கவிதாஞ்சலி - கவியரசு கண்ணதாசன்

செவ்விது! செவ்விது! தமிழ்க்காதல்.  

இன்று கவியரசு கண்ணதாசனின் 90வது பிறந்ததினம். இலக்கிய நயத்தைத் திரையிசைப் பாடல்களுக்குள் நுழைத்தவர் கண்ணதாசன். நூற்றுக்கணக்கான பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். இந்தப் பதிவில் இரண்டு பாடல்களில் இருக்கும் இலக்கிய நயத்தைப் பார்க்கலாம். இப்படியான தமிழையும் இனிமையையும்  இனித் திரையில் எதிர்பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை.
முதலில் "அன்புள்ள மான் விழியே என்கிற  பாடலில் உள்ள  இலக்கிய நயம் பற்றிப் பார்க்கலாம். காதலன், "அன்புள்ள மான் விழியே" என்று ஆரம்பித்து ஒரு கடிதம் எழுதுகிறான். உயிர்க் காதலோடு அவளுக்குக்  கவிதை எழுதுகிறான். "உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால்" என்பதுபோல, சேருகிற போதெல்லாம் உயிர் தளிர்க்க தீண்டலால் இது உயிர்க்காதல். எப்போது தீண்டினாலும் காதல் புதிதாய்த் தோன்றும். இப்படியாகத் தொலைவின் ஏக்கத்தில்/ பிரிவின் துயரில் கடிதம் எழுதுகிறேன் என்கிறான்.
ஆனால் அவளோ "நானும் ஆசையில் ஒரு கடிதம் வரைந்தேன். ஆனால் அதைக் கைகளில் எழுதவில்லை. இரு கண்களில் எழுதிவந்தேன்" என்று பதில் போடுகிறாள். நீதானே மான் விழியாள் என்றாய்! உன்னையும் என்னையும் பற்றிய கனவுகளை என் மருண்ட கண்கள் கொண்டு காட்சிகளாக்கி எழுதி வந்தேன் என்கிறாள். காட்சியமைப்பில், அந்த வரிகளை அவள் பாடிக்கொண்டு  கண்களில்  காட்டும் நளினம் ஒரு காட்சியையே வரைந்து செல்கிறது.
இவனும் உடனே  அவள் அழகைப் புகழ்வதுபோல, காதலைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறான். அவளைக் பூங்கொடியோடு ஒப்பிட்டு எழுதுகிறான். கொடி ஒடுங்கி மலர்களின் பாரம் தாளாது  துவண்டது போல இருக்கும். இலக்கியங்களில் பெண்களை நெடுங்கொடியோடு ஒப்பிடுவார்கள். அதைப் பெண்களின் அழகென்று சொல்லலாம். அதேநேரம் காதல் நோயால் துவண்டாள் எனும் அர்த்தமும் பெறும்.
"இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ"

சுகமாக இருக்கிறாயா! பிரிவின் துயரால் உன் இடை மெலிந்து, நடை துவண்டு பூங்கொடி போல ஆகிவிட்டாயா? வாடைக் காற்று உனக்கு மேலும் துயரைத் தருகிறதா எனக் கேட்கிறான். இவனில்லாமல் அவள் வருந்துகிறாள் எனும் செய்தியை அவளே சொல்லிக் கேட்கவேண்டும் எனும் ஆர்வத்தில் கேட்கிறான். அவள் தன்மீது எவ்வளவு காதலாயிருக்கிறாள் என்பதைக் கேட்பதில் அப்படியொரு இன்பம். "எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ" என்கிறான். என்ன அழகு!
அவள் நிறையவே புத்திசாலி. இவன் நோக்கம் கண்டுபிடித்துவிட்டாள். அவனைச் சீண்டுகிறாள்.
"இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா
வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா
வாடவைத்ததும் உண்மை அல்லவா"

நல்லிலக்கணம் கொண்ட பெண்ணின்  இடை மெலிவது இயற்கை. வெட்கத்தால் நடைதளர்ந்தது. பூங்கொடி பெண்மையின் வடிவம்தானே! இறுதியில், இதற்குமேல் சீண்டவேண்டாமென்று வாடவைத்தது உண்மை என்பதை ஒப்புக்கொள்கிறாள். "வாட வைத்ததும் உண்மை" என்கிற இடத்தில் பரிகாசம் செய்வதுபோன்ற  அந்தப் பெண்மையின் முகபாவனையில் எவ்வளவு நயம்! இந்த முகபாவனைகள் எல்லாம் நவீன சினிமாவில் தேடினாலும் கிடைக்காது.
தமயந்தியை மணம் முடித்த நளன் அவளோடு நாடு திரும்புகிறான். அவளோடு வரும்போது இயற்கைக் காட்சிகளை அவளுக்குக் காட்டுகிறான். சோலையில் பெண்கள் மலர் பறித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கை தீண்டியதும் கிளைகள்கூட தாழ்ந்துவிடுகின்றன. அங்கே மலரைப் பறித்துக்கொண்டிருக்கிற ஒரு பெண்ணின் ஒளி பொருந்திய முகத்தைத் தாமரை என்று நினைத்து வண்டுகள் வந்து மொய்க்கின்றன. அதை அவள் தனது செந்நிறக் கையால் தடுக்கிறாள். அவை அந்தக் கைகளைக் காந்தள் மலரென்று நினைத்து மொய்க்கின்றன. அதனால் அவள் அச்சங்கொண்டு வியர்த்து நிற்கிறாள்.நளன் சோலையில் காட்டுகிற பெண்கள் அவ்வளவு மென்மையும் அழகும் பொருந்தியவர்கள். இதையெல்லாம் ஏன் அவளுக்குச் சொல்கிறான்! இத்தனை அழகிகள் இருந்தும் உன்னைப் போல் எவரும் என்னைக் கொள்ளையிட்டதில்லை என்பதையும் சொல்லாமல் சொல்கிறான்.

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் – செங்கையால்
காத்தாள்;அக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காண்!என்றான் வேந்து. - நளவெண்பா 

இதை "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்" என்கிற பாடலில் நயம் குன்றாமல் எளிமைப்படுத்திக் கொடுத்திருப்பார். காதலன் முன்னாலேயே அவளை பார்க்கும் ஆர்வத்தோடு வந்துவிட்டான். இவள் சற்றுத் தாமதமாக வருகிறாள். அழகியே! நீ வரும் வழியில்  உன் அழகை என்னவெல்லாம் தடுத்தது என்று வினவுகிறான்.

"நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?" என்று கேட்கிறான்.
அவள் அதற்குச்  சொல்லும் பதிலில் இலக்கியத்தை அழகாக நுழைத்திருப்பார். 

"பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற"

இயற்கைப் புனைவும் உள்ளுறை உவமும் காதல் இலக்கியத்துக்கு அழகு. அதை உணர்ந்து பயன்படுத்தியதும் கண்ணதாசனின் கவித்திறமையே!   எட்டாம் வகுப்பு வரை படித்தவன் என்கிறார்கள் .அவர் உரையைக் கேட்கக் காத்திருந்த தமிழ் அறிஞர்கள் எத்தனை பேர் ! தமிழ் அவரை  எட்டா உயரத்தில் கொண்டுபோய் வைத்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

ராதாமோகனின் வேகமான பயணம் போகலாம் (எனது பார்வையில்)

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்