Skip to main content

திரையிசைப் பாடல்களில் இழையோடும் கவிதைத் தன்மையும் இலக்கிய நயமும்...



இலக்கியத்தையும் கவிஞர்களின் பாடல் வரிகளையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஆக்கங்களில் சிலவற்றை  இங்கே தொகுப்பாகப்  பகிர்கிறேன். இலக்கியத்தின் மீது காதல் கொண்ட கவிஞர்கள், அவற்றை எளிமைப்படுத்திக் கொடுத்த அழகினை இந்தப் பதிவுகள் சொல்கின்றன. ஆழ்ந்த இலக்கியப் புரிதல் உள்ளவர்களால் ஆழமான உணர்வுகளை அழகாகப் பதிவுசெய்ய முடிந்திருக்கிறது.

கம்பனின் பாடல்கள் மனித உணர்வுகளின் மென்தன்மையை நன்றாக எடுத்துச்சொல்லக்கூடியது. அதில் பெண்களின் அச்சச் சிறப்பினைச் சொல்கிற ஒரு அழகான பாடல் இருக்கிறது. அதில் "வாளைமீன் உகள. அஞ்சி. மைந்தரைத் தழுவுவாரும்" என்றொரு வரி வருகிறது. ஆற்றில் நீராடிக்கொண்டிருக்கும் பெண்கள் வாளை மீன்களுக்குப் பயப்படுவதுபோல நடித்து கணவரைத் தழுவிக்கொள்கிறார்கள். கணவரைத் தழுவுவதற்கு இதுவொரு பொய்க் காரணமாக அமைந்துவிடுகிறது. இதை வைரமுத்து மிகவும் அழகாக கிராமியச் சூழலுக்குள் புகுத்தியிருப்பார்.

"சேத்து மட தொறக்க, செவ்வால மீன் குதிக்க,
தாவி குதிச்ச மீனு, தாவணிக்குள் விழுந்துவிட
பாம்பு புகுந்ததுன்னு, பருவ பொண்ணு கூச்சல் இட
முறைமாமன் ஓடிவந்து முந்தானைக்குள் மீன் எடுக்க"


"தென்றலுக்குத் தெரியுமா தென்மாங்குப் பாட்டு" என்கிற பாடலுக்கு இந்த ஆரம்ப வரிகள் அழகு சேர்க்கிறது. இப்படி இன்னுமொரு பாடலும் இருக்கிறது.

ஏந்து பேர் அல்குல் நின்றும்
கற்றை மேகலைகள் நீங்கி.
சீறடி கவ்வ. ‘காலில்
சுற்றிய நாகம்’ என்று.
துணுக்கத்தால் துடிக்கின்றாரும்.

நீராடும்போது நிதம்பம்/ அல்குலிலிருந்து மேகலை கழன்று காலினைக் கவ்விக்கொள்ளுமாம். அதைக் காலில் சுற்றிய நாகம் என்று எண்ணிப் பெண்கள் பயந்துபோவார்கள் என்கிறார் கம்பன்.

“It was a spilt milk and broken teacup kind of romance.” என்பது  Michael Faudet கவிதையொன்று!

காமத்தில்(காதல்) குழல் அவிழ்வது, கண்மை, குங்குமம் எல்லாமே செம்புலப் பெயல் நீர் போல கலப்பது, வளை உடைவது, இறுக்கங்கள் எல்லாமே அழகு. இவையெல்லாம் காதல் மிகுதியால் விளைவது. காதலை மேலும் தூண்டக்கூடியது. இவற்றில் கவிதை காணமுடிந்தால் அன்பின் ஆழம் புலப்படும். "ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழல் அழகு. அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டு அழகு" என்பாரே வைரமுத்து! இவற்றுக்கெல்லாம் அப்போதுதான் அர்த்தம் பிறக்கிறது போலும்! யாரோ ரசிகர்கள்தான் இதையெல்லாம் படைத்திருக்கவேண்டும்.

குங்குமம் ஏன் சூடினேன்
கோல முத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன்
ஊடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு
கட்டில் மேலே நசுங்கத்தான். - வைரமுத்து

இதைக் கம்பன் ஒரு அழகான ஒப்பீடோடு எடுத்துரைத்திருப்பான். பொய்கையில் நீராடும் மகளிரைப் பார்க்க காதலரைக் கூடிய மகளிர்போல காணப்படுகிறதாம். எப்படி!
சிவந்த வாய்கள் வெண்மை நிறம் பெறுகிறது. வெள்ளைக் கண்கள் சிவப்பு நிறம் பெறுகிறது. உடலெங்கும் பூசியிருக்கும் சந்தனம் அழிந்து/கரைந்து போகிறது. ஆடைகள் எங்கும் நீர் ஊறி உடைகள் தளர்ந்து விடுகிறது. தனங்களிலே தொய்யில் வரையப்பட்ட பெண்கள் மூழ்கி எழும்போது காணப்படும் அறிகுறிகள் இவை. ஆகவே இந்த நீரும் காதல் மிக்க கணவரைப் போல லீலை செய்கிறது. நீர் அழுத்தமானது; அதேநேரம் மென்மையானது.

