கமல்ஹாசன் நடித்த பாபநாசம் என்கிற திரைப்படத்தை வெளியிடப்பட்ட தினமான இன்றே பார்க்கக்கிடைத்தது. கமலுக்கு ஒரு தரமான சினிமா அமையவேண்டும் என்பதுவே எனது நீண்டநாள் எதிர்பார்ப்பு. இந்தத் திரைப்படம் அதனைப் பூர்த்தி செய்திருக்கிறது.
பாபநாசம் என்கிற ஊரில் மகிழ்ச்சியாக இருக்கிற ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்தப் பிரச்சனை ஒரு குற்றச்செயலில் போய் முடிகிறது. குற்றத்தை மறைத்து தனது குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் ஒரு மனிதனைப் பற்றிய கதை. ஒரு சாதாரண மனிதனின் புத்திசாலித்தனத்துக்கும் போலீஸ், சட்டம் போன்ற அமைப்புக்கும் இடையிலான போராட்டம்தான் இந்தப்படம்.
மோகன்லால் நடித்த 'திருஷ்யம்' என்கிற திரைப்படத்தின் ரீமேக்தான் இந்தத் திரைப்படம். இரண்டுக்கும் சுவாரசியமான திரைக்கதை அமைத்து இயக்கியது ஜீது ஜோசெப் என்கிற இயக்குனர்.
நடிப்பைப் பொறுத்தவரையில் அந்தந்தக் கதாப்பாத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தாலும் கமலின் நடிப்புத்தான் ஒட்டுமொத்தப் படமுமே என்றும் சொல்லலாம். ஒரு சாதாரண மனிதனின் நிலை தடுமாற்றம் காணவேண்டிய இடத்தில் தடுமாற்றத்தையும், தைரியம் கொள்ளவேண்டிய இடத்தில் தைரியத்தையும் வரவழைத்துக்கொள்கிறது. அந்தந்த நிலைகளையும் உணர்வுகளையும் தன் நடிப்பிலேயே சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இறுதிக் காட்சி ஒன்றில் குற்றவுணர்வையும் துயரத்தையும் ஒன்றாக வெளிப்படுத்தும்போது 'இதுதான் கமல்' என்று சொல்லத்தோன்றியது. மிகவும் பொருத்தமான கதாப்பாத்திரத் தேர்வுகள். அதிலும் அந்த Esther Anil என்கிற குட்டிப்பெண்ணின் நடிப்புப் பிரமாதம்.
தமிழில் நல்ல சினிமாக்கள் வெளிவருவது குறைவு. இந்த வாரத்தில் காக்கா முட்டை , பாபநாசம் போன்ற நல்ல திரைப்படங்களைப் பார்க்கக்கிடைத்தது.
Comments