முற்றத்தில் இறங்கிய குழந்தையின், முறையற்ற முதல் நடைபோல, மனக் களிப்பும் பித்தமும் கொண்டேனடி
உந்தன் சாய்மனைக் கழுத்தில் சாய்ந்துகொள்ளப் பற்பல செந்தமிழ் வார்த்தைகள் உதிர்த்தேனடி
முன்சென்மம் நான் முகர்ந்த, முன்தானை வாசம் காட்டி, நான் துஞ்ச ஒரு கதை சொல்லடி
பின், உன் குரலால் தமிழ் பிதற்றி, நற்செவியின்பம் தந்தெனை மடியடியில் கிடத்தி வெல்வாயடி
கட்டளைத் தலைவி உந்தன் கட்டுக்குழல் சுருக்கை, என் கழுத்திலிட்டுக் காமம் கொல்வாயோ. இல்லை, கருவறை இருள்காட்டி எனை ஆற்றுப்படுத்தும் செயல்பல செய்குவாயோ
எவை புரிகினும், சிற்றம்பலம் வாழும் ஈசன் பதம் வைத்து நெஞ்சை அணைத்து ஆட்கொள்ளடி. துயர் எரித்து, நீறுபோல் எனை அள்ளி நெற்றியில் பூசிக்கொள்ளடி
மூர்க்கத்தில் நிகழும் வழுவும், முத்தத்தில் நிகழும் ஒழுக்கும், இதில் புனிதமெது பாவமெதுவென்று இங்கு எவர் சொல்வாரடி. அன்பின் அரங்கிலே புலன் ஆயிரம் திறந்து பூஜிக்க, பேறொன்று வேண்டுமடி
இப்படி, பூக்களும் பணியும்படி மென்மைத் தமிழ் உரைத்து உன்னைச் சேருவது இன்பமடி
பாசுரங்கள் பல நெஞ்சை அள்ளுவதுபோல் உனை அள்ள, ஆயிரம் பசுங்கரங்கள் வேண்டுமடி
கருத்திலும் சேருவதே பெருங்காமமென்று, என் உயிர்கொள்ளக் காத்திருக்கும் உயர்பெண்மை நீயுமன்றோ
அதைக் கண்ணுற்று நோக்கத் தெரிந்த கருவக் கவிஞன் நானுமன்றோ
செல்வத்தில் உயர்ந்தது பெண்செல்வமுமன்றோ, அதைப் பண்ணொடு பயிலவே, நான்கு வேதத்திலும் உயர்ந்த நற்றமிழ் வேதங்கள் பல உரைத்திட்டேன் கேளாய்.
Comments