மணிரத்னத்தின் 'இராவணன்' திரைப்படத்தில் வீரா(இராவணன்) ஒரு மிகப்பெரிய கூட்டத்துக்குத் தலைவன். மிகுந்த பலசாலி. இந்த இராவணனுக்குக் காதல் வருகிறது. "உசுரே போகுதே" என்கிற பாடல் காதல் வசப்பட்ட அவனது மனநிலையைச் சொல்கிறது. அதன் துடிப்பைச் சொல்கிறது. அவ்வளவு திறமையான ஒரு மகாவீரன் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு தன்னிலை மறந்துபோகிறான். காதல் எதனையும் பொருட்படுத்துவதில்லை என்று சொல்லுவார்கள். இங்கே அவன் நிலையையே அவன் பொருட்படுத்தவில்லை. என்னை இந்தப் பெண் வருத்துகிறாளே என்று அவன் சொல்கிறபடி பாடல் அமைகிறது.
இதேபோல குறுந்தொகையில் தலைவனுக்குக் குழப்பம் வருகிறது. வருகிற வழியில் "உனக்கு என்ன ஆச்சு"ன்னு பாங்கன் கேட்கத் தலைவன் இப்படிச் சொல்கிறான்.
"வெள்ளைப் பாம்போட சின்னக் குட்டிப் பாம்பு இருக்கே! அதுக்கு உடம்பெல்லாம் வரி வரியா இருக்கும். ரொம்பச் சின்னது. ஒரு பெரிய காட்டு யானைகூட அதைப் பாத்துச்சுன்னா நிலைகுலைந்து போய்டும் ! அதுபோல இந்த இளையவளின் நாணல் முளை போன்ற ஒளிரும் பற்களும் வளைக்கரங்களும் இத்தனை படைகள் வென்ற என்னை நிலைகுலையைச் செய்கிறதே!" என்கிறான். அவள் இளமையும் வளையல்களும் பாம்பின் இளமைக்கும் வரிகளுக்கும் ஒப்பிடப்படுகிறது. இப்படியாக அவளுடைய சிறிய பாகங்களும் என்னை வறுத்துகிறதே என்று அவன் சொல்கிறான்.
பாடல் :
சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கியாஅங்கு
இளையள், முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள் எம் அணங்கியோளே
இப்படியான ஒப்பீடுகளை வைரமுத்துவின் வரிகளில் அதிகம் கவனிக்கலாம். உதாரணமாக , "என் ஆறடி உயரத்தை அபகரித்தாய் உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்", " கூந்தல் நெழிவில் எழில்கோலச் சரிவில் என் கர்வம் அழிந்ததடி" போன்ற வரிகளைக் குறிப்பிடலாம். வைரமுத்துவின் வரிகளில் பெண்கள் ஆண்களின் கர்வத்தை அடக்கிவிடுவார்கள். ஆனால், " உசுரே போகுதே" என்கிற பாடலிலும் "காட்டுச் சிறுக்கி"யிலும் இப்படியான ஒப்பீடுகள் அதிகம். இராவணன் ஒரு பெரிய படைத்தலைவன். அவனுக்குக் காதல் வந்தால் எப்படியிருக்கும் என்று எழுதுகிறார் வைரமுத்து. அவள் ஏற்கனவே திருமணமான பெண். ஆதலால் இந்தக் காதல் பிழையானது, ஆபத்தானது என்றும் அவனுக்குத் தெரியும். இருந்தும் அவளுடைய சின்ன பாகங்களின் அசைவுகளும் அவனை வருத்துகிறது.
அடி தேக்கு மரக்காடு பெருசுதான் சின்னத் தீக்குச்சி உசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே
குறுந்தொகையில் தலைவன் அவளைச் சிறிய பாம்போடு ஒப்பிடுகிறான். பாம்பைக் கண்டு யானை அஞ்சுகிறது. அதேபோல இவனுக்கும் அச்சம். காரணம், இந்தக் காதல் பிழையானது என்பதை அவன் அறிவான். இருந்தாலும் இந்தக் காதல் மயக்கம் இவனை அச்சம் கொள்ள வைக்காமல் வழிதவறிச்செல்லச் சொல்கிறது. இதை "பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே! பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே" என்று வைரமுத்து தன் வரிகளில் வடித்திருப்பார்.
Comments