ஒரு வரலாற்று நாவலின் இடையிலுள்ள சித்திரங்களைக் கற்பனையில் அடிக்கடி அசைத்துப் பார்த்திருப்போம். அவற்றுக்கு உருவம் கற்பித்த்திருப்போம். பார்க்காத உலகத்தைப் பார்க்கவேண்டும் என்கிற தீராத ஆசையின் விளைவு நம்மை அங்கெல்லாம் கொண்டுசெல்கிறது. அப்படியான நிமிடங்களைத் திரட்டி, கண்முன்னே கொண்டுவந்து நம்மை மகிழ்ச்சிப்படுத்துவது என்பது எளிதான காரியமாக இருக்க முடியாது. சோர்வு நம்மை நெருங்காது சொல்ல அந்த 'மேஜிக்' பிடிபடவேண்டும். இதனை வெற்றிகரமாகச் செய்துவிட்டாலே சரித்திரப் படங்கள் வெற்றிப்படங்களாகும். வசந்தபாலனின் காவியத்தலைவன் செய்த 'பிரம்மாண்ட மேஜிக்' அதுதான். இது ஒரு கலர்புல் கலையின் கரைதொட்ட சினிமா.
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில் தமிழ்நாட்டில் நிறைய நாடக சபாக்கள் இயங்கின. அந்த நாடக சபாக்களைச் சேர்ந்த நடிகர்களின் வாழ்க்கை முறையை காதல்,நட்பு, பாசம் போன்ற இயல்பான உணர்ச்சிகளோடு சொல்லும் திரைப்படம். இவை படத்துக்கு வெறும் ஆதாரம் மட்டும்தான். நலல் சினிமாவின் அழகைப் பார்த்துத்தான் உணரவேண்டும். நாடகங்களைப் பற்றி நிறையப் புத்தகங்கள் படித்தும், வேறு வழிகளில் தகவல்கள் திரட்டியும் இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார் என்பதை அவரின் பேட்டிகளை விட 'உழைப்பு' அதிகம் சொல்கிறது. ஒரு இடத்திலும் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்கிற கவனம் தெரிகிறது.
நடிப்பில் இயல்பான நடிப்பு, மிகை நடிப்பு என மாறுபட்ட விமர்சனங்கள் இன்றும்கூட நிலவுகிறது. ஆனால், இதுதான் நடிப்பு என எல்லோரும் ஒரே பாதையில் செல்லும்போது புதுமை காட்டி அதை மாற்றியமைப்பவன் மிகப்பெரிய நடிகன் என்பதைக் காட்சியமைப்புகள் நுணுக்கமாகப் பதிகின்றன. சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா, நாசர், தம்பி ராமையா என எல்லோரும் நடிப்பைச் சிறப்பித்திருக்கிறார்கள். நாடகக்காரர்களின் இயல்பு வாழ்க்கையும் அதிதீவிர உணர்ச்சிகள் நிறைந்ததாய் இருப்பதை நடிப்பில் கொண்டுவந்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் இன்னொரு வடிவம் மொழி. அவை பாடல்களாகவும் வசனங்களாகவும் முதிர்ச்சி பெறுகின்றன. கவிஞர் வாலி அவர்கள் அல்லி- அர்ஜுனா நாடகத்துக்கு எழுதிய பாடலில் மொழி கொஞ்சுகிறது. வாலியை நாமும் தமிழும் இழந்திருக்கவேண்டாம். அந்தப் பாடலும் காட்சியமைப்பும் லயித்துப் போகச்செய்யும். நாடக மொழிகளை அப்படியே கொண்டுவந்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். சில உணர்வுகள் தடுமாறும் மனித உறவுகளை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வசனங்கள் எளிதாய்க் கடத்திச் செல்கிறது. அதிலும் " தாலி கட்டிய தாசியாய் இருப்பதை விட, வெறும் தாசியாய் இருந்துவிட்டுப் போகலாம்" என்கிற வசனம் ஒரு புத்திசாலிப் பெண் பிழையான நோக்கத்துடனான ஒரு ஆணின் காதலை எப்படிச் சரியாக எடைபோடுகிறாள் என்பதை ஆழமாகச் சொல்லுகிற வசனம். காட்சிகளோடு பார்க்கும் போது அது உறுத்தலான வசனம் என்கிற எண்ணம் வராது. ஒரு எழுத்தாளரை தமிழ் சினிமா எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதைச் சொல்கிறார்.
சேர்க்கப்பட்டிருப்பது தெரியாமல் இயல்பில் இருப்பது, இழைந்துபோவது போலவே இருப்பதுதான் அழகினது வெற்றி. ஏற்கனவே குறிப்பிட்டது போல ரஹ்மான், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, ஆடை வடிவமைப்பாளர்கள்,ஜெயமோகன், வாலி எல்லோரும் வசந்தபாலனின் கற்பனையைக் கண்டுவிட்டவர்கள்.
இசையைப் பொறுத்தவரை நிறைய ஆண்டுகளுக்குப் பிறகு ரஹ்மானுக்கு தமிழ் சினிமா கொடுத்த பரிசு இந்தப் படம். பதிலுக்கு ரஹ்மானும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை திரைப்படத்தோடு நீங்கள் இசைந்துபோகும் பொழுதுகளில் உணர்வீர்கள்.
இது ஒரு சரித்திரப் படம் என்பதால் தீபங்களை வைத்தே காட்சிகளில் ஒளியைப் பேச வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா. குடிசைக் காட்சிகள், தூரக் காட்சிகளில் சரியான இடங்களில் வைக்கப்பட்ட தீபங்கள் அந்தந்த இடங்களை நிரம்பச் செய்கிறது. ஏராளமான காட்சிகள் இரவில் நகர்வது விஷுவல் ட்ரீட். 'ஹேய் மிஸ்டர் மைனர்' பாடலின் காட்சிப்படுத்தல்களில்(Low Angle, High Angle) உள்ள நேர்த்தி பாடலுக்கே மேலும் அழகு.
வண்ணங்களை விகிதாசாரம் கொண்டு அமைப்பதை நன்றாகச் செய்திருக்கிறார்கள். சரித்திரப் படங்களில் மிகவும் முக்கியமானது ஆடை வடிவமைப்பு. பாலாவின் பரதேசிக்கு ஆடை வடிவமைப்புச் செய்த நிரஞ்சனி அவர்கள் நாடகக் கதைக்களத்துக்கு ஏற்றபடி காட்சிகளை வண்ணமாக்கியிருக்கிறார்.
ஒவ்வொரு படங்களுக்கும் காலம் எடுத்துக்கொண்டு தயார்படுத்திக்கொள்ளும் வசந்தபாலனின் 'வெயில்' , ' அங்காடித்தெரு' போன்ற படங்களின் வரிசையில் இந்தப் படமும் தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களின் வரிசையில் வந்து அமர்ந்துகொள்ளும். நல்ல உழைப்பைத் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள்.
Comments