உன்னுடன் இருக்கையிலே நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே இதுவரை நானும் பார்த்த நிலவா இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா! - நா.முத்துகுமார் |
உதிக்கிற நிலவு தினமும்தான் உதிக்கிறது. அதற்குத் தினமும் புதிய முகம் தரக்கூடியது யார்? காதல் பற்றிய எண்ணம் சிந்தையில் எழ ஆரம்பித்த காலத்திலிருந்தே அது 'ரசனை'யை விட்டு விலகி நிகழ்ந்துவிடமுடியாது என்கிற எண்ணமும் இயல்பாகவே எழுந்தது. இரசனைகள் இரு உயிர்களுக்கிடையேயான காதலின் ஆதாரப் புரிதலையும் அழகியலையும் மென்வெப்பத்தையும் 'தொடர்ந்து' தூண்டவல்லது என்பதை உறுதியாக நம்புகிறேன். காரணம், 'நுண்ரசனை' என்பது வெறுமனே பொதுவான ரசனை அடிப்படையில் எழுவது இல்லை. உதாரணமாக, "எனக்கு இளையராஜா பிடிக்கும். உனக்கு ரஹ்மான் பிடிக்கும்" என்கிற பொதுவான முடிவினை மட்டும் வைத்து இருவரும் ரசனை வேறுபாடு உடையவர்கள் என்று சொல்லிவிடமுடியாது.உண்மையான நுண்ரசனை வேறுபாடென்று இதனைச் சொல்லிவிடமுடியாது. இந்த இருவரின் படைப்புகளையும் நுண்ரசனைக்கு உட்படுத்துவதில் எந்தளவுக்கு ஒருவருக்கொருவர் மாறுபடுகிறோம் அல்லது ஒத்திசைகிறோம் என்பதில்தான் ரசனையின் ஆதாரப்புள்ளியானது செயற்படத் தொடங்குகிறது. இது இலக்கியம், வாழ்க்கை முறை என்று எல்லாவற்றுக்கும் பொருந்தும். இந்தளவு மெல்லிய மன ஒத்திசைவுள்ள இரு உயிர்கள் ஒருவரையொருவர் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிடமுடியாது என்பதுதான் துயரங்களின் ஆதாரம். மேலும், ரசனைகள் ஒத்திசைந்து போகிற இரு உயிர்களின் உடல்கள் போலே ஒத்திசையக்கூடியதும் வேறெதுவும் இல்லை. உயிரைச் சரியாகப் பகிர்ந்துகொள்ளமுடியாத இருஉள்ளங்களின் தீண்டல் ஒருபொழுதும் ஒத்திசையாது. இந்தப் புரிதலின்றி எத்தனையோ காதல் துயரங்கள்! பிரபஞ்சன் சொல்வதுபோல, "சோற்று உருண்டையை விழுங்குவதில் இருந்து பிள்ளை பெறுகிற வரைக்கும் எல்லாவற்றிற்கும் அவசரம்".
சுஜாதாவின் சிறுகதை ஒன்றில், ஒரு பெண் மிகுந்த எதிர்பார்ப்புகளோடும் கற்பனைகளோடும் இருப்பாள். திருமணமான பின்பு அவள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் ஒரு ஆணிடம் பறிகொடுத்துவிட்டதாய் உணர்வாள். அவள் உயிரை ஒரு ஆணால் உள்வாங்கிக்கொள்ள முடியாது போகும். காமம் என்பது அவளது வாழ்வில் அர்த்தமற்றதாகிவிட்டதாய் அவள் உணர்வதை அழகாக விளக்கியிருப்பார்.
கற்பனை உலகில் மாத்திரம் ரசனை அடிப்படையில் இரு உயிர்கள் இணைதல் எளிது. நிகழ் உலகத்தில் அதன் 'பெறுமானம்' உணர்ந்து சேரும் இதயங்கள் மிகச் சொற்பம். காலங்கள் கடந்தபின்பு, தமது ரசனையின் ஆழத்திலும் உயரத்திலும் ஒத்திசையக்கூடிய ஒருவரைச் சந்திக்கும்போது சிலர் மனது கொஞ்சம் நிலைதடுமாறிவிடுவதும் உண்டு. அதனைக் கலாச்சார வேலிக்குள் நின்று தடுக்கப் பார்ப்போம். நம் தமிழ்சினிமாவைப் பொறுத்தவரையில் இதுவொரு விசித்திர நிகழ்ச்சி. Bubbles உடைப்பது, நாய்க்குட்டியைக் கொஞ்சுவதொடு நம் தமிழ் சினிமா நாயகிகளின் ரசனை உலகம் முடிவடைந்துவிடுகிறது. எல்லாவற்றிலும் ஓர் அவசரம். ஆதலால் நமக்கும் ரசனைகளால் கட்டியெழுப்பபட்ட காதலென்பது விசித்திரமான சேர்க்கை என்று தோன்றும். சம உணர்வற்ற ஒருவரால் வாசிக்கப்படும்போது இந்த எழுத்துக்கூட 'உளறல்' என்று உணரப்படக்கூடும்.
