Skip to main content

ஒரு நாள் கூத்து


நாம் தினமும் யாரையாவது கெட்டவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொண்டிருப்பதில்லை. எதனையும் திருத்த முற்படுவதில்லை. ஒவ்வொரு சிறிய தீர்மானத்தின்போதும் எங்களைச் சுற்றி இந்தச் சமூகம் கட்டமைத்திருக்கிற விதிமுறைகளையும் சிந்தனைத் திணிப்புகளையும் வைத்துக்கொண்டு எங்கள் சுயத்துடன் போராடிக்கொண்டிருக்கிறோம். சிலநேரங்களில் எங்களை எங்களிடமிருந்தே காப்பாற்றிக்கொள்ள முடிவதில்லை. எங்கள் முடிவுகளே எங்களைக் கைவிட்டுவிடுவது உண்டு. இவற்றைப் பற்றிய புரிதல் இருந்தால் வாழ்வு மகிழ்ச்சியாய் அமையும். இல்லையேல் சதாகாலமும் இன்பத்தைத் தேடி வாழவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம். இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது காதலும் திருமணச் சந்தையும்தான். இதை "ஒரு நாள் கூத்து" திரைப்படம் முழுவதுமாகச் சொல்ல முற்பட்டிருக்கிறது. பெண்களுக்காகப் புரட்சி செய்கிறேன் என்று வலிந்து காட்சிகளைத் திணிக்காமல் போகிற போக்கிலேயே நிறைய விஷயங்களைச் சொல்லிச் செல்கிறது. இந்தப் படத்தில் வருகிறவர்களிடம் திடமான மனநிலை இல்லை.அதேநேரம் திருப்திகரமான மனநிலையும் இல்லை. இது பெரும்பாலானோரின் இயல்பான மனநிலை. ரித்விகாவை பெண் பார்த்தவன், அவளை மணந்துகொள்ளச் சம்மதிக்கிறான். ஒருநாள் வேறொரு திருமணம்செய்துகொள்ளப்போகிற புதிய ஜோடி அவனுக்குத் திருமண அழைப்பிதழ் கொடுக்க வருகிறார்கள். தன் நண்பன் திருமணம் செய்துகொள்ளப்போகிற பெண் அழகாயிருப்பதைக் கவனிக்கிறான். அவள் படிப்பில் நிறையப் பட்டங்கள் பெற்றவள் என்பதையும் கவனிக்கிறான். உடனே தான் மணந்துகொள்ளப்போகிற ரித்விகாவின் புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து இவள் அழகிதானா எனச் சிந்திக்கிறான். ஒப்பிட ஆரம்பிக்கிறான். அவள் வெறும் வானொலி அறிவிப்பாளர். அவளுக்கு எந்தவிதமான சிறந்த கல்வித்தகுதியும் இல்லை என்பதைக் கவனிக்கிறான். மனக் குழப்பத்தில் நிற்கிறான். அப்போது ஒருவரிடம் அறிவுரை கேட்கிறான். "பிடிக்கலன்னா கல்யாணத்தை நிறுத்திடலாம். அது அந்தப் பொண்ணுக்கு நல்லது. இப்போ கல்யாணம் செஞ்சுக்குவீங்க. அப்புறம் அவ செய்கிற ஒவ்வொரு விஷயமும் எரிச்சலைத்தரும்" என்று சொல்கிற வசனம் அவ்வளவு நுணுக்கமானது. இப்படிச் சகித்துக்கொண்டு செய்யப்படும் திருமணங்கள் பின்நாட்களின் நிறையப் பிரச்சனைகளைத் தோற்றுவிப்பது உண்டு. ரித்விகா பின்னர் இன்னொருவனைக் காதலிக்கிறாள். அவனும் தன் சௌகரியத்திற்குத் தகுந்தாற்போல வேறொரு திருமணம் அமைந்ததும் அதை ஒப்புக்கொள்கிறான். காதலித்துக்கொண்டிருக்கும் காவ்யாவும் ராஜ்குமாரும் மனம்விட்டுப் பேசவில்லை. அவனால் தன் பொருளாதார நிலையைச் சீர் செய்யாமல் அவளைத் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை. கொஞ்சம் கால அவகாசம் கேட்கிறான். இந்த இடைவேளியைப் பயன்படுத்திக்கொள்ளும் காவ்யாவின் தந்தை காவ்யாவுக்கு வேறொரு வசதியான இடத்தில் மாப்பிளை பார்த்துவிட்டு அவளுக்கு அறிவுரை வழங்குகிறார். இதைக் கேட்டதும் அவளுக்கு மனக்குழப்பம் ஏற்படுகிறது. இதைச் சரியாச் சீர்செய்துகொள்ள முடியாததால் இருவரும் பிரிகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் மனம் விட்டுப் பேசுகிறார்கள். ஆனால் அது காலம்கடந்த பேச்சாகி விடுகிறது. இருவரும் ஒருவரையொருவர் இழந்துவிட்டதை நினைத்துப் பின்னர் வருந்துகிறார்கள். லக்ஷ்மியின் தந்தை அவரின் தகுதிக்கு ஏற்ற மாப்பிளையைத் தேடுவதால் அவள் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது. இத்தனைக்கும் திருமணம் செய்துகொள்ளப்போகிறவள் அவள். இப்படியான மூன்றாம் நிலைக் காரணிகளாலும் காதலும் திருமணச் சந்தையும் பாதிக்கப்படுவதையும் இந்தத் திரைப்படம் சொல்கிறது. எங்கள் கலாச்சாரத்தில் காதலும் திருமணமும் எப்படி முடிவு செய்யப்படுகிறதென்பதை நகுலனும் தன் கதை ஒன்றில் இப்படிச் சொல்கிறார்: "காதலைப் பற்றி என் விசாரணை தொடர்ந்தது. குடும்பத்தின் நிலையை அறிந்து, அப்பா, அம்மா செல்வாக்கிற்காக, ஆரோக்கிய ரூபத்திற்காக, அடிப்படை அவசியங்களுக்காக ஒரு துணையைத்தான் நாம் நாடுகிறோம். ஆணும் பெண்ணும் இருதனி விசேஷந்தாங்கிய கொள்கை ரூபம் பெற்ற, காதல் பெற்று வாழும் முயற்சி இந்நாட்டில் இல்லை"


