பறித்துக்கொண்ட அத்தனை உயர்வான மலர்களையும் சாமிக்கு வைத்துவிடும் ஓர் அழகிக்காக வாய்மூடி அழும் மொட்டுகளின் சலசலப்பில் உன் பெயர் கேட்கிறேன்.
உற்சவதேவி உனது தேக சுவாசத்தைக் கொண்டாடித் தீர்ப்பவைதான் மிச்சம் மீதமின்றிக் காலையில் நான் தரும் மென்முத்தங்கள்.
கொஞ்சம் கைகோர்த்து நட.
வானத்துக்கு மாதங்களை அடைமொழியாக வைக்கலாம். வஞ்சனையில்லாத மனிதரின் தெருக்களுக்குப் போகலாம்.
வானவில்லின் மிகுதி அரைவட்டம் தேடித் திளைக்கலாம்
வற்றாத நதியோடு ஓடி நாணலில் ஓய்வெடுப்போம்
கொஞ்சம் கைகோர்த்து நட...
உனக்காக நீல நிறக் கூழாங்கற்களை விழுங்கிய ஒருசில வெள்ளை நதிகள்கூட பார்த்து வைத்திருக்கிறேன்.அவசர யுகத்தின் சொந்தக்காரி போலே எங்கே ஓடுகிறாய்
செவி சாய்த்துக் கேட்டால் உனது காதோர வெப்பம் மட்டும் போதுமென்று சொல்லக்கூடும் என் இருதய அறைகள்.
அவள் குழலை மிருதுவாய்க் கொத்தாகப் பற்றுவது என்பது அத்தனை நகரும் இரவுகளையும் துயரங்களையும் தொகுத்துக் கவிதை சேர்ப்பது போன்றது.
காற்றும் முகராத விரலிடைப் பற்றுதல்கள் போதும். உன்னோடு உலாவுவது வெறும் எண்ணக்காடுகளாக இருந்தாலும் எனக்குச் சம்மதம்தான்.
Comments