விடிந்தாலும் பெண்ணழகு!

திருமணமாகிக் கிட்டத்தட்ட நான்கரை நாட்கள் நகர்ந்திருக்கும். இன்றைய அதிகாலைப்பொழுதுவரை கணக்கில் எடுத்துக்கொண்டால் என் கணிப்புச் சரியாக இருக்கும். இருளும் ஒளியும் கலவி கொள்ளும் விடிந்தும் விடியாத பொழுது அது. காற்று அல்ல, என் தலையை அவள்தான் கோதுகிறாள். மூச்சுக்காற்று என்னவோ நெஞ்சில்த்தான் பட்டுப் படர்ந்துகொண்டிருந்தது. அதோடு அவள் விரல் வருடும் சுகமும் பிடித்திருந்தது. இன்னும் கொஞ்சம் வருடட்டுமே என்றுதான் மெதுவாகக் கண் விழித்தேன். 

நிமிர்ந்து, என் கண்களைப் பார்த்துப் புன்னகை செய்தாள். ஆமாம் உதடுகளில் புன்னகையைச் செய்துகொண்டாள். இந்த முறை உதடு மட்டும்தான் சிரிப்புக்குரிய அறிகுறிகளைக் காட்டியதே தவிர, கண்கள் சிரிக்கவில்லை. சிரிக்கும்போது  அவள் கண்கள் ஒரு குட்டி ஹைக்கூ போல இருக்கும்.  இந்தமுறை அந்தக் கண்கள் 'என்னை ஆச்சரியப்படுத்து' எனக் கேட்பதுபோல இருந்தது. அந்தக் கண்கள் இப்படித்தான் புதுமை செய்து என்னை அடிக்கடி ஆச்சரியப்படுத்தும்.

சற்றும் எதிர்பார்க்காதபோது, ' விடியும் வரை பெண்ணழகு' என்றாரே உங்க கவிஞரு என்று கேட்டாள். அதுவும் இந்த நேரம் இந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. 'அதில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை' என்று சட்டென்று சொன்னேன். சொன்ன பதிலைக்கேட்டு, இந்தமுறை அவள் கண்களால் சிரித்தாள். திருப்தி அடைந்திருப்பாள் என்று நினைக்கிறேன். நான் சொன்ன பதிலுக்காக அல்ல, கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் சட்டென்று வந்த பதிலுக்காகச் சந்தோஷப்பட்டிருப்பாள். அன்பென்று வந்துவிட்டால்  இந்தப் பெண்கள்தான் எத்தனை சின்ன விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்! உறங்கிவிட்டாளோ தெரியாது, ஆனால் கண்களை மூடிக்கொண்டாள். 

நான் அவளை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருந்தேன்.  நெருங்க நெருங்க வரும் பிரிவு பயம் வந்துவிட்டாலே இப்படிக் கேள்விகள் வரும். எவ்வளவு ஏக்கம், அன்பு, காதல் இருந்திருந்தால் அவளிடமிருந்து இப்படியொரு கேள்வி வந்திருக்கும்! காமம் தீர்ந்ததும் காதலும் தீர்ந்துவிடுமா என்கிற ஏக்கத்தில் வந்திருக்கவேண்டும். வேளைக்கு எழுந்துகொள்ளவேண்டும். நாளை முதல் நிறைய வேலை இருக்கிறது. முதலில் அவள் பயத்தைப் போக்கவேண்டும்.    

Comments

Popular posts from this blog

ராதாமோகனின் வேகமான பயணம் போகலாம் (எனது பார்வையில்)

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்

அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்