ராதாவுக்கு கவிதைகளென்றால் அவ்வளவு பிடித்தம். ஒன்றைப் பிடிக்கிறதென்றால், அதை ஏன் பிடிக்கிறது என அவளுக்குள்ளேயே ஒரு கேள்வி கேட்டுக்கொள்வாள். ஆதலால், தனக்குப் பிடிக்கிற விஷயங்கள் மீது, அவளுக்கு ஓர் ஆழ்ந்த புரிதல் இருந்தது. அதனால் அவளால் ஒன்றில் தனித்து இலயிக்க முடிந்தது. அவளுடைய இந்த இலயிப்பையும் புரிதலையும், அவசர உலக மாந்தர்களால் உடைக்க முடியாமல் போகிறபொழுது, ஒருவித எரிச்சலையும், கோபத்தையும், அவள் மீது வளர்த்துக்கொண்டார்கள். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. கவிதையென்பது, ஓர் உயிர் தன்னுள் தான் மூழ்கி, தன் உயிரின் வடிவங்களில் ஓர் அழகினையும், ஒழுங்கினையும் கண்டு தெளிந்து, அதை மொழியில் வார்த்து, மீண்டும் விழுங்கிக்கொள்ளும் வளமான செயலென்று கருதுவாள். கவிதைக்கு, வடிவம் ஒன்று இல்லையென்றும், மனதில் ஆசைப்பெருக்கம் செய்யும் அத்துணை அழகையும் கவிதையென்றும் நம்பினாள். அவளுக்கு அவை, பண்டைய மொழிபோல, படவெழுத்துக்களால் ஆனவையாக இருந்தால் மேலும் மகிழ்ச்சி. அந்தப் படவெழுத்துக்களால் கண்ணன் அவளைப் புனையும் பொழுதெல்லாம், கண்களை மூடிக்கொண்டு அந்தக் காட்சியாகிக் கரைந்து போவாள். இப்படி அவள், எதில்...