ஸ்கொட்லாந்து தேர்தலில் SNP எனப்படுகிற ஸ்கொட்லாந்து தேசிய கட்சி, தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறது. பாராளுமன்றத்தில், 129 இல் 64 இடங்களைப் பெற்றிருக்கிறது.
2016ம் ஆண்டுத் தேர்தலில் பெற்றதை விடவும் இந்தமுறை ஒரு இடம் அதிகமாகப் பெற்றிருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விடவும் ஒரு இடம் குறைவாகப் பெற்றிருக்கிறது.
ஸ்கொட்லாந்தின் தேர்தல் முறை எந்த ஒரு கட்சியும் இலகுவில் பெரும்பான்மையைப் பெற்றுவிட முடியாதபடி அமைக்கப்பட்டது. எல்லாக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இணைந்து மக்களுக்காக வேலை செய்யவேண்டும் என்கிற வகையில் அமைக்கப்பட்டது.
ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் மொத்தம் 129 இடங்கள். ஆனால் மொத்தத் தொகுதிகளோ வெறும் 73 தான்! அப்படியானால் மிகுதி உறுப்பினர்களை எப்படித் தெரிவு செய்கிறார்கள்?
வாக்குச் செலுத்தும்போது இரண்டு நிறங்களில் வாக்குச்சீட்டு வழங்கப்படும். ஒன்று, ஊதா நிறத்தில் உள்ள படிவத்தில் உங்கள் தொகுதியில் உங்களுக்குப் பிடித்த உறுப்பினரைத் தெரிவு செய்யலாம். இன்னொன்று, peach நிறத்தில் உள்ளதில் உங்கள் பிராந்தியத்தில் உங்களுக்குப் பிடித்த கட்சியினைத் தெரிவு செய்யலாம்.
அதில், தொகுதியில் பிடித்த உறுப்பினரைத் தெரிவுசெய்வது, First past the post சிஸ்டம்படி வேலைசெய்கிறது. ஊதா நிறத்தில் உள்ள படிவத்தின்படி தொகுதியில் அதிகமாக வாக்குகள் பெறுகிறவர் நாடாளுமன்றத்தின் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படுவார். மொத்தம் 73 உறுப்பினர்கள் இந்த முறையில் தெரிவு செய்யப்படுவார்கள்.
மிகுதி 56 உறுப்பினர்களும் பிராந்தியத்தின் வாக்குகள் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். அதாவது, ஸ்கொட்லாந்து எட்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் 7 உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.
முதலில் பிராந்தியத்தில் அதிகமாக வாக்குகள் பெற்ற கட்சியின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தப்படும். அதில் முதலில் பிராந்தியத்தில் ஒரு கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையினை, அந்தப் பிராந்தியத்தில் கட்சி பெற்ற சீட்டுகளின் எண்ணிக்கையோடு ஒன்றினைக் கூட்டிப் பிரிப்பார்கள்.
உதாரணமாக, ஆப்பிள் என்கிற ஒரு கட்சி பிராந்தியத்தில் 1 லட்சம் வாக்குகள் பெற்றிருக்கிறது என்று வைப்போம். அதே கட்சி அந்தப் பிராந்தியத்தில் மூன்று சீட்டுகள் பெற்றிருக்கிறது என்றால், ஒரு லட்சத்தினை மூன்று +1 = நான்கினால் பிரிப்பார்கள். பிரிக்கும்போது இந்தக் கட்சி 25,000 வாக்குகளோடு பின்னால் போய்விடும். அடுத்ததாக 75,000 வாக்குகளோடு இருக்கிற ஆரேஞ் என்கிற கட்சி மேலே வரும். அந்தக் கட்சிக்கு ஏழில் ஒரு சீட்டு வழங்கப்படும். மீண்டும் அதே ஆரேன்ஜ் கட்சிக்கு கிடைத்த 75,000 வாக்குகளை அந்தக் கட்சி பெற்ற சீட்டுகளின் எண்ணிக்கையோடு ஒன்றினைக் கூட்டி பிரிப்பார்கள். அது பின்னால் போல மூன்றாவதாக ஒரு ஸ்டாபெரி கட்சி வரும். அதற்கு ஒரு சீட்டு வழங்கப்படும். இப்படி இதே செயற்பாடு ஏழு உறுப்பினர்கள் கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இதனால் ஏனைய கட்சிகளுக்கும் நாடாளுமன்றத்தில் இடம் கிடைக்கிறது.
இவ்வளவு சிக்கலான உறுப்பினர் தெரிவுமுறை ஏன் என்றால் உதாரணமாக ஒரு தொகுதியில் 33 வீதம் எடுக்கிறவர் உறுப்பினரான வருவதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது. அரசாங்கமே 33 வீதத்தோடு பெரும்பான்மை அமைப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் இதில் மிகுதி 67% சதவீதமான மக்கள் அவரை நிராகரித்திருக்கிறார்கள். ஜனநாயக முறைப்படி அந்த 67% மக்களின் குரலுக்கு இடமில்லை. இந்த hybrid தேர்தல் முறை கட்சிக்கு கிடைக்கிற வாக்கு அடிப்படையில், மக்கள் கட்சிக்கு வழங்குகிற வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறைப்படி ஏனைய கட்சி உறுப்பினர்களையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஸ்கொட்லாந்து பிரிட்டனிலிருந்து தனியாகப் பிரிந்து போவதா இல்லையா என்று வாக்கெடுப்பு நடத்துவோம் என SNP கட்சியும் Scottish Green Party என்கிற கட்சியும் பிரச்சாரம் செய்தது. இதில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி 64 இடங்களையும், கிறீன் பார்ட்டி 8 இடங்களையும் பெற்றிருக்கிறது. கொரோனா இடர் முடிந்தபிறகு இரண்டாவது தடவையாக, பிரிந்து போவதா இல்லையா என்று வாக்கெடுப்பு நடத்துவோம் என ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டெர்ஜன் சொல்கிறார்.
Comments