Comments

Haran said…
மிக நேர்த்தியாக திரைக்கதை எடுத்தாளப் பட்டிருக்கும்.. கதையின் பிரதான பாத்திரங்கள் மூன்றிற்கும் திருமணம் ஆகிருக்காது கடைசிவரை.. அவர்களுக்கு துணையாக வரும் சப்போர்டிங் பாத்திரங்கள் எல்லாருக்கும் திருமணம் ஆகிவிடும்.. வலிந்து திணிக்காமல் உண்மைநிலைக்கு மிக்கப்பக்கத்தில் உள்ள வெளியில் படம் பயணிக்கிறது. அதில் எனக்கு ராஜ்குமார் பாத்திரம் என்னை பிரதிபலித்ததாகத் தோன்றியது. அந்த குடும்ப சூழல்.. ஒரு தாழ்வு மனப்பான்மையைச் சுற்றி அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரம்..போன்றவை.
ஒரு வாழ்வு முறைகளில் தலைமுறைகள் முன்னோக்கி செல்லும் ஒரு மேம்பட்ட குடும்பத்திலிருந்து வளர்ந்த பொண்ணை காதலிக்கிறார்.. எல்லா இடங்களிலும் ரியாலிட்டியை விட்டுக்கொடுக்காத இயக்குனர் இங்கு மட்டும் கொஞ்சம் சினிமாத்தனம் காட்டிவிட்டார்.. இதே காரணங்களுக்காக காதலிக்காமல் இருக்கும் நண்பர்கள் நிறைய எனக்கு தெரியும்.நானும் அத்தகையோனே.. உணக்கெதுக்குடா தேவ இல்லாத வேலைன்னு திட்டிக்கொண்டே படம் பார்த்து முடித்தேன்..
சிறப்பான வரிகள். திரைப்பட விமர்சனமாக மட்டுமல்லாமல் நிகழ்காலத்தை படம்பிடித்துக் காட்டிய எழுத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...

மதன் கார்க்கி வரிகளின் ரசிகனாய் - 180 பாடல் வரிகள்

பாடல்கள் என்றால் முதலில் அதில் வரிகளை உன்னிப்பாக ரசிப்பவன் நான் . வரியோடு சேரும் போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும் . இதற்க்கு ஒரு காரணம் வைர வரிகளின் சொந்தகாரர் வைரமுத்து அல்லது  வரிகளிலேயே  இசை கொண்டுவரும் கண்ணதாசனின் வரிகளாகவும் இருக்கலாம் . எல்லாவற்றையும் விட தமிழின் அழகை உணருவது மிக முக்கிய காரணமாக இருக்கலாம் . ஆனால் அழகான தமிழ் சொற்களை கொண்டலாய்( :-) ) பொழியும்  மதன் கார்கியின்  மீதான ஈர்ப்பே இரும்பிலே ஒரு இருதயத்தில் இருந்து தொடர்கிறது  . புதிய படமான  180 இல் மதனின் பாடல் வரிகளை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பை சற்றும் குறைக்கவில்லை .முன்னைய கார்கியின் வரிகளுக்கான  பதிவு .. முதலில் ரசித்த பாடல் ..... சந்திக்காத கண்களில் .... -பாடலை  கேட்க்க சந்திக்காத கண்களில் இன்பங்கள்  செய்ய போகிறேன்  சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்  பெய்யப்போகிறேன் ... குவியமில்லாவுக்கு பிறகு ஈர்த்த சொல் கொண்டலாய் . கொண்டலாய் என்றால் மேகம்  . சிந்திக்காது சிந்திடும் மேகம் .அழிந்து வரும் அழகான சொற்கள் அறிம...