கடவுளின் கையில் இருந்த ஈர்ப்பு அலைகள்!

11.2.2016 அன்று மனித வரலாற்றில் ஒரு மகத்தான கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஐங்ஸ்டைனின் ஈர்ப்பு அலைகளை நவீனத் தொழில்நுட்பத்தால் கண்டறிய முடிந்திருக்கிறது. ஐங்ஸ்டைன் தனது கோட்பாடுகளை முன்வைத்தபோது நிறையவே எதிர்ப்புகள் வந்தது . காரணம், அது மற்றவர்களின் சிந்தனைக்கு எட்டாமல் இருந்தது. அவர்களுக்கு ஒரு 'கிரியேட்டர்' என்பவர் சௌகரியமாகத் தோன்றினார். 

ஒரு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் போகலாம். ஈர்ப்புச் சக்தி இருக்கிறது என்பதை நியூட்டன் அப்போது நிரூபித்தார். ஆனால், அது எப்படி வேலை செய்கிறது என்பது நியூட்டனுக்குத் தெரியவில்லை. தெரியாத ஒன்றுக்கு 'கடவுள்' என்று பெயர்வைப்பது தானே வழக்கம். அவர், ஈர்ப்புச் சக்தியைப் பற்றி பென்ட்லிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், ஈர்ப்புச் சக்தியானது ஒருவித கிரியேட்டரினால் நிகழ்த்தப்படுகிறது என்கிற மாதிரியாக எழுதுகிறார். நியூட்டனுக்கு ஒரு கிரியேட்டர் தேவைப்பட்டது.

அதேநேரம், கிறிஸ்தவ அமைப்பின் உயர்பீடத்தின் கொள்கைகளை பென்ட்லி நிறைவேற்றி வருகிறார். கடவுள் மறுப்புக் கொள்கையை வெளியிடுபவர்களுக்கு எதிராக நியூட்டனின் இயற்பியலைப் பயன்படுத்துகிறார். நியூட்டனும் அதனை மேலும் வலுப்படுத்தும்படி அவருக்குக் கடிதங்கள் எழுதுகிறார். அப்படியே நேரமும் நிலையானது என்று சொல்லிவைத்தார் நியூட்டன். 

கிட்டத்தட்ட 200 வருடங்களாக,  ஈர்ப்புச் சக்தியானது கடவுளின் கையில் இருந்து வந்தது. நூறு வருடங்களுக்கு முன்னர், தனது சார்புக் கோட்பாட்டின் மூலம் அதனைக்  கடவுளின் கையிலிருந்து பறித்தெடுத்தவர் ஐங்ஸ்டைன். ஐங்ஸ்டைன் அதனை வெளியிட்டபோது யாருக்குமே புரியவில்லை. நீளம்,  அகலம், உயரம் என்கிற முப்பரிமாணங்களோடு நேரம் என்கிற நான்காவது பரிமாணத்தையும் இணைத்து 'காலவெளி'யை அறிமுகப்படுத்தினார். திணிவானது இந்தக் காலவெளியை வளைக்கும் என்றார்.இதனாலேயே ஈர்ப்பு விசை இருப்பதாகத் தோன்றுகிறது என்றார். அதிக திணிவு என்றால் அதிகமான ஈர்ப்பு விசை இருக்கும். பூமியை  விட சூரியனின் திணிவு அதிகம். ஆகையால்  சூரியனில் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். ஈர்ப்பு விசை அதிகமாக நேரமும் மெதுவாகச் செல்லும். 

இந்த ஈர்ப்பு அலைகளை எளிதில் அவதானித்துவிட முடியாது. அதனாலேயே நீண்ட காலமாக இது அவதானிக்கப்படாமல் இருந்தது. அதற்கு பிரபஞ்சத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழவேண்டும்.  அப்படியொரு நிகழ்ச்சி பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் நிகழ்ந்திருக்கிறது. 


சூரியனைவிட, கருந்துகளைகளின் திணிவு பன்மடங்கு அதிகமானது. கருந்துகளைகளின் ஈர்ப்பிலிருந்து ஒளிகூடத் தப்பிக்க முடியாது. இரண்டு கருந்துகளைகள் ஒன்றையொன்று மோதிக்கொண்டால் விளைவு எப்படி என்பதை ஊகிக்கமுடிகிறதா!. அப்போது உருவாக்கப்பட்ட அலைகளின் அசைவையே தொழில்நுட்பம் கொண்டு கண்டறிந்திருக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தின் அத்தனை செயற்பாடுகளுக்குமான விளக்கத்தைக்  கண்டறிவதே ஐங்ஸ்டைனின் கனவாக இருந்தது. இந்தக் கண்டுபிடிப்புகள் அதற்கு வழிவகுக்கும் என நம்பலாம்.

Comments

Popular posts from this blog

ராதாமோகனின் வேகமான பயணம் போகலாம் (எனது பார்வையில்)

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்

அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்