இருக்கிறவர்களோ, தெரிந்தவர்களோ அதை மேற்கொள்வதுதான். இதைப் பற்றிய முறைப்பாடுகள் வருவதில்லை. காதலும் தாலியும் என்றும் புனிதம் என்கிற பரிசோதிக்கப்படாத தியரி இங்கு உறுதியாக இருக்கிறது. இருவேறுபட்ட செக்சுவல் ஆர்வம் உள்ளவர்கள் இணையும்போதும் கட்டாயப்படுத்துதல்கள், பிரச்சனைகள் எழுவதுண்டு.
செக்ஸ் வைத்துக்கொள்வதற்கும் அதைப்பற்றிய பரஸ்பர புரிந்துணர்வுக்கும் இடையிலான வித்தியாசத்தையும் பலரும் அறிவதில்லை. காதலர்கள் தங்களுடைய அந்தரங்கமான செக்ஸ் விருப்பங்களைப் பற்றி முன்னமே வெளிப்படையாக பேசிக்கொள்வதில்லை. விஞ்ஞானத்தின் படி காதலின் அடிப்படை அதுவாக இருந்தாலும், ஒரு புனித பிம்பம்தான் இருக்கிறது. திருமணத்தின்பின் அதை முதன்முறையாக எதிர்கொள்ளும்போது சமநிலையற்று விவாகரத்துவரை வந்து நிற்பார்கள். பெரும்பாலானவர்கள் தாங்கள் விவாகரத்து செய்துகொள்வதற்கான உண்மையான காரணத்தை வெளியில் சொல்வதில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். பலரும் விவாகரத்துச் செய்வது பண்பாடில்லை என்றும் வன்புணர்வுக்கு ஒத்துழைப்பதே பண்பாடு என்றும் சகித்துக்கொண்டு வாழ்வதுண்டு. ஒரு பெண்ணைத் தெரிந்திருந்தால், அவரின் விருப்பமின்றி அவரை அணுகுவது வன்புணர்வு இல்லை என்பதே பலருடையை நிலைப்பாடு என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
இந்த வன்புணர்வினை மேற்கொள்கிறவர்கள் பற்றி நிறைய ஆய்வுகள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, இதுதான் காரணம் என்று இவர்களை வகைப்படுத்திட முடியாது என்கிறார் போஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் Prentky . இந்தச் சிக்கலான விடயத்தில் நிறைய பதில்கள் கிடைத்திருக்கின்றன. வன்புணர்வு மேற்கொள்பவர்களில் குறிப்பிட்ட வீதமானோர் சிறுவயதில் துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்கள் என்று சொல்லுகிறார்கள். இங்கு சிறுவர் துஷ்பிரயோகத்தையும் சட்ட ரீதியாக அணுகும் கலாச்சாரம்தான் இருக்கிறது. துஷ்பிரயோகம் செய்தவருக்கும் ஆளானவருக்கும் சரியான உளவியல் பயிற்சி கொடுக்கப்படுவதில்லை. பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு Posttraumatic stress disorder ஏற்படுகிறது.
இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால், வன்புணர்வில் ஈடுபட்டவர்களில் Sexual sadism disorder உள்ளவர்கள் மிகவும் குறைவானோர். இந்த சாடிஸ மனநிலை உள்ளவர்களுக்கு, துன்புறுத்தலுக்கு உள்ளாகிறவரின் பய உணர்வுதான் தூண்டுகோலாக இருக்கும் என்று உளவியல் சொல்லுகிறது.
ஒருசில வன்புணர்வாளர்கள் உலகத்தின் மீது கோபம் உள்ளவர்கள் என்கிறார்கள். அதையெல்லாம் ஒரு பெண்ணின்மீது பிரயோகிக்கும் இவர்கள் அதிகமாக கொலை, கொள்ளை என ஏனைய வன்முறைகளிலும் ஈடுபடுபவர்கள் என்கிறது ஆய்வு. சிலர் வழமைக்கு மாறான ரொமான்டிக் கற்பனைகளில் ஈடுபடுகிறவர்கள் என்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண் தன்மீது காதல் கொள்வாள் என்கிற எண்ணம் உண்டாம். இப்படியானவர்கள் பாதிக்கப்பட்டோரை மீண்டும் சந்திக்க முற்படுபவர்கள் என்கிறார்கள்.
இப்போதும் பெண்களின் ஆடைகள் மீதும், நடத்தையின் மீது மட்டுமே குறை சொல்லப்படுகிறது. பெண்ணியவாதிகள் சொல்வதுபோல பெண்கள்மீதான அடக்குமுறை என்றும் சுருக்கிவிடமுடியாது. சிலர்தான் சாடிஸ மனப்பான்மையில், பெண்கள் மீதான வெறுப்பினை வெளிப்படுத்த வன்புணர்வில் ஈடுபடுபவர்கள் எனவும் பெரும்பாலானவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கிறவர்கள் என்கிறார்கள். பெண்கள் தங்களை அவமானப்படுத்தியதால் கோபத்தில் செய்தோம் என்று அடிக்கடி சொல்லுபவர்களும் இருக்கிறார்கள் என்கிறார்கள்.
தற்போதையை பெண்கள் சற்று முற்போக்குச் சிந்தனை உள்ளவர்கள் என்கிறபடியால், சாட்சியினை இல்லாமல் செய்ய வன்புணர்வின் பின்பு கொலையையும் மேற்கொள்கிறார்கள். பரந்துபட்ட முறையில் ஆராயப்படவேண்டிய சமூக உளவியல் பிரச்சனை இது. இவற்றை மேலோட்டமாக அணுகுவதோ, அரசியல் சார்ந்து அணுகுவதோ சமூகத்திற்கு மிகவும் பாதிப்பான விடயம். Sadistic fantacies உள்ளவர்கள் நிறையப்பேர் சமூகத்துக்குள்ளேயே இருப்பார்கள். இதனைச் சரியாக இனங்கண்டுகொள்ளும் அளவுக்கு தெளிவு அவசியம். இனங்கண்டபின் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
Comments