Skip to main content

தினமும் 25 பக்கங்கள்!

புதிய வருடம் பிறந்திருக்கிறது. காலத்தை மீட்டிப் பார்ப்பதைப் போலவே, புதிய வருடத்துக்குரிய இலக்குகளை நிர்ணயிப்பதிலும் ஒருவித  புத்தின்பம் கிடைத்துவிடுகிறது. சென்ற ஆண்டின் இலக்குகளைச் சரிவர நிறைவேற்றினோமா, இல்லையா என்பது வேறு பிரச்சனை. ஆனால், புதிதாகச் சில இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வதே மனதிற்கு உற்சாகம் தரக்கூடியது. நற்றிணையில் "வினை முடித்தன்ன இனியோள்" என்று ஒரு வரி வருகிறது. ஒரு வினையை முடித்த பின்னர் கிடைக்கிற அக மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உங்களுடைய இலக்குகள் என்னவாக இருக்கும்!


புதிய வருடத்தில், புத்தகம் வாசிக்க ஆரம்பிக்கவேண்டும் என்பது சிலரது இலக்காக இருக்கலாம். மனத்தடையின் காரணமாக அதனை நிறைவேற்ற முடியாமல் போகலாம். இதிலிருந்து எப்படி வெளிவருவது என,  டைம்ஸில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. 'Farnam street' என்கிற தளத்தில் வெளியான கட்டுரையை எடுத்துப் போட்டிருந்தார்கள். பிரபலமானவர்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்களை, 'ஷேன் பரிஷ்' என்பவர் தொடர்ந்து எழுதி வருகிறார். அதில் புத்தக வாசிப்பினைத் தொடருவதற்கு எளிமையான உத்தி ஒன்றினை எழுதியிருக்கிறார்கள்.

சிலருக்கு நூலகத்துக்குச் சென்று படிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கலாம். இருந்தாலும், ஒரு புத்தகத்தைச் சொந்தமாக வீட்டிலேயே வைத்து வாசிப்பதுதான் சிலருக்குத் திருப்திகரமானது. தேவையான நேரங்களில் எடுத்துப் படிப்பதற்கும், அதிலேயே ஏதாவது குறிப்புகளை எழுதி வைப்பதற்கும் இலகுவானது. சிலருக்குப் புத்தக அலுமாரியில் அடுக்கி வைத்து அழகு பார்ப்பதில் ஆர்வம் இருக்கும். “No furniture is so charming as books.” என்று சொல்லுவார்கள். சிலவேளைகளில் புதிய  புத்தகங்களை வாங்கிவிட்டு படிக்காமல் வைத்திருப்போம். படிக்காத புத்தகங்களின் எண்ணிக்கைதான் பாதியாக இருக்கும். இந்தப் புத்தகங்களின் தொகுதியை 'anitlibrary' என்கிறார்கள். இதனை ஜப்பானிய மொழியில் 'tsundoku' என்பார்கள். இந்த மனத்தடையில் இருந்து தான் வெளிவந்த விதத்தை அந்தத் தளத்தில் இப்படி விபரிக்கிறார்:


"ஒரு நிமிடத்தில், கிட்டத்தட்ட 300 வார்த்தைகளைப் படித்துவிடக்கூடிய வாசகன் நான். ஐம்பது வார்த்தைகள் கூடிக்குறையலாம். இந்த வேகத்தில் தொடர்ந்தால், 7 இலட்சம் வார்த்தைகள் கொண்ட ஒரு புத்தகத்தை 2333 நிமிடங்களில் வாசித்து முடிக்கலாம். இதற்கு 39 மணித்தியாலங்கள் எடுக்கும். மூளையால் அவ்வளவு நீளமான காரியத்தை எடுத்து நிறைவேற்றுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. அதனாலேயே தினமும் சின்னக் கட்டுரைகளை விரும்பிப் படித்துவிடுகிறோம். இருந்தாலும் வாசிப்பைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். நாங்கள்கூட 'Farnam street'க்காக நிறைய வாசிக்கிறோம். ஆனால், புத்தகங்களை எடுத்துப் படிக்கும் அளவுக்குப் பொறுமையில்லை. 

