Skip to main content

வடமாகாணத்தின் நிலையான அபிவிருத்தியை நோக்கிய பயணம்




தமிழர்களின் பூர்வீகப் பிரதேசமான இலங்கையின் வடக்கு மாகாணம் புவியியல், அரசியல், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. அத்தோடு நீண்டகால அபிவிருத்தி, ஆண்டாண்டு காலமாக அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும்  தமிழ் மக்களின் எதிர்காலம், கட்டமைப்பு ஆகியவை மிகப்பெரும் அபாயத்தையும் சந்தித்து நிற்கிறது.  இவற்றைக் கட்டியெழுப்பவும் தகர்த்து எறியவும்  வேண்டிய கடப்பாடு உலகெங்கிலும் வாழும் ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது. புத்திஜீவிகள், கல்விமான்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பொருளாதார வல்லுனர்கள், தனியார் நிறுவனங்கள், சுயதொழிலில் ஈடுபடுவோர், சமூக நலன்விரும்பிகள், பிரதேச மக்கள், புலம்பெயர் தமிழர்கள்  எல்லோரையும் சந்தித்துப் பேசியதில் ஒரு பிரதான குறைபாடு ஒன்றைக் காணமுடிந்தது. இவர்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் இணைப்பதற்குரிய கட்டமைப்புகள் இன்னமும் சரியாக உருவாக்கப்படவில்லை. ஒவ்வொருவரும் தன்னிச்சையாகச்  சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தத் தனிமனித முயற்சிகள் ஒன்றாகச் சேரும்பொழுதே  பலம்பொருந்திய ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படும். அப்பொழுதுதான் ஒரு நிலையான அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கமுடியும்.  ஒருவரையொருவர் புறந்தள்ளி தன்னிச்சையாகச் செயற்படத்தொடங்கியதும் நம்முடைய வீழ்ச்சிக்குக் காரணம் என்பது தமிழர்களின் வரலாற்றினை அறிந்தவர்களுக்குப் புரியும். இப்போதும் அரசியல்வாதிகளுக்கும் புத்திஜீவிகளுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது.

நில ஆக்கிரமிப்பும் சிங்களமயமாக்கலும்

இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் செல்கிற இடமெங்கும் இராணுவ முகாம்களைப் பார்க்கலாம். முல்லைத்தீவினை இலங்கையின் மிகவும் வறுமையான மாவட்டம் என்று உலக வங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களைச் சந்தித்திருந்தபோது சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினதும் அரசினதும் தலையீடுகள் பற்றிக் கூறியிருந்தார். ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் A9 வீதியூடாகச் செல்லும்போது வலப்பக்க வனப்பகுதியில் 1703 ஏக்கர் நிலம் இராணுவத்துக்கான கிராம திட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார். மேலும் புலிபாய்ந்த கல்லில் ஆழ ஊடுருவும் படையணி 170 ஏக்கர் நிலத்தினை ஆக்கிரமித்திருப்பது பற்றியும் குறிப்பிட்டார். இவை அனைத்தும் அரசின் உத்தியோகபூர்வ அறிக்கைகளில் உள்ளடக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். 

முல்லைத்தீவில் படுகாட்டுக் குளம், நாயாறு, கொக்கிளாய், கொக்குதொடுவாய் போன்ற பிரதேசங்களைத் திட்டமிட்டுச் சிங்களமயமாக்கும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திருகோணமலையையும் முல்லைத்தீவையும் இணைக்கும் எல்லைப் பகுதிகளை இலக்காக வைத்து இந்தச் சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. படுகாட்டுக் குளத்தை அண்டிய பிரதேசங்களில் இருந்த தமிழ் மக்களுக்கு உரிமையான விவசாயக் காணிகளில் சிங்கள மக்கள் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்கிறார்கள். பெரும்பாலும் வளமிக்க இடங்களாகவும் வடக்கின் முக்கியமான இடங்களாகவும் பார்த்துச் சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்த்தப்படுகிறது. சிங்களக் குடியேற்றங்களுக்குப் பாதுகாப்பாக அவற்றை அண்டிய பிரதேசங்களில் இராணுவ முகாம்களும் காணப்படுகிறது.

