கௌதமின் 'அச்சம் என்பது மடமையடா' மசாலாத் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது. பயணம், காதல், அதிரடி என்று மூன்றையும் இணைத்திருக்கிறார். பயணத்தில், ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை நிதானமாக உணரமுடியவில்லை.மிக அவசரமான பயணம். எல்லாவிதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்த முயன்றால் எதிலுமே நிறைவு காண்பது கடிது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனாலும் இது கௌதம் மேனன் படம்தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. கௌதம் மேனன் படங்களுக்கேயுரிய, பொதுவான அடிப்படை அம்சங்கள் உள்ள திரைப்படம்.
பயணத்தில் கௌதமுக்கு எப்போதுமே ஒருவித ஈடுபாடு உண்டு. மணிரத்னத்தின் "எவனோ ஒருவன் வாசிக்கிறான்" பாடல் தந்த தாக்கத்தை வைத்தே ஒரு பத்துத் திரைப்படம் கொடுத்துவிடுவேன் என்று சொன்னவர். அவர் படங்களில் பெரும்பாலும், காதலைத் தேடிச் செல்லும் பயணமாக இருக்கும். அல்லது, ஒருவித அதிரடித் தேடல் தரும் சுகத்தினை நோக்கிய பயணமாக இருக்கும். காதல் தேடலுக்கு, "வாரணம் ஆயிரம்" மேக்னாவையும், "நீதானே என் பொன்வசந்தம்" வித்யாவையும் தேடிச்செல்லும் காட்சிகளைச் சொல்லலாம். அதேபோல, "வாரணம் ஆயிரம்" திரைப்படத்தில் ஷங்கர் மேனனின் குழந்தையைத் தேடிச்செல்லும் காட்சி இரண்டாவது வகைப் பயணத்துக்குப் பொருத்தமான உதாரணம். இது, காதலையும் அழைத்துக்கொண்டு அதிரடித் தேடல் தரும் சுகத்தை நோக்கிச் செல்லும் பயணம். ஆரம்பத்திலேயே தன் தங்கையைப் பார்த்து, "அவ தொந்தரவு கிடையாது.She is inspiring." என்று சொல்கிற வசனத்தின் முக்கியத்துவம் படத்தின் இறுதிவரை தொடரவேண்டும் என்பதில் கௌதம் கவனமாக இருந்திருக்கிறார். இருந்தாலும், அவள் கண்கள் பார்த்து "I wanna make love to you all the time"என்று சொல்கிற காதலுக்கான சந்தர்ப்பம் எல்லாம் இதில் கிடையாது.
"Inspired by a moment from The Godfather" என்கிற அறிமுகத்தோடு ஆரம்பிக்கிறது திரைப்படம். படம் ஆரம்பித்துச் சில காட்சிகள் கடந்தபின், "தலைமுடிக்கும் பின் ஷேர்ட் காலருக்கும் நடுவுல தீப்பிடிக்கும். அவ என்னைப் பின்னாடிருந்து பாக்கிறாவோன்னு நினைக்கும்போதெல்லாம்..." என்றொரு வசனம். படத்தின் ஆரம்பத்தில் காட்டப்பட்ட அதிரடிக் காட்சிக்கும் இந்தக் காதலுக்கும் இடையில் என்ன என்று மனசு துருவ ஆரம்பிக்கும். ஒரு கௌதம் ரசிகனாக, அவரின் இந்த இணைப்பை வெகுவாக ரசிப்பது உண்டு. "காக்க காக்க" படத்தின் ஆரம்பம் ஒரு நல்ல உதாரணம். காயப்பட்ட அன்புச்செல்வன் நீருக்குள் வீழ்கையில் "உயிரின் உயிரே" பாடல் ஆரம்பிக்கும். அந்தப் பாடலின் வரிகள் அப்படியே ஆட்கொண்டுவிடும். "ஒரு அதிரடிப் படத்தின் ஆரம்பத்திலேயே காதல் பாடலா" என்று யோசிக்காமல் ரசிப்போம். அது மாயம். தன் இறுதிக் கணங்களில் காதலைத் தேடுகிற ஒருவனின் கண்ணீர். அதேபோல, இந்தப் படத்தில் "தள்ளிப்போகாதே" பாடலைப் பயன்படுத்தியிருக்கிற இடம் அதிஅற்புதம். திரையில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
கௌதமின் படங்கள் அதிரடியாக அமைந்தால் காதல் மெலிதாய் தலைகாட்டும். அப்படித் தலைகாட்டும் காதல், படம் முடிந்தபிறகும் இருதயத்தில் சம்மணமிட்டு அமர்ந்துகொள்ளும். மாயாவின் கண்களையும், கயல்விழியின் சிரிப்பையும், ஆராதனாவின் முகங்களையும் மறந்துவிடமுடியாது. இங்கு முதல் பாதி காதலுடன் கூடிய பயணம். இரண்டாம் பகுதியில் அதிரடியுடன் கூடிய வன்முறைக் காட்சிகள் அதிகம்.
