'சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள்' என்ற முதலாவது பதிவு பொதுவானதாக அமைந்திருந்தது. மேலும் சில உதாரணங்கள், காரணங்களோடு, 'உள்ளம் துறந்தவன்' நாவலை முன்னிலைப்படுத்தி இரண்டாவது பதிவு..
*********************************************************************************
எதிர்பாராத தன்மைதான் அவள் சிறப்பம்சம். இத்தனைக்கும் அழகி என்று உடனே சொல்லிவிடமுடியாது. பத்து நிமிஷம் உற்றுப் பார்த்துப் பேசினால் அவள் உண்மை அழகு புலப்படும். உயரமும் இல்லாமல் குள்ளமும் இல்லாமல் கச்சிதமான உடலமைப்பு. இடக்கைப் பழக்கம், aquiline nose (டிக்க்ஷனரியைப் பாருங்கள்). எல்லாவற்றிலும் ஓரளவுக்கு ஆர்வம். எதில் ஆர்வம் என்பது தினம் தினம் மாறும். ஒருநாள் இகேபானா, ஒருநாள் கர்நாடக சங்கீதம், ஒருநாள் சூடான் நாட்டு பட்டினிக் குழந்தைகள்.- சுஜாதா (உள்ளம் துறந்தவன்)
மில்லியன் யூரோக்கள் பெறுமதியான தொழில் நிறுவனக் குழுமத்தின் உரிமையாளர் ராகவேந்தர். அவரின் அன்பிற்குரிய வளர்ப்பு மகள் மஞ்சரி. அந்நிறுவனத்தின் பெரும்பாலான ஷெயார்களை அவள் பேரிலேயே எழுதி வைத்துவிட்டார். ஏழையான அழகேசன் என்பவனைக் காதலிக்கிறாள். இந்நிலையில், இதயமாற்று சிகிச்சை செய்யவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும் ராகவேந்தரைச் சுற்றிச் சதிகள் நடக்கிறது. அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் கதையின் ஓட்டம். ஆங்காங்கே சுஜாதாவிற்கே உரிய நகைச்சுவை நுட்பங்கள் நுழைந்துகொள்ள விறுவிறுப்பாக நகருகிறது கதை.
"டி.டி.கே ரோடின் அத்தனை ட்ராபிக் மத்தியில் ஒரு குட்டி நாய் குறுக்கே கடந்து செல்ல, கார்கள் சீறி 'ஏஏய் நாயே!' என்று அதட்டின. அது கவலைப்படவில்லை."
"டி.டி.கே ரோடின் அத்தனை ட்ராபிக் மத்தியில் ஒரு குட்டி நாய் குறுக்கே கடந்து செல்ல, கார்கள் சீறி 'ஏஏய் நாயே!' என்று அதட்டின. அது கவலைப்படவில்லை."
ஷெயார் மார்க்கெட்டில் நிகழும் இன்சைடர் ட்ரேடிங், உடலுறுப்பு தானம், இதயமாற்று அறுவை சிகிச்சை, பிரைன் ஸ்டெம் டெத் என சுஜாதாவின் டீடெயில்கள் நிறையவே உண்டு.
மஞ்சரியின் காதலனான அழகேசன் கொஞ்சம் படிப்பாளி. நிறையப் புத்தகங்கள் வாசிப்பான். சுஜாதாவின் கதைகளில் யாராவது ஒருவர் நல்ல வாசிப்பாளராக இருந்து நமக்கு நிறைய விஷயங்களைச் சொல்லுவார்கள்...
'எப்படி, நான் நல்லா நடிச்சேனா? பாதிலேயே தூங்கீட்டேன். தத்ரூபமா இருந்ததுன்னாங்க. ' உறங்குவது போலும் சாக்காடு' ன்னு வள்ளுவர் சொன்னாப்ல. உடி ஆலன் ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கார்.. death is one of the few things that can be done as easily lying down.'
வள்ளுவரின் இருந்து திடீரென்று உடி ஆலனுக்கு போய்விடுவார் சுஜாதா. பிஸிக்ஸில் இருந்து ஆண்டாள் மொழிக்குப் போவார். தொடர்புபடுத்தும் வல்லமையை இயல்பாகவே வாசகர்களுக்குள் ஏற்படுத்திவிடும் உத்தி இது.
புத்தகம் வாசிக்கப் பழகுபவர்கள் கையாளக்கூடிய முறையை போகிற போக்கில் சொல்கிறார்...
புக் ஷாப்புக்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கினாள். அழகேசனுடன் சேர்ந்ததில் வந்த பழக்கம் அது... ' முதலில் சின்னப் புத்தகமாக ஏதாவது வாங்கிப் படி.. லேசான கதைகள், கட்டுரைகள். உனக்கு நாட்டமிருந்தால் கவிதைகள்... ஏதாவது புத்தகம் வாங்குவதற்கு முதலில் பழகவேண்டும். அப்புறம் அதில் தவறாமல் கையெழுத்து போடு. வாங்கின தேதி, இடம். நிச்சயம் மறுபடி அதைப் புரட்டும்போது, அடடா வாங்கி ஒரு மாசமாகி விட்டதே என்று படிக்கக் ஆரம்பிப்பாய். அப்புறம் படித்த பக்கம்வரை ஒரு அடையாளம் வை. காதை மடக்காதே. புத்தகத்துக்கு வலிக்கும்' என்பான்.
'புரிஞ்சுக்கணும், எக்சிஸ்டென்ஷியலிசத்திலிருந்து ஏ ஆர் ரஹ்மான் வரை' - சுஜாதா
Comments