நிறம்

எங்கள் நிறுவனத்தில் வேறு பிரிவிற்கு புதிதாக மனேஜர் ஒருவர் வந்திருக்கிறார். வெளித்தோற்றத்திலேயே ஒரு நல்ல படிப்பாளிக்குரிய விபரங்கள் தெரிந்தது. அதிகமாகப் புத்தகங்கள் வாசிப்பவர் என்று அவருக்கு நெருங்கியவர்கள் சொன்னார்கள். நான் அடிக்கடி வாசித்துக்கொண்டிருப்பதை பார்க்கிறவர்கள் என்கிறபடியால் எனக்கென்று அந்தச் செய்தியை விசேஷமாகச் சொல்வதுபோலச் சொன்னார்கள்.
பொதுவான விடயங்களில் விவாதம் வரும்போது, தன்னைவிட உயர்நிலை அதிகாரிகளுக்கு புத்தகங்களிலிருந்து சில எடுத்துக்காட்டுகளைச் சொல்லி விளங்கப்படுத்துவார். இவர்களும் கைபேசியைத் தடவுவதை நிறுத்திவிட்டு அவர் சொல்வதை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அவர் சொல்கிற விதமும் அப்படியிருக்கும். சிங்களவராக இருந்தபோதிலும் தமிழர்களே தெரிந்துவைத்திருக்க ஆர்வம் காட்டாத தமிழர் வரலாற்றின் நுணுக்கமான விபரங்களை மிகவும் தெளிவாகப் புரியவைப்பதைப் பார்த்திருக்கிறேன். அன்று சோழர்களின் இலங்கை வருகையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். இருந்தாலும் அதெல்லாம் one-way communication தான். உரையாடல் நீட்சி அடைவதற்கு மற்றப் பக்கத்தில் இருபவருக்கும் கொஞ்சம் விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டுமே!
ஒருமுறை உணவின்பின்னர் அவரோடு உரையாடக் கிடைத்த நொடிகள் பிடித்திருந்தது. "இந்த பட்டர் பெகான் ஐஸ்கிரீம் என்கிற பெயரில் ஏதோ செய்திருக்கிறார்கள்" என்றேன். ஒருமுறை சிரித்தார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி " நீங்கள் புத்தகங்கள் படிப்பீங்களாமே!" என்றேன். இந்த இரண்டாவது கேள்விக்காக முதலாவதாக ஒரு மொக்கை ஜோக்கை வீணாக்கவேண்டியிருந்தது. அதிகம் பேசாதவர் என்பதால் கஷ்டப்படவேண்டியிருந்தது. முதலாவது கேள்வியே அவருக்குப் பிடித்திருக்கும். உடனேயே "இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்" என்றார்.
"சூப்பருங்க...நாவல் வகையா?"
"இல்லை மார்ஷல் ஆர்ட்ஸ் பற்றி எழுதுவேன். அதில் என்னவோ அதிக ஆர்வம்"
"சிங்களத்திலா ஆங்கிலத்திலா?"
"சிங்களத்தில்... ஆங்கிலத்தில் எழுதவேண்டும்... நீங்களும் வாசிப்பீங்க போல..." என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். நிறைவில் மகிழ்ச்சியாய் இருந்தார். அந்த உரையாடல் மட்டும் one-way communication ஆக இல்லாமல் இருந்தது காரணமாக இருக்கலாம். சொல்லுகிற இடமும் சரியான இடமென்றால்தான் பகிர்தலின் முழு இன்பம் இருக்கும். ஒருவேளை அவருக்கு அது கிடைத்திருக்கலாம்.
வேலை விஷயத்தைத் தவிர பிறருடன் அதிகம் பேசமாட்டார். இப்படிப் பேசிக்கொள்கிறவர்கள் மற்ற மனிதர்களைப் பற்றிப் பேசிக்கொள்ளமாட்டார்கள். மனேஜ்மென்ட்டினை எதிர்த்து பெரிய விளக்கம் ஒன்று எழுத நேர்ந்தபோது, தானும் அதில் ஒருவர் என்பதை மறந்து தொழிலார்கள் பக்கம் நின்று எழுதிக்கொடுத்திருக்கிறார் என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். தாஸ்தாவெஸ்கி சொன்னமாதிரி அழகுதான் உலகைக் காக்கும். எது அழகு என்பதை அவரவர்தான் தீர்மானம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

Comments

Popular posts from this blog

ராதாமோகனின் வேகமான பயணம் போகலாம் (எனது பார்வையில்)

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்

அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்