சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.
அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.
"நெருநல் எல்லை யேனல் தோன்றித்
திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து
புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள
இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றிச்
சிறுதினைப் படுகிளி கடீஇயர் பன்மாண்
குளிர்கொள் தட்டை மதனில புடையாச்
சூரர மகளிரின் நின்ற நீமற்
றியாரை யோவெம் அணங்கியோய் உண்கெனச்
சிறுபுறங் கவையின னாக அதற்கொண்
இகுபெயல் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென்
உள்ளவன் அறிதல் அஞ்சி உள்ளில்
கடிய கூறிக் கைபிணி விடாஅ
வெரூஉமான் பிணையின் ஒரீஇ நின்ற
என்னுரத் தகைமையில் பெயர்த்துப்பிறி தென்வயிற்
சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்
தினந்தீர் களிற்றிற் பெயர்ந்தோன் இன்றுந்
தோலாவா றில்லை தோழிநாம் சென்மோ
சாயிறைப் பணைத்தோட் கிழமை தனக்கே
மாசின் றாதலும் அறியான் ஏசற்
றென்குறைப் புறனிலை முயலும்
அண்க ணாளனை நகுகம் யாமே"
தன் மகளைத் தினை விளையும் புலத்திற்குத் தாயார் அனுப்பியிருக்கிறாள். அங்கே பயிர்களை உண்ண வரும் கிளிகளை விரட்டுவது அவள் வேலை. இப்படி ஒருநாள் அவள் காவல் காத்துக்கொண்டிருக்கையில் அவளைப் பார்க்கிற தலைவனுக்கு அவள்மேல் காதல் வந்துவிடுகிறது. அவளுக்கும் அவன் மீது விருப்பம். ஆனால் அவள் அதை வெளிக்காட்டவில்லை.
பெண்மையின் இயல்புகள் அவளைத் தடுக்கிறது. அவன் நெருங்கி வந்து மெல்லிய காதல் வார்த்தைகள் பேசுகிறான். பார்க்க அரசன் போல தோற்றமுடையவன் அவள் மீதிருக்கும் காதல் மிகுதியால் அவளிடம் பணிந்து பேசுகிறான். முதலில் அவள் அழகையும் மென்மையையும் புகழ்கிறான். "அருமையான கருவிகளை வைத்துக்கொண்டு இப்படி மென்மையாகத் தட்டினால் கிளி எப்படிப் பயந்து ஓடும்" என்று அவள் கைகளின் மென்மையைப் பாராட்டுகிறான்.அப்படியே, "தேவலோகப் பெண்ணே! உன் அழகு எனக்குத் துன்பம் தருவிக்கிறது. நீ யார்! உன் பெயரென்ன?" என்று கேட்கிறான்.
அவள் சிறுபுறம் சேர்ந்து அவளை அணைத்துக்கொண்டு, "என்னை வருத்துகிறவளே உன் அழகை நுகரவேண்டும் போல இருக்கிறது" என்று தன் காதலை வெளிப்படுத்துகிறான். அவன் அப்படித் தீண்டியதும், ஒரு கடும்மழை பெய்தால் மண் எப்படிக் குழையுமோ அதுபோல இறுகிக்கிடந்த அவள் மனது குழைந்துபோய்விடுகிறது. கடும்மழை பெய்யும்போது மழைநீர் எப்படி மண்ணின் ஆழமெல்லாம் சென்று சேருமோ அதேபோல அவன் அணைப்பு அவள் உணர்வுத்தளங்கள் எல்லாவற்றையும் இளகச் செய்துவிட்டது. தலைவன் அவ்வளவு மென்மையானவன்.
அதேநேரம் அவள் நடுக்கம் கொள்கிறாள். 'இவனை முன்பின் தெரியாது. இவனை நம்பலாமா' என்று சிந்திக்கிறாள். அப்படி நெகிழ்ந்து வருந்திய தன் குழப்ப நிலையை அவன் உணரக்கூடாதுன்னு அவள் முடிவு செய்கிறாள். அவனுக்குத் தன் காதல் தெரிந்துவிடக்கூடாதென்று வம்பு செய்கிறாள். எங்கள் குறைகளை மறைக்கச் சிலநேரங்களில் கோபம் வருவதுபோல நடிப்போம். அதே உத்தியை அவளும் கையாள்கிறாள். கைகளைத் தட்டிவிட்டு கடுமையான வார்த்தைகளைப் பேசி வெருண்ட பெண்மானைப் போல ஓடுகிறாள்.