செய்ய வாய் வெளுப்ப. கண் சிவப்புற.
மெய் அராகம் அழிய. துகில் நெக.
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்.
பொய்கை. காதல் கொழுநரும் போன்றதே! - கம்பன்

நீர் செய்யும் லீலைகளை வைரமுத்து நிறையப் பாடல்களில் சொல்லியிருக்கிறார். அதில் "எங்கே என் புன்னகை" பாடலை சிறந்த மழைப்பாடல் என்றும் சொல்லலாம். நீரோடு பெண்மையின் உணர்வுகளை கலந்து யாரும் இப்படிச் சொல்லியதில்லை.

"மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது
என் ஆடை போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீர் செய்யும் லீலையை நீ செய்ய மனம் ஏங்குது" என்று எழுதியிருப்பார். அதன் பிறகு முதல்வன் பாடலில் "நீராக நான் இருந்தா உன் நெற்றியில நான் இறங்கி கூரான உன் நெஞ்சில் குதிச்சு அங்கு குடியிருப்பேன். ஆணா வீணாப் போனேன்." என அதற்கான பதிலை வைத்திருப்பார் .

இதையே கண்ணதாசன், "மடி மீது தலை வைத்து" என்கிற பாடலில்
" வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே" என்று எளிதாகச் சொல்லியிருப்பார்.

மேலும்
"மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே
பொழுது புலரும் அணைப்பிலே" - கண்ணதாசன்

இத்தனையும் கலைத்துவிட்டு, உன் தேவையெல்லாம் முடிந்ததும் விலகி உறங்காமல் பொழுது புலரும்போதும் அணைத்துக்கொள். அதில்தான் காதலின் மேன்மை \மென்மை இருக்கிறது என்று சொல்கிற வரிகள்.
காவியத் தலைவனில் "அல்லி வருகிறாள்" வருகிறாள் என்கிற பாடலில் கவிஞர் வாலி
"உங்க வாய் வெளுக்க இரு விழி சிவக்க காதல் நோய் தனை தரக்கூடும்" என இதே வரிகளைப் பயன்படுத்தியிருப்பார்.

கம்பன், பொய்கையோடு ஆடவரை ஒப்பிட்டிருப்பார். வைரமுத்து சற்று மேலே சென்று நீரோடு பெண்மையை ஒப்பிட்ட பாடல்தான் "நதியே நதியே" என்கிற பாடல்.

பெண்களின் மெல்லிய உணர்வை வைரமுத்துவின் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" பாடல் வரிகளை இன்னுமொரு உதாரணமாகக்  குறிப்பிடலாம்.

மணிகள் பதிக்கப்பட்ட மதுக்கிண்ணத்தை ஒருத்தி ஏந்தி நிற்கிறாள். அதில் நிலவின் வெள்ளை நிற ஒளிக்கற்றைகள் பாய்கிறது. அது கிண்ணத்தை நிறைத்திருப்பது போல தோன்ற அதைக் கள்ளென்று நினைத்து வாய்வைத்து உண்கிறாள். சுற்றியிருப்பவர்கள் தன்னை இகழ்வதுகண்டு மடமை உணர்ந்து நாணம் கொள்கிறாள்.

மணியின் வள்ளத்து. வெள்ளை
நிற நிலாக் கற்றை பாய.
நிறைந்தது போன்று தோன்ற.
நறவு என. அதனை. வாயின்
வைத்தனள்; நாண் உட்கொண்டாள்.

கள் உண்ண முன்பே மயக்கத்தை ஏற்படுத்துவதுபோலவே காதலும் மயக்கத்தை ஏற்படுத்தவல்லது. கம்பனின் பெண் ஏமாற்றம் கண்டு நாணம் கொண்டாள். ஆனால் வைரமுத்துவின் பெண் ஏமாந்துபோனால் நெஞ்சுடைந்து போவாள்.

"வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால்
உயிரை உடைப்பாள் ஒருத்தி"

இப்படி இலக்கியத்தைச் சரியாக உள்வாங்கிக்கொண்ட ஒருவனால் எத்தனை உயர்ந்த படைப்புகளையும் கொடுத்துவிடமுடியும்.

Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...