Skip to main content

அவள் கவிதையானவள்

அவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.

'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன்.
தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது.
வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன்.
தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,
ஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.

அவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள்.
முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள்.
உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள்.
மதியைப் புணருங்கலை அறிந்து, புதிர் பலவாக இட்டுச் சென்றாள். இதுகாறும், முதலிலிருந்த உடலின் தீண்டல் என்பது, அக்கணம் இரண்டாம் இடமாகிப்போனது. காமம், வாக்கியங்களின் வசமாக்கிப்போன அழகை அவளிடம் கண்டேன்.

Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...