Skip to main content

மலரினும் மெலிது காமம் - ஞயம்பட உரை.




உலகினில் மென்மையானதும் உயர்வானதும் மலர். அந்த மலரிலும் மென்மையானது காமம். அத்தகைய உயர்வான காமத்திலிருந்து மென்மையை அகற்றிவிட்டால்  காமத்தில் உண்மையான மகிழ்ச்சி கிட்டாது. அவ்வின்பத்தைத் துய்க்க முடியாது. இதன் மென்தன்மை உணர்ந்து  முழுமையான பயன், நுட்பம், நயம் எல்லாவற்றையும் அறிந்து அனுபவிக்கக்கூடியவர்கள் சிலரே என்பது வள்ளுவன் கூற்று. அப்படிப்பட்ட உயர்வான காமத்தை ஞயம்பட உரைப்பது அவசியம். இதிலிருந்து தவறாதவை சங்க இலக்கியப் பாடல்கள்.

"மலரினும் மெல்லிது காமம் 
சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்" 

இரு உள்ளங்களின் முழுதான ஒத்திசைவு இல்லாதவரை காமம் நிறைவு காண்பதில்லை. அப்படி இரு உள்ளங்களின் ஒத்திசைவோடு நிகழ்கிற காமம் மட்டுமே நீடித்து நிலைக்கும். பொருந்தும் போதெல்லாம் ஒவ்வொரு தீண்டலிலும்  உயிர் தொடவேண்டும். காமம் என்பது, நூல்களைக் கற்கக் கற்க எப்படி அறியாமை எண்ணம் தோன்றுமோ அதுபோல தீராதது. பெருகிக்கொண்டே செல்லவேண்டும்.

"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் 
செறிதோறும் சேயிழை மாட்டு"

காம உணர்வு மிகவும் நுண்ணியது (ஐதே காமம்) என்கிறது ஒரு குறுந்தொகைப் பாடல். இந்தப் பதிவில்  'முயங்குதல்' என்கிற சொல் பற்றிப் பேசலாம். தழுவுதல், புணர்தல் அல்லது பொருந்துதல் எனும் பொருள் அனைத்தும் ஒருசேர அமைந்த சொல். இதை ஒரு குறிஞ்சிப் பாடல் மிகு காமத்தோடு சொல்கிறது. தலைவியுடன் கூடிவிட்டு வரும்  தலைவன், அவள் தந்த இன்ப மிகுதியைத் தன்  நெஞ்சுக்கு உரைப்பதாய் அமைகிறது இந்தப் பாடல்.

பலரறி வுறுதல் அஞ்சிப் பைப்பய
நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச்
சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கைக்
குறையறல் அன்ன இரும்பல் கூந்தல்
இடனில் சிறுபுறத் திழையொடு துயல்வரக்
கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து
உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை
இயல்கற் றன்ன ஒதுக்கினள் வந்து
பெயலலைக் கலங்கிய மலைப்பூங் கோதை
இயலெறி பொன்னிற் கொங்குசோர்பு உறைப்பத்
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்
வடிப்புறு நரம்பில் தீவிய மொழிந்தே.

போர் வெற்றியின்பின் ஒள்வாள் அமலை எனப்படும் வெற்றிக்கூத்து ஆடப்படுகிறது. அந்நேரம், இரவில் காதலர்கள் சந்திக்கும் இடத்தில் சந்தித்துக்கொண்டோம். யாரும் கண்டு புறங்கூறிவிடுவார்களோ என்று அஞ்சி மிக மெதுவாக அடியெடுத்து அவள் வந்தாள். நீரின் திரள் போல வந்தாள். வெள்ளியினாலான வளைவு பொருந்திய வளைகளைத் தன் கைகளில் அணிந்திருந்தாள். கருமணல் போன்ற கரிய கூந்தல் பிடரியில் அசைய வந்தாள். கடல் மீன்களும் உறங்கும் நள்ளென்ற சாமம். மிகுந்த அழகுடன் செய்யப்பட்ட பாவை போன்றவள், அப்போதுதான் நடக்கக் கற்றுக்கொண்டவள் போல வந்தாள். 

மழையால் அலைக்கப்பட்ட மலைப்பூக்களைப் போலப் பதமாகவும், கொல்லன் உலைக்களத்தில் நின்று அடிக்கையில் தெறித்து விழும் பொன்தூளைப் போலவும், தேன்துளி சிந்த, யாழின் நரம்பிலிருந்து வரும் ஒலிபோல் இனிய மொழிகளைக் கூறிக்கொண்டே தன் மார்பின் கண்கள் இவன் நெஞ்சில் அழுந்தும்படி அழுத்தி அணைத்துக்கொண்டாள்.

"தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்"

Comments

ANNAI KURAL said…
மலரினும் மெல்லிய காமம்
அனிச்சம் மலர் அன்ன பறவை
கலிங்கத்து பரணி தொடங்கி
யுகபாரதி வரை . . . . .
அருமை
சங்க இலக்கியம் கற்போம் .....

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