ஜெயமோகன் அவர்கள் எழுதிய "இலக்கியத்தின் தரமும் தேடலும்" என்கிற கடிதத்தில் ரசனை பற்றி ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். "ரசனைகள் விளக்குதலாக நிகழ முடியாது, சுட்டிக்காட்டலாகவே நிகழமுடியும்" என்கிற அவரது கருத்துத்தான் இந்தப் பதிவினை இப்போது எழுதவேண்டி வந்தற்கான காரணம். இந்தச் சுட்டிக்காட்டலை ரசனையில் ஒத்திசையாத ஒருவரிடம் நிகழ்த்தமுடியாது. உதாரணமாக, ஒரு கவிதை எழுதுகிறீர்கள். அந்தக் கவிதையின் அழகியலை விளக்கப்போனால் அதன் அழகு கெட்டுவிடும். படிக்கிறவர் அதை எழுதியவரின் கோணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு கோணத்தில் அணுகுவதில் தவறில்லை. ஆனால் அதைப் படிப்பவர் எந்தவித முயற்சியும் இன்றி இருந்தால் அந்தக் கணமே அர்த்தமற்றதாகிவிடும். விளக்கி நிரூபித்தால் ரசனை என்பது அர்த்தமற்றதாகிவிடும். ஒத்த ரசனை உள்ள இருவர் விளக்கம் ஏதுமின்றித் தங்கள் ரசனைகளைப் பகிர்ந்துகொள்ளுதல் போலொரு இன்பம் கிடையாது.
சில உயிர்கள் இந்த ரசனை ஒத்திசையவேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவது உண்டு. ஆனால் அவர்களின் வேண்டுகோள்களைச் செவிசாய்க்காது எத்தனையோ திருமணங்கள் நடந்தேறிவிடுகிறது. எட்டுப்பொருத்தம் பார்ப்பவர்களால் இதன் அழகியலைப் புரிந்துகொள்ளவே முடியாது. உறவுகள் உடைவதில் நம்மிடமே அடிப்படைப் பிரச்சனை இருக்கிறது. இரசனைக்குத் தரம் எனும் அளவீடு இருக்கிறதா? மானுடர் ஈடுபடும் எல்லாச் செயற்பாடுகளிலும் தரம் என்பது நிர்ணயிக்கப்படகூடியது.
"அப்படி எல்லாமே சமம்தான், எல்லாமே முக்கியம்தான் என ஒரு நிலை இருக்கமுடியுமா என்ன? தான் ஈடுபடும் ஒவ்வொரு துறையிலும் மிகச்சிறந்ததை நோக்கி, மிகநுண்மையை நோக்கிச் சென்றுகொண்டே இருப்பதுதான் மானுட இயல்பு. மேலும் மேலும் என்றே அது தாவுகிறது. மானுடர் ஈடுபடும் அத்தனை செயல்களிலும் அந்த மேன்மையாக்கமும் நுண்மையாக்கமும் நிகழ்ந்தாகவேண்டும். தரம் என்பது என்ன என்றால் அந்த ஒட்டுமொத்த முன்னகர்வில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்னும் அளவீடுதான். அந்த ஒட்டுமொத்த உரையாடலில் உங்கள் குரலின் இடம் என்ன என்னும் கேள்விதான்." - ஜெயமோகன்
"அப்படி எல்லாமே சமம்தான், எல்லாமே முக்கியம்தான் என ஒரு நிலை இருக்கமுடியுமா என்ன? தான் ஈடுபடும் ஒவ்வொரு துறையிலும் மிகச்சிறந்ததை நோக்கி, மிகநுண்மையை நோக்கிச் சென்றுகொண்டே இருப்பதுதான் மானுட இயல்பு. மேலும் மேலும் என்றே அது தாவுகிறது. மானுடர் ஈடுபடும் அத்தனை செயல்களிலும் அந்த மேன்மையாக்கமும் நுண்மையாக்கமும் நிகழ்ந்தாகவேண்டும். தரம் என்பது என்ன என்றால் அந்த ஒட்டுமொத்த முன்னகர்வில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்னும் அளவீடுதான். அந்த ஒட்டுமொத்த உரையாடலில் உங்கள் குரலின் இடம் என்ன என்னும் கேள்விதான்." - ஜெயமோகன்
Comments