இந்தச் செய்கையைப் பார்த்த தலைவன் மிரண்டுபோகிறான். அவன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவள் பார்வையிலே விருப்பம் இருப்பதை அறிந்துதான் அவன் நெருங்கினான். இவள் கடும் சொற்களைப் பேசியும் அவன் எதுவுமே பேசாமல் நிற்கிறான். "நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்" என்பதுபோல பேச வார்த்தைகள் இன்றி நிற்கிறான். பிறகு, கூட்டத்திலிருந்து பிரிந்த ஒரு யானை எப்படித் தனியாகப் பிரிந்துபோகுமோ அதைப்போல அவன் பிரிந்து போனான். உண்மையில் அவன் ஏமாந்தது அவளுக்குக் கவலைதான். அவள் நேசிக்கிறவன் ஆயிற்றே! அவனை அவளே ஏமாற்றலாமா! உண்மையில் அவள் ஏமாற்றவில்லை. இந்த நிகழ்வுகள் அனைத்தும் முதல் நாள் நிகழ்ந்தவை.
இரண்டாவது நாள், முதல் நாள் நிகழ்ந்த அனைத்தையும் தன் தோழிக்குச் சொல்கிறாள். அவன் இரண்டாவது நாளும் வந்து தோற்காமலா போகப்போகிறான் என்கிறாள். உண்மையில் அவன் இன்றாவது தன்னை வென்றுவிடவேண்டும் என்பதுதான் அவள் எண்ணம். "இந்தத் தோள்கள் அவனுக்குத்தான் சொந்தம். அவன் கிடைக்க நான்தான் கொடுத்துவைத்திருக்கவேண்டும். ஆனா, இது புரியாமல் அவன் என்னிடமே வந்து என்னைக் காதலி என்று கெஞ்சுகிறானே என்று தோழிக்குச் சொல்கிறாள். இதை எண்ண அவளுக்குச் சிரிப்பும் வந்துவிடுகிறது.
அவனை அவள் 'அண்கணாளன்' என்கிறாள் . அவன் எனக்கு அருகில் என் கண்களிலும் நெஞ்சுக்குள்ளேயும் இருக்கிறான் என்கிறாள்.
ஒரு பெண்பாற்புலவர் ஒரு பெண்ணினுடைய உணர்வை உடல் மற்றும் உளம் சார்ந்து வெளிப்படுதுவதுபோலவே வைரமுத்துவும் இலக்கிய நயத்தோடு 'கண்ணாளனே" என்கிற பாடலை எழுதியிருக்கிறார். அவள் கண்ணுக்குள்ளேயே இருக்கிறான் அவன். முதல் நாள் சந்தித்துக்கொள்கிறார்கள். அவன் பெயர்கூட அவளுக்குத் தெரியாது. அவன் பேசவில்லை . சங்ககாலத் தலைவி போலவே இரண்டாவது நாள் அவன் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள் இவள். பேசினால் இவள் வருத்தம் தீரும்.
"கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை.
என் கண்களைப் பறித்துக்கொண்டும் ஏன் இன்னும் பேசவில்லை.
என் கண்களைப் பறித்துக்கொண்டும் ஏன் இன்னும் பேசவில்லை.
ஆளான ஒரு செய்தி அறியாமலே அலைபாயும் சிறுபேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடமாறும் ஏனோ
வாய்பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ"
வாய்பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ"
வரண்ட மண் போல இருந்த சங்கத்தலைவியின் மனதை மழைத்துளிகள் துளைத்துச் சென்று குளிர்வித்து அவள் உடலை நடுங்கச் செய்ததுபோல மூங்கில் காடு போன்ற இவள் மனதில் தீ போல அவன் நுழைந்துவிடுகிறான். "நானாவது காதலில் விழுவதாவது. நான் மிகவும் உறுதியானவள்" என்று தலைவிகள் பொய் உரைப்பார்கள் என்று நினைக்கிறேன். அதன்பிறகு தோழியையும் தன்னையும் தேற்றுவதற்கு "நான் உறுதியாத்தான் இருந்தேன். அவன்தான் அதையும் மீறி வந்துவிட்டான்" என்று சொல்வது நயமானது. இதே உணர்வை, "எங்கே எனது கவிதை" என்கிற பாடலில் வைரமுத்து, "பாறையில் செய்தது என மனமென்று தோழிக்குச் சொல்லியிருந்தேன். பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்" என்று எழுதியிருப்பார்.
"இரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும் பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது"
"இவனைத்தானே நான் இழந்துவிடக்கூடாது! இவன் என்னிடமே வந்து காதலை இரந்து கேட்கிறானே" என்று புன்னகை செய்கிறாள் சங்கத்தலைவி. வைரமுத்துவின் தலைவி கொஞ்சம் மேலே சென்று "உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேன் இல்லை" என்கிறாள். நீயின்றி மலர்களைக்கூட நான் ரசிக்கப்போவதில்லை/ரசிப்பதில் அர்த்தம் இல்லை என்றும் அவள் எண்ணுவதாகப் பொருள் கொள்ளலாம். அதேநேரம், என் பெண்மை மலர்கள் எதிலும் தேன்/உயிர் இருக்காது என்றும் கருதலாம்.
Comments