Skip to main content

அடைமழைக்குள் ஒரு குறுந்தொகைக் காதல்




இந்தக் கார்காலம் என்னை வதைக்கிறது தோழி. தோழியே கேளு! காட்டில் இருக்கிற ஆண்மான்கள் எல்லாம் மென்மையும் மடமையும் உடைய தங்களோட அழகான பெண்மான்களைத் தழுவிக் காதல் இன்பம் கொள்கின்றன. இயற்கைதான் எவ்வளவு மென்மை! அந்த மயக்கத்தில், அவையெல்லாம் காட்டிலுள்ள புதரிலே ஒடுங்கும்படியான சூழலை இந்தக் கார்காலம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. தலைவன் பிரிவு ஒருபக்கம் இருக்க, இந்தக் கார்காலமும் இயற்கையும் எனக்கு எதிராகச் சதி செய்கிறது.  

மான்கள் மட்டுமா! துதிக்கையை உடைய பெரிய ஆண்யானைகள் எல்லாம் பெண்யானைகளுடன் சேர்ந்து மேகம் சூழ்ந்திருக்கிற மலையிடத்தை அடையும்படி அடைமழை பொழியுது. இருக்கிற கவலை போதாதென்று, மேலும் துன்பம் தந்து வாட்டக்கூடிய இந்த மாலைநேரமாகப்  பார்த்தல்லவா பெய்கிறது. பொன் மாதிரி இருக்கிற என் மேனியின் நல்லழகை கெடுத்த என் தலைவர் இனியும் வராமல் விட்டால் என் உயிர் என்னாகும்! அவரால்தான் என் மேனி அழகையும் உயிரையும் மீட்டெடுக்க முடியும். நான் பசலையால் நொந்துபோய் இருக்கிறேன். அவர் வராவிட்டால் என் உயிர் நீங்கிவிடும்.  அவர் தீண்டினால் உயிர் நிறைவேன்.

அந்த மான்களுக்கும் யானைகளுக்கும்கூட,  இந்த மாரிகாலத்தில் ஒன்றுடனொன்று சேர்ந்து இன்பம்கொள்ளும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது என் மனம் எப்படிச் சும்மாயிருக்கும் தோழி! நீயே நியாயத்தைச் சொல்லு! மழைக்காலம் வருவதற்கு முதல் வந்திடுவேன்னு சொல்லீட்டுப்போன இவர் இன்னும் வரல. இளைத்துவிட்டேன். 

மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்து  
கான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும்  
கையுடை நன்மாப் பிடியொடு பொருந்தி  
மையணி மருங்கின் மலையகஞ் சேரவும்  
மாலை வந்தன்று மாரி மாமழை  
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்  
இன்னும் வாரா ராயின்  
என்னாந் தோழிநம் மின்னுயிர் நிலையே.  

இந்தப் பாடல் ஒரு பெண்ணின் ஆற்றாமையைச் சொல்லுகிறது. இதேபோல கார்காலத்தில் ஒரு ஆண் தன்னுடையை ஆற்றாமையைச் சொல்லி வேண்டினால் எப்படியிருக்கும்! வேட்கையை எப்படி ஆற்றுவேன் என்று கேட்டால் எப்படியிருக்கும்! சங்கத்தமிழ் போலவே கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் தனது வரிகளில்  இயற்கையை அழைப்பது வழக்கம். 

பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரைஎல்லாம் பிணைத்துவைக்கும் கார்காலம்

இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க ?
தொடட்டுமா தொல்லை நீக்க ?

எல்லா உயிரனங்களும் மகிழ்ச்சியாக இருக்கிற கார்காலம் இது. நீ மட்டும் ஏன் பிரிந்திருக்கிறாய் எனும் ஆற்றாமை!

Comments

Athisaya said…
கார்காலங்களே எல்லாக்காலங்களிலும் ஏக்கம் கூட்டிப்போகிறது சுதர்ஷன்.
தலைவனின் ஏக்கத்தை பதிந்த தலைவரின் வரிகள் அருமை.
SUJATHA MAGESH said…
ஹ..ஹ..அருமை தோழர்.

















ன்

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...