கஜூராஹோ சிற்பம் - காமுறுதல் |
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா
குத்துவிளக்கு எரிகிற அறையில், ஒரு மிதமான வெம்மை இருக்கும். அந்த ஒளி தருகிற வெம்மை, அறையின் சுவர்களிலெல்லாம் பட்டுத் தெறித்து, உடல்மீது அளவோடு வந்து இறங்கும். அப்படி இறங்கும் அந்த ஒளியின் அழகுக்கு முன்னால், தரித்திருக்கும் ஆடைகூடத் தோற்றுப்போகும். ஒளியை உடல் உடுத்திக்கொள்ள விரும்பும். காரணம், விளக்கு ஒளியில் மட்டுமே, பாதி உடலின் வடிவு இருளிலும், மீதி உடலின் வடிவு ஒளியிலும் வளைந்துகொடுக்கும் அழகைப் பார்க்கலாம். காற்றில், குத்துவிளக்கின் ஒளி கொஞ்சம் அசைந்து துடிக்கையில், ஒளி உடலைத் துதிக்கும் அழகையும் பார்க்கலாம்.
அப்படிப்பட்ட அறையில், உறுதியான கால்களையுடைய கட்டில் இருக்கிறது. அதன்மீது, அன்னத்தின் இறகு, இலவம் பஞ்சு என ஐந்துவகை அடுக்குகளால் செய்யப்பட்ட மெத்தை இருக்கிறது. அந்தப் பஞ்சசயனத்துக்கு வெண்மை, வாசம் போல ஐந்து குணங்களும் இருக்கிறது. ஐந்துபுலன்களுக்கும் ஆசை வேராகும் மெத்தை.
அந்தப் பஞ்சசயனத்தின்மீது, கொத்துக் கொத்தாக மலரணிந்த கூந்தலையுடைய நப்பின்னையும் கண்ணனும் உறங்குகிறார்கள். அதிலும், நல்லதொரு கூடலுக்குப் பின்னான உறக்கம்போல, நப்பின்னையின் கொங்கைகள்மீது தலைவைத்து உறங்குகிறான். பஞ்சணை மீதே இன்னொரு பஞ்சணையை உணர்ந்த மயக்கத்தில் அவன் உறங்குகிறான். கண்ணனின் மோகம் வளர்த்த யாகத்தில் நப்பின்னை உறங்குகிறாள்.
இப்படி மயங்கிப் போயிருக்கும் இருவரையும் ஆண்டாள் எழுப்புகிறாள். உன் கணவனை ஒருகணமேனும் பிரியமாட்டாயா என்று நப்பின்னையைக் கேட்கிறாள். கதவைத் திறவுங்கள் என்று கேட்கிறாள். இப்படியாக, ஆண்டாளின் தமிழ் என்பது காட்சியாகப் படித்துச் சுவைக்கக்கூடியது.
இந்த நப்பின்னை, யசோதையின் தமையனின் மகள் என்று சொல்லப்படுகிறது. கண்ணன், ஏறுதழுவி(ஏழு காளை அடக்கி) இவளை மணந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. நப்பின்னை, கண்ணனின் மாமன் மகள்.
'ஹலோ மிஸ் இம்சையே' பாடலில், வாலி 'அம்மான் மகளே, என்னை அசத்தும் ஆழ்வார் குழலே' என்று நப்பின்னையைச் சொல்கிறாரா, இல்லை, ஆண்டாளைச் சொல்கிறாரா, இல்லை இருவரையும் சேர்த்துச் சொல்கிறாரா எனத் தெரியவில்லை. 'உன்னாலே உன்னாலே' படத்தில் நாயகனுக்குப் பெண்கள்மீது விருப்பம் இருக்கும். ஆனால், சதாமீது காதல் இருக்கும். கூடவே இன்னொரு பெண்மீதும் கொஞ்சம் விருப்பம் இருக்கும். அதனால் இப்படிப் பயன்படுத்தினாரா தெரியாது.
'ஹலோ மிஸ் இம்சையே' பாடலில், வாலி 'அம்மான் மகளே, என்னை அசத்தும் ஆழ்வார் குழலே' என்று நப்பின்னையைச் சொல்கிறாரா, இல்லை, ஆண்டாளைச் சொல்கிறாரா, இல்லை இருவரையும் சேர்த்துச் சொல்கிறாரா எனத் தெரியவில்லை. 'உன்னாலே உன்னாலே' படத்தில் நாயகனுக்குப் பெண்கள்மீது விருப்பம் இருக்கும். ஆனால், சதாமீது காதல் இருக்கும். கூடவே இன்னொரு பெண்மீதும் கொஞ்சம் விருப்பம் இருக்கும். அதனால் இப்படிப் பயன்படுத்தினாரா தெரியாது.
ஆனால், இந்த வார்த்தைப் பிரயோகம் அத்தனை அழகு. படத்தில் இருக்கும், கஜுராஹோ சிற்பத்தில் குழலுக்குள் கைகள் இருக்கும். ஒருகை அவள் குழலைப் பிடித்திருக்கும். அவளின் கை, அவன் குழல்களை அணைத்திருக்கும். இதனின் அற்புதமான காட்சி விபரிப்புத்தான் ஆண்டாளின் தமிழ். அதை, உணர்ந்து இரசித்துப் படிக்கவேண்டும். மேலே உள்ள பாடல்வரிகளில், காமத்தில் ஐந்துபுலன்கள் பெறவேண்டிய இன்பத்தையும் ஒளித்துவைத்திருக்கிறாள்.
Comments