இயக்குனர்களுக்கு உள்ளடக்கம் கொடுப்பதிலும் திரைப்படங்களுக்கு எழுதிக்கொடுப்பதிலுமேயே தனக்கு அதிக விருப்பம் என்று மஞ்சிமா சொல்வார். உண்மையில் இயக்குனர்களே கதை ,திரைக்கதை, வசனம் என்று எல்லாமும் எழுதவேண்டிய அவசியம் கிடையாது. இதன் முக்கியத்துவம் கௌதமுக்குத் தெரியாமல் இருக்காது. கௌதம், நன்றாக வசனம் எழுதக்கூடிய இன்னொருவரை உள்வாங்கிக்கொள்வது நல்லது. சில இடங்களில் ஒரே வசனங்கள் மீண்டும் மீண்டும் வருவதாகத் தோன்றுகிறது.
இயக்குனர்களுக்கு உள்ளடக்கம் கொடுப்பதிலும் திரைப்படங்களுக்கு எழுதிக்கொடுப்பதிலுமேயே தனக்கு அதிக விருப்பம் என்று மஞ்சிமா சொல்வார். உண்மையில் இயக்குனர்களே கதை ,திரைக்கதை, வசனம் என்று எல்லாமும் எழுதவேண்டிய அவசியம் கிடையாது. இதன் முக்கியத்துவம் கௌதமுக்குத் தெரியாமல் இருக்காது. கௌதம், நன்றாக வசனம் எழுதக்கூடிய இன்னொருவரை உள்வாங்கிக்கொள்வது நல்லது. சில இடங்களில் ஒரே வசனங்கள் மீண்டும் மீண்டும் வருவதாகத் தோன்றுகிறது.
இந்தப் படத்தில் முதலில் தெரிவது ஆடை வடிவமைப்பாளர் உத்தாரா மேனன். பின்னணிக் காட்சிகளுக்கேற்ற ஆடை வடிவமைப்பு. ஆனால், மேலதிக வர்ண வேலைப்பாடுகள் உள்ள ஆடைகளில் ஆர்வம் காட்டுகிற கௌதம் மேனனை என்னை அறிந்தாலில் இருந்துதான் கவனிக்க முடிகிறது. அதற்கு முதல் மணிரத்னத்துக்கு மிகப்பிடித்த நளினி ஸ்ரீராம் தான் ஆடை வடிவமைப்பாளர். எளிமையால் கவரக்கூடிய ஆடை வடிவமைப்பு நளினி ஸ்ரீராமுடையது. காக்க காக்க , வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயாவுக்குப் பிறகு கௌதமின் படங்களுக்கு அவர் ஆடை வடிவமைக்கவில்லை என்பது பெரும் இழப்பு.
விண்ணைத்தாண்டி வருவாயாவில் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவைப் பார்த்துப் பழகிய கண்கள் இன்னொரு ஒளிப்பதிவாளரை ஏற்க மறுக்கிறது.
பயணங்களில் நீளமும் விபரங்களும் இல்லை என்று தோன்றியது. எல்லாவற்றையும் திருப்திப்படுத்தப் போனால் எதையாவது இழக்கவேண்டி வரும். துல்கர் நடித்த "நீலாகாஷம், பச்சைக்கடல், சுவன்ன பூமி" படத்தையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு போகாதீர்கள். 'ராசாளி' பாடலில் ஒவ்வொரு நிலத்துக்குமுரிய வீடுகளினதும் சூழலினதும் வேறுபாட்டைக் காட்டியிருப்பார். பாடலில் வேகமாக முடிந்துவிடும் பயணம். "கொஞ்சம் பொறுங்கள்" கௌதம் என்று சொல்லத் தோன்றியது. பயணத்தின் மூலவேரே வேறுபட்ட கலாச்சாரங்களைக் கடப்பதுதான்.அந்தந்தச் சூழலைச் சேர்ந்த மனிதர்களுடன் சேர்ந்து இந்தக் காதலர்களையும் கொஞ்சம் காதல் பழகவிட்டிருக்கலாம். அழகியலின் உச்சமாக இருந்திருக்கும்."ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை மறவேனோ" என்று எழுதிச் சொற்ப உணர்வையாவது தந்த கவிதாயினி தாமரையைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. ரஹ்மானின் பாடல்கள் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
தமிழ்ச் சூழலில் பயணத்தை முக்கியத்துவப்படுத்தி ஒரு படம் கொடுத்தால் வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். நம்மைப் பொறுத்தவரைக்கும் பயணங்கள் என்பது ஒரு நல்ல ஹோட்டலில் தங்குவதும், மிகப் பிரபலமான சுற்றுலாத்தளத்தில் போயிருந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதும்தான். ஒரு நிதானமான காதலையும், உரையாடல்களுடன் கூடிய பயணத்தையும் மட்டும் வைத்துக்கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்கி அதை வெற்றிபெற வைப்பது கடினம். அதனால் இது ஒரு அதிரடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமாகப் பின்நாட்களில் மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது. "சென்னையில் ஒரு மழைக்காலம்" என்று அழகியல் சார்ந்த தலைப்பிட்ட படம் என்னவாயிற்று கௌதம்?
Comments