இலக்கியக்காதல் போல அழகான மொழியமைப்பும் காதலும் கொண்ட பாடல்கள் சில வந்திருக்கின்றன. அதில் "என் சுவாசக்காற்றே" படத்தில் இடம்பெற்ற "தீண்டாய் மெய் தீண்டாய்" என்கிற பாடலும் குறிப்பிடத்தக்கது. இதில் "மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே" என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். வைரமுத்துவின் இந்த வரிகள் தவறென்று சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். அப்படியல்ல, இதன் பொருள் வேறு. கம்பராமாயணத்தில் சீதைக்கே இந்தச் சந்தேகம் வருகிறது. இராமன் வில்லை உடைப்பதற்கு முன்னமே அவனைக் கன்னிமாடத்திலிருந்து பார்த்துவிடுகிறாள் சீதை. அவன் மீது காதல் வயப்படுகிறாள். பிறகு, வில்லை ஒருவன் உடைத்துவிட்டான் என்கிற செய்தியைத் தனது தோழிகள் சொல்லித் தெரிந்துகொள்கிறாள். ஆனால் தான் அப்போது பார்த்தவனும் இவனும் ஒருவன்தானா என்கிற சந்தேகம் அவளுக்கு திடுக்கென்று வந்துபோகிறது. இருவரும் ஒருவரேயானால் மகிழ்ச்சி என எண்ணுகிறாள். சபையில் எல்லோர் முன்னாலும் அவனைத் தலைநிமிர்ந்து வேறு பார்க்கமுடியாது. பெரியவர்கள் ஏதேனும் எண்ணுவார்கள் என்கிற பயமும் நாணமும் காரணமாக இருக்கலாம். அதனால் தனது கைவளையைத் திருகுவதுபோல கடைக்கண்ணால் பார்க்கிறாள். அவளது சந்தேகம் தீர்ந்தது.
"எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்.
மெய் விளைவு இடத்து. முதல் ஐயம் விடலுற்றாள்.
ஐயனை. அகத்து வடிவே அல. புறத்தும்.
கைவளை திருத்துபு. கடைக் கணின் உணர்ந்தாள்."
அதேபோல, இந்தத் திரைப்படத்திலும் தன்னைத் தீ விபத்திலிருந்து காப்பாற்றியவன் மீது காதல் கொள்கிறாள். அவன் முகத்தை அவளால் பார்க்கமுடியவில்லை. தொட்டுத் தூக்கிய அவன் தொடுகை மட்டும்தான் நினைவிருக்கிறது. பிறகு, ஒருவன் தனது கவிதைகளை உச்சரிப்பதைக் கண்டு காதல் கொள்கிறாள். அந்தக் கவிதைக்காதலனை இவள் சந்திக்கிறாள். அச்சந்தர்ப்பத்தில் அவளை மீண்டும் அவன் தொட்டுவிடுகிறான். தொட்டுவிட இந்தக் கவிதைக்காதலனும் அவனும் ஒருவனா என்று திடுக்கிடுகிறாள். இருவரும் ஒரேவரேயானால் சீதையைப்போல இவளுக்கும் மகிழ்ச்சி.
‘ஆம்’ என. அயிர்ப்பான்.
கன்னி அமிழ்தத்தை எதிர்
கண்ட கடல் வண்ணன்.
சீதைக்கு வந்த அதே சந்தேகம் இராமனுக்கும் வருகிறது. நான் கன்னிமாடத்தில் கண்ட அந்தப் பெண்ணும் இவளும் ஒருத்தியா என்கிற ஐயத்தைப் பார்த்துத் தீர்த்துக்கொள்கிறான்.
"பலபேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்."
இப்படி தமிழ்த் திரைப்படங்களில் ரசனைகள் ஒன்றுசேர்த்த காதலர்கள் மிகக்குறைவு.
"நதியோரப் பூவின் மேலே ஜதி பாடும் சாரல்போலே என்னை இன்ப துன்பம் செய்குவதோ!" காமத்தின் மென்மையைச் சொல்ல எத்தனை அழகான உவமை.
இந்தப் பாடல் தொடர்பான பேஸ்புக் பதிவு
இந்தப் பாடல் தொடர்பான பேஸ்புக் பதிவு
Comments
மறு கன்னம் தந்தாய் பெண்ணே..
இயேசுநாதர் காற்று வந்து வீசியதோ..
இதை விட ஒரு கவிஞன் உவமையாகக் கையாள முடியுமா?
மறு கன்னம் தந்தாய் பெண்ணே..
இயேசுநாதர் காற்று வந்து வீசியதோ..
இதை விட ஒரு கவிஞன் உவமையாகக் கையாள முடியுமா?