கிளிநொச்சியில் இரணைமடு குளத்தின் அணைக்கட்டு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலை 

இராணுவ வெற்றிக் காணொளியை ஆனையிறவில்  பார்வையிடும் சிங்கள மக்கள்  
முல்லைத்தீவு, ஆனையிறவு போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சின்னங்கள், யுத்த அடையாளங்கள், புதிதாக அமைக்கப்பட்ட புத்த கோயில்களைப் போன்றவற்றைப் பார்வையிடவே பெரும்பாலான சிங்கள மக்கள்  தெற்கிலிருந்து வருகிறார்கள். நினைவுச் சின்னங்களை அண்டிய பிரதேசங்களில் சிங்களக் கடைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் சில இராணுவத்தால் நடத்தப்படுகிறது. பெயர்ப் பலகைகள் எல்லாம் ஏன் சிங்களத்தில் இருக்கிறதென வினவியபோது, "இங்கு சிங்கள மக்கள் மட்டுமே இவற்றைப் பார்வையிட வருகிறார்கள்" என்று அங்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் சொன்னார். மேலும் தினமும் நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் பஸ்களிலே யுத்த வெற்றிச் சின்னங்களைப் பார்வையிட வருகிறார்கள் என்றார். இவைதான் நல்லிணக்கத்தின் அடையாளமென்று இலங்கை அரசு சொல்லிக்கொண்டிருக்கிறது.

முல்லைத்தீவில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ வெற்றிச் சின்னம் 
இந்த வெற்றிச் சின்னங்கள் எல்லாம் யுத்தத்தால் தமிழ் மக்கள் உயிர் உடமைகளை இழந்து திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் வாழ்ந்துகொண்டிருந்தபோது அமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 


கல்வியும் வேலைவாய்ப்பும் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தம் 21,000 பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள் தெரிவிக்கிறார்கள். பெரும்பாலும் யுத்தத்தினாலும் கல்வியைக் கைவிட்டவர்கள் அதிகம் பேர் இருப்பதால் இவர்களுக்குத் தகுந்த தொழிற்பயிற்ச்சியை வழங்குவதன் மூலமும், சிறு கைத்தொழில், சிறு தொழிற்சாலைகள் அமைப்பதன் மூலமும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க முடியும். 

ஒருகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய வடமாகாணம் தற்போது கல்வியில் மிகவும் பின்தங்கியிருப்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம். வவுனியாக் கல்லூரித் தலைவரைச் சந்தித்தபோது அங்கே கல்வி கற்கும் மாணவர்களில் 70 வீதமானோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த சிங்கள மாணவர்கள் என்று சொல்லியிருந்தார். தமிழ் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அரச வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார். சிங்கள மாணவர்கள் புதிய தொழில் முயலுனர்களாக வருவதாகவும் குறிப்பிட்டார். தமிழ் மாணவர்கள் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது குறைவு என்றும் அதற்கான காரணம் முயற்சிகளை ஊக்குவிக்கத் தகுந்த கட்டமைப்புகள் உருவாகவில்லை என்றும் கூறியிருந்தார். 

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் 'Managers forum' என்கிற அமைப்பின் உறுப்பினர் நிரஞ்சன் நடராஜாவினைச்(Manager, Consumer Credit and Risk, Asia Pacific Risk, HSBC) சந்தித்தபோது புதிய தொழில்முயலுனர்களை ஊக்குவிக்கும் செயற்திட்டங்களைத்  தாம் மேற்கொள்ளவிருப்பதாகச் சொன்னார். வடக்கிலிலுள்ள பெரும்பாலான தொழில் முயலுனர்களுக்கு வியாபாரத் திட்ட அறிக்கைகள் தயாரிப்பது போன்றவற்றில் பிரச்சனை இருப்பதாகச் சொன்னார். மேலும் புதிய தொழிலினை முயலும்போது அவற்றைச் சரியாக வழிநடத்துவதில் குறைபாடுகள் இருப்பதாகவும் அவற்றைச் சீர் செய்வதே தமது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல் - குறள் 

பொருள்: ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்..

