பண்டைய தமிழர் மரபில், கார்த்திகைத் திருநாளன்று தீபங்களை வரிசையாக அடுக்கி விழாக் கொண்டாடும் வழக்கம் இருந்துள்ளது. வட இந்திய மக்களுக்கு தீப + ஆவளி போல, நம் தமிழர் மரபில் திருக்கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்பட்டது. ஆனால் அப்போது சமயம் கலக்காத ஒரு கார்காலப் பண்டிகையாக கொண்டாடப்பட்டுள்ளது.
கார் நாற்பது எனும் நூல், தன்னைப் பிரிந்து வெளியூருக்குச் சென்றிருக்கும் தலைவனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவியின் ஏக்கத்தைக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகிறது. இவை கார்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும் எடுத்துக் கூறுகின்றன.
நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை
நன்மை மிகுந்த கார்த்திகைத் திருவிழா நாளில், நாட்டில் உள்ளவர்கள் கொளுத்தி வைத்துள்ள முதல்நாள் விளக்கைப் போல அழகுடையனவாகிப் பூத்திருக்கின்றன தோன்றிப்பூக்கள்(தோன்றி என்பது காந்தல் மலரின் வகை எனப்படுகிறது)' என்கிற பொருளில் இந்தப் பாடல் அமைகிறது.
அகநானூறிலும்(நக்கீரர்) ஒரு பாடல் கார்த்திகை விளக்கீட்டைப் பற்றிக் கூறுகிறது.
மழை கால் நீங்கிய மாக விசும்பில்
அறுமீன் சேறும் அகல் இருள் நடுநாள்:
மறுகு விளக் குறுத்து, மாலை தூக்கிப்,
மறுகு விளக் குறுத்து, மாலை தூக்கிப்,
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர, வருகதில் அம்ம!
'கார்த்திகையைச் (Pleiades) சேரும் இருள் அகன்ற நடு இரவில் , தெருக்களில் விளக்குகளை வரிசையாக ஏற்றி விழாக் கொண்டாடா வருவாரோ!' என்கிற பொருளில் அமையும் பாடல்.
Comments