பாரதி எழுதிய 'கண்ணன் என் காதலன்' பாடலை வெவ்வேறு குரல் வடிவங்களில் கேட்டிருக்கிறேன். டி.கே ஜெயராமன் முதல் கார்த்திக் வரை பாரதியின் மொழியைப் பாடிவிட்டார்கள். அவற்றில் பின்னணிப் பாடகியான சுசித்ராவின் குரலும், அதனை அவர் பாடிய விதமும் மிகவும் வசீகரமானது. தமிழ் உச்சரிப்பின் தெளிவு, அழுத்தம், உறுதி எல்லாம் அத்தனை அழகு.அவன் மொழியைச் சந்தேகமாகப் பாடினாலே அழகு சிதைந்துவிடும்.
எழுத்தில் மட்டுமல்லாது, இசையோடு நெகிழ்ந்துகொடுக்கும்போதும் தமிழ்ச் சொற்களின் வளைவுகள் எல்லாம் அழகு. அதிலும் 'சொற்தேர்வு' என்று வரும்போது பாரதியை மிஞ்ச வேறொருவரும் இல்லை. அதைப் பிரதியீடு செய்யவோ, உடைக்கவோ முயன்றால் தோல்விதான். சுசித்ராவைத் தவிர பலரும் "ஆரிடம்" என்பதை "யாரிடம்" என்று பாடிவைக்கிறார்கள். "நண்ணு முகவடிவு" என்று உச்சரிக்கிறபோதே கற்பனை பயனுறுகிறது. ஒரு பெண்ணினுடைய துயரமாக இருந்தாலும் இதில் காதலின் இன்பமான துன்பமும், இழந்த இனிமையும் இழையோடுகிறது. சில நினைவுகள் பரிணமிக்கும்போதேல்லாம் இதைக் கேட்பதுண்டு.
பெண்களினிடத்திலிது போலே -- ஒருபேதையை முன்புகண்ட துண்டோ?
Comments