கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகிய 'கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சி'யில் இந்தத் தடவையும் கிட்டத்தட்ட நானூறுக்கும் மேற்ப்பட்ட புத்தக நிலையங்கள். 15 ஆவது தடவையாக இந்த பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி BMICH இல் நடைபெறுகிறது.இந்தக் கண்காட்சி ஒரு வாரத்துக்கு நடைபெறும்.
முதல் நாளிலேயே ஒரு இலட்சம் பார்வையாளர்கள் வந்து போனார்கள் என ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.இரண்டாவது நாள் ஞாயிறு ஆகையால் அதிக கூட்டம்.நீங்கள் செல்லும் போது முதலிலேயே Hall A க்குச் சென்று புத்தக நிலையங்கள் தொடர்பான விபரம் அடங்கிய துண்டை பெற்றுக்கொண்டால் இலகு.அல்லது முன்னாலேயே பெற்றுக்கொள்ளலாம்.
இந்த முறை சரியாகத் தமிழ்ப் புத்தக நிலையங்களை இனங்காண முடிந்தது. தமிழ்ப் புத்தக விரும்பிகளுக்கு ஏற்ற நிறைய புத்தகங்கள் ஜெயா புக் சென்டரிலும்(Hall -A : A-47, 51- 58),பூபாலசிங்கம் புத்தகசாலையிலும்(A - 25,27) மற்றும் புக்வின்னிலும்( Hall J - 400) கிடைக்கிறது. ஜெயாவில் அதிகமாக ரமணிச்சந்திரன்,பாலகுமாரன்,இந்திரா பார்த்தசாரதி,சுஜாதா புத்தகங்களை காணக்கிடைத்தது.
பூபாலசிங்கத்தில் எஸ் ராமகிருஷ்ணன் புத்தகங்கள் கிடைத்தது.ரமணிச்சந்திரன்,பாலகுமாரன் ,இலக்கியப் புத்தகங்கள் அதிகம்.நடுத்தர வயதானவர்கள் அதிகமாக ரமணிச்சந்திரன் கதைகளை புரட்டிக்கொண்டிருந்ததால் அந்தப் பகுதி கொஞ்சம் சிரமம்.பத்து நாட்களில் ஜாவா' புத்தகத்தை பத்து நிமிடமாக ஒருவர் படித்துக்கொண்டு வழிவிடவில்லை. பிற மொழிப் புத்தக நிலையங்கள் அளவுக்கு தமிழில் கூட்டம் இல்லை.கூட்டம் இல்லாதது நமக்குச் சாதகம்.பொறுமையாகத் தேர்ந்தெடுக்கலாம். எக்சைலையும், கோணல்களையும் கொஞ்சம் படிக்கலாமா என்று யோசித்துவிட்டு வைத்துவிட்டேன்.படித்துப் பார்க்க வேண்டும்.இரண்டு மூன்று புத்தக நிலையங்களில் உள்ள புத்தகங்களை புரட்டவே நேரம் சரியாக இருந்தது.
எஸ் ராமகிரிஷ்ணன் அவர்களின் 'காண் என்றது இயற்கை' ,ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்', சுஜாதாவின் 'தோரணத்து மாவிலைகள்',மதனின் 'கிமு கிபி' யோடு வீடு திரும்பவேண்டியதாகிவிட்டது.திரும்பப் போவதாக உத்தேசம்.
பாடசாலை மாணவர்களுக்கு ஏற்ற பயிற்சிப் புத்தகங்கள், பாடப்புத்தகங்கள் அதிகம்.பலர் குடும்பமாக கண்காட்சிக்கு வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. கண்காட்சி 22 ஆம் திகதி வரை நடைபெறும்.மறக்காமல் குழந்தைகளையும் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்லுங்கள்.
Comments