நாம் சிறுவர் பிராயத்தில் கடந்து வரும் நபர்கள் , உறவுகளில் எம் மீது அதீத அன்பு வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களின் அன்பை சரியாக புரிந்துகொள்வதில்லை.காலங்கடந்த பின்னரே இந்த உறவுகளின் அன்பின் ஆழம் எமக்கு தெரியவரும் . அவர்களின் இன்மையை உணரும் போது இது இன்னும் அதிகமாகும் .
அவர்கள் மீதான வெறுப்பிற்கு அவர்களின் தோற்றம் , நடத்தைகள் காரணமாக இருக்கலாம் . ஆனால் அவர்கள் வைத்திருக்கும் அன்பு ஆழமானது . எமக்கு எதுவெல்லாம் சின்ன சின்ன மகிழ்ச்சியை தருமோ அதையெல்லாம் அவர்கள் மனம் கோணாது செய்வார்கள் . அந்தளவு முதியவர்கள் எம் மீது வைக்கும் அன்பு சிறிது கூட சுயநலமில்லாத அன்பு எனலாம் .
ஆனால் அவற்றை நிறைவேற்ற அவர்கள் என்ன என்ன முயற்சிகள் மேற்கொண்டார்கள் என்பதை நாம் உணர்வதில்லை .எமது விருப்பங்களை அவர்கள் நிறைவேற்ற நிறைவேற்ற எமக்கு விருப்பங்கள் அதிகரிக்குமே தவிர அவர்கள் நிலையை புரிந்துகொள்வதில்லை .
அப்படிப்பட்ட ஒரு சிறுவன் பாட்டியுடன் தங்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறான் . அந்த சிறுவனுக்கும் அவனது கிராமத்து பாட்டிக்கும் இடையேயான பாசம் , வெறுப்பு ,கலந்த உறவுப்பயணம் தான் இந்த திரைப்படம் .
முதியவர்கள் இளம் சமுதாயம் மீது செலுத்தும் எல்லையற்ற அன்பை, சற்றும் தொய்வில்லாத நேர்த்தியான திரைக்கதையினூடு சொல்லியிருக்கிறார் அந்த பெண் இயக்குனர் .
தென் கொரியாவின் தலை நகர் சியோலில் இருந்து தொலை தூரத்தில் இருக்கும் ஒரு கிராமம் நோக்கி ஒரு தாயும் மகனும் பயணம் செய்வதோடு கதை ஆரம்பிக்கிறது . அமைதியற்ற ,குழப்படியான சிறுவன் என்பது அவன் நடத்தைகளை வைத்தே சொல்லப்படுகிறது . இருவரும் ஒரு கிராமத்தில் உச்சியில் தனியான இருக்கும் ஒரு வீட்டை அடைகின்றனர் .
அங்கிருக்கும் வயதான பாட்டியிடம் , தான் வேலை தேடிக்கொண்டிருப்பதாகவும் அதுவரை தன்னுடைய பிள்ளையை பார்த்துக்கொள்ளும் படியும் சொல்லிவிட்டு தலைநகர் சியோலிட்க்கு செல்கிறார் தாய் .
முதல் சந்திப்பிலேயே 'என்னை தொடாதே அழுக்காக இருக்கிறாய்' என்கிறான் சிறுவன் . அவனுக்கு அந்த பாட்டி மீது விருப்பமில்லை . படிப்படியாக அவரது அன்பை எப்படி உணருகிறான் என்பதை நேர்த்தியான காட்சி அமைப்புகள் ,சம்பவங்களை வைத்தி சொல்லியிருக்கிறார் இயக்குனர் . மிகுதியை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .
இதில் வரும் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் எம்மை ஈர்த்து விடுவது தான் இயக்குனரின் வெற்றி. அதுவும் ஒவ்வொரு காட்சியும் எம்மை பிரதிபலிப்பதாக திரைக்கதையின் உதவியோடு கொண்டு செல்வது தான் படத்தின் வெற்றி .
இடையிடையே சிறுவனிடையே இருக்கும் ஈகோவையும் நகைச்சுவையான காட்சி அமைப்புகள் மூலம் காட்டியிருப்பார் இயக்குனர் .
எந்தவித ஆர்ப்பாட்டமும் , அழுது புரளும் காட்சிகளும் இல்லை . ஆனாலும் மனதை மென்மையாக வருடவும் செய்யும் , ஓங்கி அடித்தால் போல இறுக்கமாக்கவும் செய்யும் காட்சிகள் .
இப்போதிருக்கும் தலைமுறை இடைவெளியில் இது போன்ற படங்களை அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும் .
இந்த படத்தை ஆங்கில உப தலைப்போடு இங்கு பார்க்கலாம் ...
Comments