Skip to main content

உகரச்சுட்டும்(முன்மைச்சுட்டு )ஈழத்தமிழும்

மொழிஞாயிறு என்றழைக்கப்படும்  ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய வேர்ச்சொற் கட்டுரைகள் படிக்க நேரிட்டது .   அதில் உ என்னும்  வேர்ச்சொல் பகுதியில் உகரச்சுட்டு பற்றி பகிர்ந்திருப்பார் . 






உகரம்  ஒலிக்கும் போது இதழ் குவிந்து முன்னோக்குவதால் உகரச்சுட்டும், பேசுபவரின் முன்னிடத்தை குறிக்கும் . 

ஒருவரை நோக்கி சொல்கிறோம் என்றால் அவர் முன்னிலையில் (மிக நெருக்கமாக ) உகரச்சுட்டு பயன்படுத்தப்படும் .

உதாரணமாக : உதுக்காண்
                               உந்தா
                               உந்த
                               உவன்
                               உது
                               உவை


உந்த ( இந்த ) சொற்கள் ஈழத்தமிழ் பேச்சுவழக்கில் இன்றும் உள்ள சொற்கள் . இந்த உகரச்சுட்டு யாழ்ப்பாணத்தில் உண்டு தமிழ் நாட்டில் வழக்கற்றதாகி விட்டது என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கார் தேவநேயப் பாவணார் .

ஈழத்தமிழில் இவற்றின் பயன்பாடுகள் :

உதுக்காண் ( என் முன் பார் ) இருக்கும் நல்லா தேடிப்  பார் .

உவனிட்ட(முன் நிற்ப்பவர் ) எத்தனையோ  தடவை சொல்லீட்டன் 

சும்மா உவ்விடமா (உ + இடம் ) வந்தனான் . அப்பிடியே உங்களையும் பாத்திட்டு போகலாம் எண்டு வந்தன் . 

என அன்றாட வழக்கில் இந்த உகரச்சுட்டு உண்டு . இலங்கை தமிழின் பழமைக்கு இதுவொரு எடுத்துக்காட்டு என சொல்லலாம் . 

காரணம் இந்த உகர சொற்கள் சில பல்லாயிரம் வருடங்கள் பழமையான குமரி நாட்டில் (லெமூரியா கண்டம் ) வழக்கில் இருந்ததாக சொல்கிறார் தேவநேயப்பாவனார் . அவற்றில் சில வழக்கில் இல்லை என்கிறார் .  




Comments

உகரச்சுட்டு பதிவு அழகு! வாழ்த்துக்கள்!:)

ஈழத் தமிழில் இந்த “உவன், உவள்” புழக்கம் நிறைய உண்டு! நாம தான் உவனைத் தொலைச்சிட்டோம்:(

ஈழத் தமிழ்: அட பெடியன்களா, “அந்த” வடிவான பெட்டைய, இந்த ஒளிஞ்சான் “உவனுக்கு”ப் பிடிச்சிருக்குதாம்:)

சென்னைத் தமிழில்: டேய் மச்சி, அந்த பிகரை, இதோ ஒளிஞ்சிக்கிட்டு இருக்கானே, இவன் (உவன்) ரூட் வுடறான்:)
----------------------

ஆங்கிலத்தில் பார்த்தீங்க-ன்னா ஒருத்தன் தொலைவில் இருந்தாலும் He தான்! கிட்டக்க இருந்தாலும் He தான்!
தமிழில் இடம் பொருள் ஏவல் உண்டு:)

எடுத்துக்காட்டாச் சொல்லட்டுமா?
நானும் TPKDஉம் பெங்களூருவில் நேரில் பேசிக் கொள்ளும் போது,

* ராகவன் அதே டேபிளில் கிட்டக்கவே உணவு உண்டால்
= “இவன்” புட்டு விரும்பிச் சாப்புடுவான்”
* ராகவன் அப்போ சென்னையில் இருந்தா
= “அவன்” புட்டு விரும்பிச் சாப்பிடுவான்!

* ராகவன் கிட்டக்க தான் இருக்காக, ஆனா டேபிளில் இல்ல, எனக்கும் TPKD க்கும் chicken vindaloo வாங்கியாற counter-க்கு போயிருக்காங்க-ன்னா
= “உவன்” புட்டு விரும்பிச் சாப்பிடுவான்
= உவனே பில்லும் கட்டீருவான்:))

உவன் = அண்மையில் சேய்மை! அருகில் தொலைவு:)
அதாச்சும்…
1st Person = தன்மை
2nd Person = முன்னிலை
3rd Person = படர்க்கை
உவன் = படர்க்கை போல் வரும் முன்னிலைச் சுட்டு!

பொதுவா
இ = முன்னிலை
அ = படர்க்கை
உ = நடுவில் வருவது!

இவன், இவள், இது, இவை
அவன், அவள், அது, அவை
உவன், உவள், உது, உவை
—-

மலையாளத்திலும் உவன் உண்டு-ன்னு நினைக்கிறேன்; அறிந்தவர், அறியத் தாருங்கள்
ஆயாளு அறியும், இவனும் உவனும் அறிகில்லா!

அ=சேய்மை, இ=அண்மை
இது ஆ, ஈ -ன்னு மலையாளத்தில் நீளும் = ஆயாளு, ஈயாளு
தமிழில் கூட நீளும்
அங்கு=ஆங்கு, இங்கு=ஈங்கு!

ஒடனே கேப்பீங்களே, உங்கு=ஊங்கு இருக்கான்னு?:))
----------

உங்கும் இருக்கு!
ஊங்கும் இருக்கு:)

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் “ஊங்கு இல்லை கேடு!
—-

அதே போலத் தான்
அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம்

ஊழையும் “உப்பக்கம்” காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்!
—-

இடக் குறியீடுகளுக்கு “அ”/ “இ” போடுவது போலவே, “உ”-வும் போடலாம்
உங்ஙனம், உவ்விடம், உங்கு, உப்பக்கம்…
ஆகா நண்பா . இவ்வளவு நீள பின்னூட்டமா :-)

நீங்க இன்னும் அழகா விபரிச்சு இருக்கீங்க :)

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...