Skip to main content

அற்சிரம் - பனிக்காலம் 1

திகதிகளைக் கொண்டாடும் மனிதர்களைவிட, இயற்கை எழிலோடு காலநிலை மாற்றத்தைக் கொண்டாடிய பண்டைத் தமிழர்களின் வாழ்வினை, இப்பொழுது கவனித்தாலும்  தித்திக்கிறது. இயற்கை எழில், அறவாழ்வு, காதல், வீரம் என்று பழந்தமிழர்களின் வாழ்வினைக் காட்டிச் செல்லும் பாடல்கள் ஏராளம். அதிலும், தலைவியினதும் தலைவனினதும் பிரிவாற்றாமையை எடுத்துக்கூறும் பாடல்களில்  எல்லாம் காதல் உணர்வோடு காலமும் இழைந்திருக்கும். 


கூதிர்காலத்தைத் தொடர்ந்து வரும் முன்பனிக்காலம் ஆரம்பித்திருக்கிறது. மார்கழி, தை மாதங்களை உள்ளடக்கி, 'முன்பனிக்காலம்' என்று சொன்னார்கள். பனிக்காலத்தினைக்  குறிக்கும் 'அற்சிரம்' எனும் சொல் இப்பொழுது வழக்கில் இல்லை. 'அல்' என்றால் இரவு என்றும், 'சிரத்தல்' என்றால் அழித்தல் அல்லது நீக்குதல் என்றும் பொருள்படும்.  இரவின் குளிரை நீக்கிப் பகலிலும் பனிக்காற்று போட்டிக்கு வீசும் காலம். 

பொருள் ஈட்டும் பொருட்டு பிரிந்துசென்றுவிட்ட தலைவன், பனிக்காலத்தில் திரும்புவான் என்று காத்திருக்கும் தலைவியின் காமத்தையும், அது தரும் துயரையும்  நயத்தோடு விளக்கும் பாடல்கள் ஏராளம்.  தலைவன் பிரிந்துபோகப் போகிறான் என்று தலைவியிடம் குறிப்புணர்த்த தோழி வருகிறாள். "தலைவன் பிரியப்போகிறான் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அவரைத் தடுக்காமல் இங்கே வந்து இப்படிச் சொல்கிறாயே" என்கிறபடியாக தலைவி துன்புகிறாள். ஆனால், இந்தப் பனிக்காலம் எவ்வளவு துயரமானது என்று தலைவி சொல்லுவது நயமானது.

காந்தள வேலி யோங்குமலை நன்னாட்டுச்  
செல்ப வென்பவோ கல்வரை மார்பர் 
சிலம்பிற் சேம்பி னலங்கல் வள்ளிலை 
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇக்
தண்வரல் வாடை தூக்கும் 
கடும்பனி யச்சிர நடுங்கஞ ருறவே. 

"இதைக் கேளு, மலைப்பகுதில இருக்கிற சேம்பு இலை பாத்திருக்கியா! அது யானையோடை காது மாதிரி பெருசா இருக்கும். இந்தக் குளிர் நிரம்பின வாடைக்காற்று இருக்குல்ல, அது அந்தப் பெரிய இலையவே தடவித் தடவி அசைச்சுப் பாக்கும். அப்பிடி கொடுமையானது இந்தக் குளிர்ந்த வாடைக்காத்து. அது என்னை எப்பிடியெல்லாமோ கொடுமைப்படுத்தும். அதை என் தலைவன் பக்கத்துல இருந்தா மட்டும்தான் என்னால எதிர்கொள்ள முடியும். அப்பிடிப்பட்ட கடும்பனிக் காலத்துல என் தலைவன் என்னை விட்டுப் பிரியப்போறான்." என்கிறாள் தலைவி.

தலைவன் கூடவே இருந்தால், அவன் மார்பு அவளைக் காத்திருக்கும். இதை இன்னுமொரு குறுந்தொகைப் பாடல் நேரடியாகவே சொல்லுகிறது. 

பூழ்க்கா லன்ன செங்கா லுழுந்தின் 
ஊழ்ப்படு முதுகா யுழையினங் கவரும் 
அரும்பனி யச்சிரந் தீர்க்கும் 
மருந்பிறி தில்லையவர் மணந்த மார்பே. 

இந்த உளுந்தோடை கால் சிறிது மேலே தெரியும்போது குறும்பூழ்ப் பறவையின்  கால் மாதிரி இருக்கும். அதன் முதிர்ந்த காய்களை மான் இனங்கள் தன் கூட்டத்தோடை விரும்பிச் சாப்பிடும். அந்த மான்கள்கூட தான் விரும்பினதைச் சாப்பிட்டு சந்தோஷமா இருக்கு. ஆனா எங்கள் காமம் மட்டும் பயன்படாமல் காத்துக்கிடக்கு.  என் துயரைப் போக்கிற ஒரே மருந்து அவர் மார்புதான். அவர் எப்போ வருவார்!

