யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை, நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழாக் காலம் என்பது ஒரு மிகப்பிரமாண்டமான கொண்டாட்டக் காலம். யாழ்ப்பாணச் சமூகத்தின் பிரதான கலாச்சார விழாவாகவே ஆகிவிட்டது என்றுகூடச் சொல்லலாம். கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழாவானது, மொத்தமாக 27 நாட்கள் இடம்பெற்று, வைரவர் உற்சவத்துடன் நிறைவுபெறும். இன்றுவரை சரியான ஆகம விதிமுறைகளின்படி இடம்பெறும் தேர்த்திருவிழா இதுவென்றும் சொல்லலாம்.
தேரன்று, வெளிக்கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டு, ஒரு விடுமுறை தினம்போலவே காட்சியளித்தது. கோயிலிலிருந்து குறிப்பிட்ட அளவு தூரத்திலேயே வாகனங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கோயிலைச் சுற்றியுள்ள வீதியெங்கும் தண்ணீர்ப் பந்தல்கள் நிறுவப்பட்டிருந்ததோடு, எங்குபோனாலும் பக்திப் பாடல்கள்தான் காதுகளில் கேட்டவண்ணம் இருந்தது. கோயிலுக்குச் செல்லும் வீதியில், கலாச்சார ஆடைகளுடன் வரும்படி அறிவுறுத்தும் பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கலாச்சார ஆடைகளுடன் கோயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். முருகன் தேர் ஏறியதை மட்டும் பார்த்துவிட்டு ஒருசிலர் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் வீடிருப்பவர்கள் தேர் கோயிலைச் சுற்றி முடிப்பதற்குள் மீண்டும் வந்துவிடலாம் என்று செல்வதுண்டு. மக்கள் கூட்டம் வருவதும் போவதுமாக இருந்தாலும், கோயிலைச் சுற்றியுள்ள பிரம்மாண்டமான மக்கள் திரள் மட்டும் கால் வைக்க இடமின்றி அப்பிடியே இருந்தது. இப்படியாக, எல்லா மனித இயக்கங்களும் தேர்த்திருவிழாவை மையப்படுத்தியே இயங்கிக்கொண்டிருந்தது.
காலை ஏழு மணிக்கெல்லாம் முருகன் தேரேறிவிட, பெருந்திரளான மக்களும் அப்போதுதான் வந்துகொண்டிருந்தார்கள். எப்போதுமே தேரைச் சுற்றி இயங்கும் மக்கள் கூட்டம், 'அரோகரா' என்று சொல்லிகொண்டே வடம் பிடித்து இழுக்கிற இளைஞர் கூட்டம், கலாச்சார ஆடைகளில் நிறைந்திருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள், தேருக்கு முன்னால் வரும் காண்டாமணி ஓசை, முரசின் ஒலி, தேருக்குப் பின்னால் பஜனை பாடிச் செல்லுபவர்கள், அசையும் தேரின் சிறுமணியோசை, குழந்தைகளைத் தன் தோள்மீது இருத்திவைத்துக்கொண்டு தேர் காட்டும் அப்பாக்கள் என்று எல்லாமே ஒரு தேரின் அழகினைத் தீர்மானிக்கிறது. வடம் பிடித்து இழுக்கும்போது, தேரானது மக்கள் கூட்டத்தில் மிக மெதுவாக அசையும் அழகினை வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது. தேரானது புதிதாகக் கட்டப்பட்ட வடக்கு வாசலைக் கடக்கும்போது கோபுரத்திலிருந்து தாமரை இதழ்கள் கொட்டப்பட்டது. கோயிலைச் சுற்றித் தேர் செல்லும் வீதியெங்கும் மணலால் நிரப்பப்பட்டு இருந்தது. தேர் கோயிலைச் சுற்றி முடிந்ததும் கோயில் மணலில் இருந்து கதை பேசுகிற மக்கள் அழகு. குழந்தைகள், மணலில் கூம்பு வடிவம் அமைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒருசிலர் திருவிழாக் கடைகளை நோக்கி நகர்ந்துவிட்டனர்.
கோயில் வீதிக்கு வெளியே திருவிழாக் கடைகளுக்கென்று தனியான ஒருபகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அவற்றைக் கடக்கும்போது சிறுவயது நினைவுகள் வந்துபோவதைத் தடுக்கமுடியாது. திருவிழாக்கடைகள் என்றால் வளர்ந்தவர்களுக்கு வேண்டுமானால் அதிகளவு முக்கியமில்லாத பகுதியாகத் தோன்றலாம். ஆனால் சிறுவர்களைப் பொறுத்தவரை முழுத் திருவிழாவுமே அதுதான்.
Comments