பொருளாதார வளர்ச்சி  

வடமாகாணத்தின் பொருளாதார முன்னேற்றத்தினைப்  பொருத்தவரைக்கும் சர்வதேச நாடுகள் நிதி வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவற்றைப் பயன்படுத்தக்கூடிய கட்டமைப்பு இன்னமும் உருவாக்கப்படவில்லை என்றும் புதிதாக உருவாக்கப்பட்ட IRDG என்கிற Think tank அமைப்பினைச் சேர்ந்த எஸ். ரங்கராஜன்  அவர்கள் குறிப்பிட்டார். இவர் வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னால் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 2008-2011 வரை வடமாகாண ஆளுநரின் செயலாளராகவும் செயற்பட்டவர். 

வடமாகாணத்தைப் பொருத்தவரைக்கும் கிராமியப் பொருளாதாரம்தான் முன்னர் நல்ல திறமையான சமுதாயத்தை நமக்கு உருவாக்கித் தந்தது என்று சொன்னார். குறிப்பாக, 'Dual economy'யின்  அவசியம் பற்றிக் கூறினார். பெரிய நிறுவனங்கள் வரவேண்டியது அவசியமென்றும் அதேநேரம் அவை பிரதேச மக்களுக்கு நன்மை விளைவிக்கக்கூடிய வகையில் அமைக்கப்படவேண்டும் என்றும் கூறினார்.  வீழ்ந்திருக்கும் இலங்கையின் பொருளாதாரம் தலைதூக்கக் குறைந்தது மூன்று வருடங்களாவது ஆகுமென்றும், இந்தக் காலப்பகுதியை நாம் சரியாகப் பயன்படுத்தி எல்லாத் துறைகளிலும் முன்னேறவேண்டும் என்றும் கூறினார். இப்போதைக்கு இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைப் பொருத்தவரைக்கும் தமிழர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார். அதேநேரம் புவிசார் அரசியலைப் பொருத்தவரைக்கும் முக்கியமான கருத்து ஒன்றினையும் முன்வைத்தார். "இந்தியா தமிழ் மக்களைப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்றும், தமிழர்களும் இந்தியாவைப் பயன்படுத்தத் தவறிவிட்டார்கள் என்றும், ஆனால் சிங்கள அரசு இந்தியாவைப் பயன்படுத்தும் உத்தியை அறிந்துவைத்திருக்கிறது என்றும் கூறினார். 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு 

பிளாஸ்டிக் - கழிவு மீள்சுழற்சி மையம் - வடமாகாண சபை 

அபிவிருத்தி என்று வரும்போது அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிகழ்த்தப்படவேண்டும். யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளுக்குச் செல்லும்போது கடலின் இருமருங்கிலும் பிளாஸ்டிக் கழிவுகளைக் காணலாம். பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் வீசிச்செல்லும் பிளாஸ்டிக் பைகள் நிறைந்து காணப்படுகிறது. பிளாஸ்டிக் - கழிவு மீள்சுழற்சி மையத்தில் உக்கக்கூடிய கழிவுப்பொருட்களைக் உரமாக்கி விற்கிறார்கள். அதேநேரம் பிளாஸ்டிக், பொலித்தீன்  கழிவுப் பொருட்களை வெளி நிறுவனமொன்றிற்கு விற்கிறார்கள். பிளாஸ்டிக் கழிவுகளை சரியாக மீள்சுழற்சி செய்யும் பொறிமுறை இல்லாததால் இப்போதைக்கு வெளி நிறுவனமொன்றிற்குக் கொடுத்திருப்பதாக அதன் நிர்வாக அதிகாரி தெரிவித்தார். வடமாகாணத்தில் நீர்ப் பிரச்சனை மிகவும் முக்கியமானதொரு பிரச்சனை. ஆழ்நீரினைப் பாதுகாக்கச் சரியான பொறிமுறை ஒன்று  இல்லையென்றும் கூறினார். இதே கருத்தினை Think tank அமைப்பின் எஸ் ரங்கராஜன் அவர்களும்  தெரிவித்திருந்தார். கடலை அண்டிய பிரதேசங்களில் இருக்கும் கிணற்றில் உப்புநீர் கசிவு மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிராமப்புற மக்களுடன் பேசியதில், அவர்களுக்கு அரசு உதவிகள் மற்றும் அரச செயற்பாடுகளிலிருந்து நன்மையைப் பெற்றுக்கொள்வது குறித்த அறிவூட்டல் நிகழ்ச்சியும் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. ஒரு நிலையான அபிவிருத்திக்கு எல்லாவிதமான மக்களினதும் பங்களிப்பு மிகவும் அவசியமானது. 

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