நற்றிணையில், தலைவனின் வருத்தத்தைச் சொல்லும் பாடல் ஒன்று இருக்கிறது. பொருளுக்காகப் பிரிந்து வந்திருக்கும் தலைவன் தன் நெஞ்சைப் பாத்து சொல்லுகிறான். "தேமலையும் இளமார்பையும் உடைய என் காதலி நான் பக்கத்துல இருந்தாலே குளிரால் துயருறுவாள். நான் இல்லாதபோது எவ்வளவு துயரம் கொள்வாள்!" என்கிறான். பாடலின் ஒருபகுதி:

நோகோ யானே நோம்என் நெஞ்சே 
பனிப்புதல் ஈங்கை அங்குழை வருடச் 
சிறைகுவிந் திருந்த பைதல்வெண் குருகு 
பார்வை வேட்டுவன் காழ்களைந் தருள
மாரி நின்ற மையல் அற்சிரம் 

கடுமையான பனிக்காலம் இது. இந்த குருகுப் பறவை  குளிர் தாங்கமுடியாம அந்த ஈங்கை பூங்குழை வருடிக்கொடுக்கிற சுகத்துல இருக்கு. அந்த வேட்டுவன் இரங்கி அதோடை விலங்கை அவிழ்த்து விடுகிறான். இந்தக் குளிர்ல அவள் தனியாக இருந்து என்ன பாடுபடுவாளோ என ஏங்குகிறான்.

காதலோடு சேர்த்து மக்களின் வாழ்வியலையும் பாடல்கள் தாங்கி நிற்கின்றன. இந்த முன்பனிக் காலத்தில் அவரை,உளுந்து போன்றவை பயிரிடப்படும். மக்கள் வெந்நீரை விரும்பி உண்ணுவார்கள் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை ஒரு குறுந்தொகைப் பாடல் அழகாக விளக்குகிறது.

‘அற்சிர வெய்ய வெப்பத் தெண்ணீர்
சேமச் செப்பிற் பெறீஇயரோ’

தலைவி, வாடைகாற்று வீசும் பனிக்காலம் எப்போது வருமென்று காத்துக்கொண்டிருக்கிறாள். காரணம்,  பனிக்காலத்தில் வந்துவிடுவேன்னு தலைவன் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான்.  இந்த வாடை  எப்பொழுது வருமென்று, துறவு உள்ளத்தோடு வாழும் முற்றும் அறிந்த பெரியோர்களிடம் தோழி கேட்கிறாள். இவர்கள்தான் தலைவனினதும் தலைவியினதும் காதல் வாழ்க்கையை நெறிப்படுத்துபவர்கள் என்றும் குறிப்புகள் சொல்லுகிறது. அந்தப் பாடலில், "வெந்நீரைச் சேமித்து வைக்கும் செப்பில் நீரினைப் பெறுவீராக" என்று சொல்லப்படுகிறது.

தொடரும்...

Comments

புளகம் திகழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சுதா:)

பதிவு, மிக்க அழகா வந்திருக்கு!
/மருந்பிறி தில்லையவர் மணந்த மார்பே/ = என்னவொரு தெளிவு பாருங்க நோயாளிக்கு:)
நோயாளியே= மருத்துவரும் ஆகி, மருந்து பரிந்து உரைத்தல்!

அவர் மணந்த மார்பே= இரு பொருள் குறிப்பு
1. எனக்கு அவர் மார்பு மருந்து!
2. அவருக்கு, அவர் "மணந்த மார்பு", மருந்து:)

அற்சிரம் = பார்க்க, ஏதோ சம்ஸ்கிருதச் சொல்லு போலச் சிலருக்குத் தோற்றந் தரலாம்:) ஆனா கெழுமிய தமிழ்ச் சொல்!

பொதுவா, இரவின் குளிர்.. தெரிந்தாலும் போர்த்திக்கிட்டுத் தூங்கீருவோம்; ஆனா பகலும் குளிர்ந்தால்? வீட்டுக்குள்ளேயே முடங்க முடியுமா? வெளிவந்து தானே ஆகணும்?
அது காதலர்களை இன்னும் வாட்டும்.. பகலில், நாலு பேர் முன்னாடி, அவனைக் கட்டி அணைப்பது போல் தலையணையை அணைத்துப் பிதற்ற முடியாது:) பொது வெளி!

இப்படி, இரவு (அல்);
அதை விடக் கொடுமை செய்யும் பகல்= அல்+சிரம்= அற்சிரம்!

செயற்கைக் கற்பனை/புராணமின்றி..
இயற்கையோடு இயைந்து இயைந்து வாழ்ந்த சங்கத் தமிழ்!
அதான், வேடனும், தான் பிடித்த பறவையைக் கூட, விடுவிக்க முடிகிறது.. இன்னோர் உயிரின் காதலை மனசால எண்ணிப் பார்க்கும் போது!

அவன் ஆற்றலும், அம்புக் குறியில் இல்லை; வீட்டில் அவனுக்காகவே காத்திருக்கும் அவளின் அன்புக் குறியில் இருக்கு என்று சொல்லும் இன்னொரு சங்கக் கவிதை!
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் :))

அவர் மணந்த மார்பே= இரு பொருள் குறிப்பு
1. எனக்கு அவர் மார்பு மருந்து!
2. அவருக்கு, அவர் "மணந்த மார்பு", மருந்து:)

செயற்கைக் கற்பனை/புராணமின்றி..
இயற்கையோடு இயைந்து இயைந்து வாழ்ந்த சங்கத் தமிழ்!
அதான், வேடனும், தான் பிடித்த பறவையைக் கூட, விடுவிக்க முடிகிறது.. இன்னோர் உயிரின் காதலை மனசால எண்ணிப் பார்க்கும் போது!
// எவ்வளவு ஆழமாக உளவியலைப் பேசும் பாடல்கள்! நன்றி.
அருமை அழகு அமுது

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