சுவாரசியமான கம்பராமாயண பாடலொன்று. மேற்குல சூரியன் உதிக்குமா?. அதான் கம்பன். கம்பனின் கவிச்சுவையை கொஞ்சம் இரசிப்போம் என்று யூடியூபில் தேடியபோது ராகவன்( @RagavanG ) அவர்கள் தொகுத்த ஒரு காணொளி கிடைத்தது.
வேறு வேறு time zone பற்றி கம்பன் சொல்லுகிறார்.வடக்கே செல்லச் செல்ல காற்றின் அழுத்தம் குறையும், உலகம் உருண்டைன்னு எப்படி அந்தக் காலத்தில் தெரிஞ்சிருக்கும்! வால்மீகி ராமாயணத்தில் இல்லாமல் கம்பராமாயணத்தில் மட்டுமே உள்ள காட்சி.
எத்தனையோ யோசனைகளைக் கடந்து இலங்கையில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் அனுமனுக்கு வடதுருவத்தை அடைந்ததும் திசை மாறுகிறது.
கீழுள்ள பாடலும் பொருளும் இன்னொரு இணையப்பக்கத்தில்(https://groups.google.com/forum/#!msg/mintamil/-MA8upTnKKA/vrLUjNRhyaEJ) இருந்து எடுக்கப்பட்டது.
அத்தடங் கிரியை நீங்கி, அத்தலை அடைந்த வள்ளல்,
உத்தரகுருவை உற்றான். ஒளியவன் கதிர்கள் ஊன்றி,
செத்திய இருள் இன்றாக விளங்கிய செயலை நோக்கி,
வித்தகன், 'விடிந்தது!' என்னா, 'முடிந்தது, என் வேகம்!' என்றான்.
மேருமலையை நீங்கி அப்பால் சென்று உத்தரகுருவை அடைந்தான். அங்கே அடர்ந்த இருளை நீக்கியவாறு சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. 'அடடா! அதற்குள் விடிந்துவிட்டதா! என்ன வேகமாய் நான் வந்து என்ன பயன்! விடிவதற்கு முன்னால் அங்கே போய்ச் சேர வேண்டும் என்று நினைத்தேனே! இங்கேயே விடிவாகிவிட்டதே!' என்று மயங்கினான் அனுமன். மனக்கலக்கம் அடைந்தான்.
அடுத்த கணம், சூரியன் இருக்கும் திசையைக் கவனித்தான்.
கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான், - 'கதிரின் செல்வன்
மேல் திசை எழுவான் அல்லன்; விடிந்ததும் அன்று; மேரு
மாற்றினான், வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினார்' என்ன, துன்பம் தவிர்ந்தனன் - தவத்து மிக்கான்.
காற்றும் வேகம் குறையும்படியான விரைவில் செல்லும் தவத்தில் மிக்கவனான அனுமன், சூரியன் மேற்கு திசையில் இருப்பதை நோக்கினான். 'என்ன மடையன் நான்! சூரியன் மேற்கிலா உதிக்கும்! இது விடியல் இல்லை. அஸ்தமனம். சூரியன் மேரு மலையின் வலதுபக்கத்தில் உள்ளவர்களுக்கு (மற்ற பகுதியில் இருட்டான பிறகு) மேற்கில் தோன்றும் என்று வேதங்களைக் கற்று உணர்ந்தவர்கள் சொல்வார்களே,' என்று துன்பம் தீர்ந்தான்.
Comments
தொடர வாழ்த்துக்கள்....