சொற்களுக்கிடையேயான இடைவெளிகள், அவை ஒவ்வொன்றும் வந்துவிழும் போக்கு, ஒலிநயம் போன்றவை வாசிப்பிற்கு அர்த்தம் சேர்க்கப் போதுமான காரணிகளில் சில எனலாம். கி. ராஜநாராயணனின் எழுத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிற வேலையை மட்டுமே "கோபல்ல கிராமம்" என்கிற அவரது நாவல் செய்தது. மிகுதியை அவரின் கதை சொல்லும் முறையும், ஒரு கதை சொல்லியைக் கையாள்கிற லாவகமுமே மேற்கொண்டது.
கணவனோடு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வருகிற பெண்ணோடு ஆரம்பிக்கிற கதை, பிரிட்டிஷ் மகாராணியின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா கொண்டுவரப்படும் காலம்வரை நீள்கிறது. அப்போதைய காலங்களில் கிராமங்களில் நிலவிய நம்பிக்கைகள், ஆட்சி முறைகள், மனித உணர்வுகள், வட்டாரா மொழிகள் என அனைத்தையும் உள்வாங்கி வைத்திருக்கிறது இந்தக் கோபல்ல கிராமம்.
எழுத்தில் இருக்கும் இரசனைத்தன்மையை அனுபவிக்கிற அனிச்சையான 'அந்த' நிகழ்தலை எல்லா எழுத்துகளும் நிகழ்த்துவதில்லை. சாதாரண கிராம மக்களின் அன்றாடச் செயற்பாடுகளை விபரிக்கிற விதம் அழகு. தொடுக்கப்படுகிற வசனங்களின் தொடர்ச்சியான அழகியல் அழகு. ஒரு நிறைவான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது.
தண்ணீர் ஒரு அரிய செல்வம். செல்வமானது இப்படி ஒரு இடத்தில், தனிமையாகத் தேங்கிக் கிடந்தால் அங்கே என்னதான் நடக்காது?
நண்டு தனது சொந்த சௌகரியத்துக்காக வளைதோண்டி வைத்திருக்கிறது. ஆனால் அங்கே இந்தக் குரவை மீனுக்கு என்ன சோலி? அந்த வளை, நீரின் நிலையை ஒட்டி அதன் சிற்றலைகள் அந்த வளைக்குள் சென்று வரும்படியாக அமைந்திருக்கும். மண்ணும் தண்ணீரும் சேர்ந்து பதப்பட்டிருக்கும் அந்தச் சொத மண்ணில் வசிக்கும் மண்புழுவைத் தின்ன குரவை மீனுக்கு ரொம்பப் பிரியம். அந்தக் குரவை மீனைப் பிடித்துத் தின்ன நாரை ஒற்றைக் காலில் நிற்கிறது. நாரையைப் பிடித்துத் தின்ன நரி பதிபோட்டுக் காத்து நிற்கிறது.
முதலில் மூன்று பாக்கை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். தனித்தனி வெத்திலையாக எடுத்து சுண்ணாம்பு தேய்க்கும் வழக்கம் இல்லை. மும்மூன்று வெத்திலையாகவே எடுத்து, வலமாக சுண்ணாம்பைத் தடவி, இறுக்கமாக மடித்து வாயில் இட்டு மொறுக் மொறுக் என்று மெல்லும்போது காதுகளின் பக்கத்தில் மேல்தாடையின் எலும்புப் புடைப்பு மேலும் கீழும் வந்துபோவது தெரியும்.
அவள் அபூர்வமாகத்தான் வாய்விட்டுச் சிரிப்பாள். இன்னொரு தரம் அப்படிச்சிரிக்கமாட்டாளா என்று இருக்கும். அவளுடைய சிரிப்பிலே தான் எத்தனை விதம்!
கண்களால் மட்டும் சிரித்துக்காட்டுவது.கண்கள் சிரிப்பதற்கு புருவங்கள் அப்படி ஒத்துழைக்கும்!கடைக்கண்ணால் சிரிப்பது.
முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் நேர்பார்வையில் சிரிப்பது; தரையைப் பார்த்துச் சிரிப்பது. (அவளுடைய சிரிப்பிலே இதுதான் அழகு) கண்களைச் சுழற்றி - பறவையாடவிட்டு - ஒரு சிரிப்புக் காட்டுவாள் (அப்போது கண்கள் ஜொலிக்கும்) சில சமயம், சற்றே மூக்கை மட்டும் விரித்து மூக்கிலும் ஒரு சிரிப்பை வரவழைப்பாள்!
Comments