"கன்னடத்தில் சிவராம காரந்தும் மலையாளத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையும் இயல்புவாதத்தை முழுக்கமுழுக்க ஓர் இந்தியவகை அழகியலாக உருவாக்கிய மேதைகள் என்று சொல்லலாம்."
- தகழி சிவசங்கரப்பிள்ளை பற்றி எழுத்தாளர் திரு.ஜெயமோகன்
இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்து மூன்று புத்தகங்களைப் படித்துமுடிக்க இயலுமானதாக இருந்தது. வேலை, கல்வி, மேலதிக வாசிப்பு மற்றும் இதரவேலைகளுக்கும் நடுவில் இதுவொரு நல்ல எண்ணிக்கை என்றே எனக்குத் தோன்றுகிறது.
இறுதியாக, தகழி சிவசங்கரப்பிள்ளை என்பவர் எழுதிய மலையாள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'தோட்டியின் மகன்' என்கிற நாவலைப் படித்துமுடித்தேன். 1946 இல் எழுதப்பட்ட இந்த நாவலை சுந்தர ராமசாமி அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்திருந்தார். எப்போதோ மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு இருந்தாலும், அதன் முதற் பதிப்பை 2000ஆம் ஆண்டில்தான் நாவலாக உருக்கொடுத்து வெளியிடமுடிந்திருக்கிறது. ஒரு நல்ல இலக்கியத்தைத் தமிழ் வாசகர்களுக்குக் கொண்டுவந்த பெருமை சுந்தர ராமசாமியையே சாரும்.
எந்த இலக்கியவாதிகளாலும் பேசப்படாத தோட்டியினுடையை வாழ்க்கையை ஒரு இலக்கியமாக வடித்திருக்கிறார். ஆழப்புழை நகரசபையில் பணிபுரியும் மலமள்ளும் தொழிலாளிகள் பற்றிய கதை. தோட்டிகள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அவலங்களையும் சவால்களையும் நம்முள் ஆழமாகச் செலுத்துகிற நாவல். அவர்களும் மனிதர்கள்தான் என்று உரக்கக் குரல் கொடுக்கிற நாவல்.
ஒரு தோட்டிக்கு மகனாகப் பிறக்கிற கதையின்நாயகனும் விரும்பியோ விரும்பாமலோ தோட்டியாகவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான். 'தோட்டியின் மகன் தோட்டியாகவே ஆகவேண்டுமா!' என்கிற கேள்வி அவன் மனதுள் ஆழமாகப் பதிந்துபோகிறது. அதன்பின்னர் இந்தச் சமூகம் தோட்டிகளை நடத்துகிற முறையும், அவனை அவன் தொழிலின் மீது மேலும் வெறுப்படையச் செய்கிறது. இந்தச் சங்கிலித் தொடரிலிருந்து வெளிவரப் போராடுகிறான். தன்னுடைய பிள்ளையும் இந்தத் தொழிலுக்கு வந்துவிடக்கூடாதென்று அஞ்சி தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து எதிர்காலத் திட்டங்கள் வகுக்கிறான்; போராடுகிறான். அவர்களது எதிர்காலத்தை எப்படி போராடிச் சமாளிக்கப் பார்க்கிறார்கள் என்பதை உணர்வுகள் கலந்து சொல்லியிருக்கிறார்.
'தோட்டியின் மகன்' என்கிற நாவலின் மீது எழுந்த விமர்சனங்கள் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்...
1946இல் ’தோட்டியின் மகன்’ நாவல் மலையாளத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையால் எழுதப்பட்டபோது அது ஓர் ஆபாச இலக்கியமாக, நுண்ரசனைக்கு எதிரானதாகவே, சமன் குலைக்கும் அதிரடியாகவே இலக்கியவாசகர்களால் பார்க்கப்பட்டது. ஒரு தோட்டி எப்படிக் கதைநாயகனாக ஆக முடியும், அவன் வாழ்க்கையில் வரலாற்றுப் பதிவு செய்யக்கூடியதாக என்ன இருக்கிறது, பிறர் தெரிந்துகொள்ளக்கூடியதாக என்ன இருக்கிறது? அந்த வினாவுக்குத் தகழி ‘வாழ்க்கை’ என ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னார்.
புத்தகத்தின் பின் அட்டை..
Comments