நான் வாசிக்கவேண்டிய புத்தகங்கள் நிறைய இருக்கிறது. Robert A,Caro எழுதிய 5 தொகுதிகளையும் படித்து முடிக்கவேண்டும். அமெரிக்க அரசியல் உலகில் மிகவும் முக்கியமான புத்தகம். Gibbon எழுதிய Decline and Fall of The Roman Empire' என்கிற புத்தகம், அடம் ஸ்மித்தின் 'The wealth of Nations', டால்ஸ்டாய் எழுதிய Anna Karenina' மற்றும்  'War And Peace' ஆகிய புத்தகங்களையும் வாசிக்கவேண்டும். அதிகமான பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகங்களை எப்படிப் படித்து முடிக்கப்போகிறேன் என்று நினைத்தேன். இவற்றை நிறைவேற்ற நான் கையாள நினைத்த உத்தி மிகவும் இலகுவானது. அதனை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். 

முதலில் ஒரு நாளைக்கு 25 பக்கங்களையாவது படித்துவிடவேண்டும் என்று நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அதில் உறுதியாக இருக்கவேண்டும். மாதத்தில் பண்டிகைகைகள் வருகிறபோது, இரண்டு நாட்கள் படிக்க முடியாமல் போகலாம். அப்படிப் பார்த்தாலும் மிகுதி 340 நாட்கள் இருக்கிறது. ஒரு நாளைக்கு 25 பக்கங்கள் என்றால், ஒரு வருடத்தில் 8,400 பக்கங்களை வாசித்து முடிக்கலாம். நான் 25 பக்கங்கள் என்று நிர்ணயித்திருந்தாலும் சில நாட்களில் 30 பக்கங்கள் வரை வாசிக்கிறேன். வருடத்தில், 10,000 பக்கங்களை வாசித்துவிடலாம். நான் படிக்க விரும்பும் புத்தகங்களில் பலவற்றையும் படித்து முடித்துவிடலாம். ஒரு வருடத்தில் உலகின் அத்தனை நாகரிகங்களுக்குள்ளும், வரலாற்றுக்குள்ளும் போய் வந்துவிடலாம். இப்படித்தான் நிறையப் புத்தகங்களைப் படித்து முடிக்கிறேன். ஒரு நாளைக்கு  25 பக்கங்கள் என்பதை நான் விட்டுக்கொடுப்பதேயில்லை.


உண்மையிலேயே இதில் இலக்கம் ஒரு பிரச்சனை இல்லை. நீங்கள் 15, 20 என்றுகூட நிர்ணயித்துக்கொள்ளலாம். ஆனாலும் இந்த எண்ணிக்கைகள் உங்கள் வாசிப்பை இலகுபடுத்தும். உங்களுக்கு 'Ulysses' அல்லது Jane Austen எழுதிய புத்தங்களைப் படிக்கவேண்டும் என்கிற ஆர்வம் இருந்ததில்லையா? David Foster Wallace எழுதிய 'Infinite Jest' இனை வாசிக்கும் ஆர்வம் இல்லையா? படித்து முடிக்கலாம். இன்றிலிருந்தே 25 பக்கங்களை வாசிக்கத் தொடங்குங்கள். நாளையும் இதைத் தொடருங்கள். காலையில் கொஞ்சம் வாசியுங்கள்.  உறங்கச் செல்லும் முன்னர் கொஞ்சம் வாசியுங்கள். வைத்தியர் ஒருவருக்காகக் காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள். எப்படியாவது இந்த 25 என்கிற இலக்கினை மட்டும் தொட்டுவிடுங்கள்.

எதனை வாசிக்கவேண்டும் எனத் தெரிவு செய்வது உங்கள் விருப்பம். எனக்கு வரலாறு, சுயசரிதை, விஞ்ஞானம் பிடிக்கும். நான் நாவல்களை அதிகமாக வாசிப்பதில்லை. இலக்குகள் நீண்ட காலத்துக்கு உங்களை வழிநடத்தாது. உங்களுக்குள்ளே ஒருவித ஆர்வம் எழவேண்டும். " என்று எழுதியிருந்தார். தமிழ்ப் புத்தகங்களுக்கும் இதே வழிமுறைதான்.

"நான் தினமும் என்னுடைய அலுவலகத்தில் இருந்துகொண்டு   வாசிப்பதுண்டு" என்று Warren Buffet அடிக்கடி சொல்வார். "அவர் தன்னுடைய முதலீட்டினை ஆரம்பித்த காலங்களில் ஒரு நாளைக்கு 600, 1000 பக்கங்கள் என்று வாசிப்பார்" என்கிறது 'Omaha World-Herald' என்கிற பத்திரிக்கை. இந்தப் புதிய வருடத்திலே புத்தக வாசிப்பினை ஆரம்பிக்கப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