வாழ்வில் ஒரு நிமிடம் நின்று இரசிக்க மறந்த, சின்னச் சின்ன இரசனைகள் கொண்டு கட்டப்பட்ட நல்ல வரிகள்(புதிய பாடல்) கேட்டுப் பல நாட்களாகிறதே எனத் தோன்றியது. கவிதாயினி தாமரை/ கவிஞர் மதன் கார்க்கி அவர்கள் ஏதாவது புதிய பாடல் வரிகள் எழுதியிருப்பார்கள் என்று புதிதாக வந்த பாடல்களைக் கொஞ்சம் தேடிப் பார்த்தேன்.
'கூட்டம்' திரைப்படத்தில் 'இத்தனை தூரம் எப்படி வந்தேன்' என்ற பாடலைக் கேட்க நேர்ந்தது. ஜேம்ஸ் வசந்தனின், வரிகளை மீறாத மெல்லிசையில் புதிய வார்த்தைகள் மனதில் எளிதாக ஊடுருவியது. இசை தமிழுக்கு இடையூறாக இருந்தால், வரிகளை மீறினால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஹரிச்சரன், சுவேதா மோகன் குரலும் உச்சரிப்பும் வரிகளுக்குத் துணை.
"கொய்து வந்த பூவின் வாசம்
கைது செய்த கையில் வீசும்"
உறங்கும் நாசி மேலே
தேநீர் வாசம் போலே
மனதின் தூக்கம் போக்கும் இவளின் வாசம்
உறங்கும் நாசி மேலே தேநீர் வாசம் போலே எனும் உவமை அன்றாடம் உணரும் ஒன்று தான். தேநீர் வாசம் உறங்கவிடாமல் தனக்கும் புலன்களுக்குமிடையே ஒரு ஈர்ப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கும். சாதாரணமாக நம் வாழ்வில் கடந்து வரும் நிகழ்வுகளை உவமானமாகப் பயன்படுத்தும் போது பிடித்துவிடுகிறது.இது மாதிரியான வரிகளை எப்போதும் கவிஞர் தாமரையிடமிருந்து எதிர்பார்ப்பதுண்டு.
"குளிரைச் சூடும் காற்றில்
இதழில் சூடு ஏற்றும்
தேநீர் கோப்பை அது உன் இதழாய் பேசும்"
இந்த வரிகளிலும் அதே ஈர்ப்புத் தான். தேநீர் பொழுதுகளை நேசிப்பவர்களுக்கு அது சார்ந்த எதுவும் பிடித்துப் போகும். அது போல இதுவும் பிடித்துப் போனதோ என்னவோ.
முழுமையான வரிகளுக்கு
Comments